நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தலைசிறந்த மாணவர்க்கான லீ குவான் யூ விருதை இந்த ஆண்டு பெற்ற நால்வரில் கங்குலா கார்த்திக், ரோஹன் செந்தில் இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள். இருவரும் 4.0 புள்ளிகளுடன் (GPA) உன்னத தேர்ச்சியுடன் புத்தாக்கம், தொழில்நுட்பம், சமூக சேவை எனப் பலவற்றிலும் சிறந்து விளங்குபவர்கள்.
தலைசிறந்த ஏட்டுக்கல்வித் தேர்ச்சியுடன், பிற துறைகளிலும் சிறப்புற்றிருக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மதிப்புமிக்க லீ குவான் யூ விருது வழங்கப்படுகிறது.
பொதுச் சேவையில் புதிய நிறுவனங்கள்- ரோஹனின் இலக்கு
இணையப் பாதுகாப்பு, மின்னிலக்க தடயவியல் துறைகளில் பட்டயம் பெற்றுள்ள 19 வயது ரோஹன் செந்தில், லீ குவான் யூ விருதுடன், நீ ஆன் கொங்சி பல்திறன் சாதனை விருதையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
வெளிநாட்டில் பட்டக் கல்வியை மேற்கொள்வதற்கான ‘பிஎஸ்சி’ பொறியியல் உபகாரச் சம்பளமும் இவருக்குக் கிடைத்துள்ளது.
கல்லூரியில் ‘தொழில்நுட்ப தொழில்முனைவு’ மன்றத்தை அமைத்த ரோஹன், அதன் இணைச் செயலாளராகப் பல மாணவர்களை வழிநடத்தியுள்ளார். அவர்களை, தொழில்முனைவர்களான முன்னாள் மாணவர்களுடன் இணைத்து, ஓராண்டில் நான்கு புதிய நிறுவனங்கள் தொடங்க அவர் வித்திட்டார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மோசடிகளைத் தவிர்க்கும் விராஜ் என்ற தளத்தையும் ரோஹன் நிறுவியுள்ளார். அரசாங்கத்தோடு இணைந்து பணிபுரியும் எழுவரைக் கொண்ட குழுவாக விராஜ் வளர்ச்சி பெற்றுள்ளது.
“எளிதான வேலைகளை மட்டும் குழுவினருக்கு கொடுக்காமல், அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்துச் சிரமமான பணிகளிலும் ஈடுபடுத்துவது முக்கியம். அவ்வாறு செய்யும்போது அது அவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். தனிமனிதராக நான் செய்யும் பணிகளுக்கும் தலைவராக மற்றவர்களை ஊக்குவிக்கவும் இது உதவும்,” என்று தலைமைத்துவம் பற்றிய தனது அனுபவத்தை ரோஹன் பகிர்ந்துகொண்டார்.
புதிய நிறுவனங்களைப் பொதுச்சேவையில் ஈடுபடுத்துவதே ரோஹனின் குறிக்கோள்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு வழி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விழையும் கார்த்திக்
பயன்முறை செயற்கை நுண்ணறிவு, பகுப்பாய்வு துறைகளில் பட்டயப் படிப்பை முடித்துள்ள கங்குலா கார்த்திக், செயற்கை நுண்ணறிவு மூலம், உலகில் இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் எனும் இலக்கைக் கொண்டுள்ளார்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு தன்னார்வக் குழுவின் தலைவராக 300 உறுப்பினர்களை வழிநடத்தியுள்ள கார்த்திக், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு குறித்த பயிலரங்குகள் உள்ளிட்ட பல திட்டப்பணிகளை முன்னெடுத்து தலைமை தாங்கியுள்ளார்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் யொங் லூ லின் மருத்துவப் பள்ளியில் மேற்கொண்ட வேலைப் பயிற்சியின்போது, இரைப்பை புற்றுநோயின் வளர்ச்சியை முன்கூட்டியே அறிந்துகொள்ளக்கூடிய ஓர் மாதிரியைக் கார்த்திக் உருவாக்கினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவுத் துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ள இவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
“செயற்கை நுண்ணறிவில் என் அனுபவத்தை விரிவடையச் செய்வதும் மற்றத் துறைகளை ஆராய்வதுமே பல்கலைக்கழகத்தில் என் இலக்கு,” என்றார் அவர்.