பல்வேறு திறன்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்த தேசிய முகாம்

பல்வேறு திறன்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்த தேசிய முகாம்

2 mins read
c87a16dc-cc0b-47a3-a152-c42a82afe1dd
தேசிய முகாம் 2026ன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

இவ்வாண்டிற்கான தேசிய முகாமில் ஒன்பது சீருடைக் குழுக்களைச் சேர்ந்த 454 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மொத்தம் 121 பள்ளிகளிலிருந்து வருகை தந்திருந்த உயர்நிலை இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவர்கள், ‘தலைமைத்துவம், சேவையின்வழி ஒற்றுமை’ என்ற கருப்பொருளைக் கொண்ட முகாமில் துடிப்புடன் பங்கேற்றனர்.

சிறுவர் படை, சிறுமியர் படை, சாரணர் படை, சாரணியர் படை, தேசிய மாணவர் படை, தேசிய குடிமைத் தற்காப்பு மாணவர் படை, தேசிய காவல்துறை மாணவர் படை, இளையர் செஞ்சிலுவைச் சங்கம், செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படை ஆகிய ஒன்பது சீருடைக் குழுக்களுடன் சிங்கப்பூர் இளவிமானிகள் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆகஸ்ட் 18 முதல் 21 வரை உள்துறைக் குழுப் பயிற்சிக் கழகத்தில் நடந்த முகாமில் பங்கெடுத்தனர்.

சிங்கப்பூர் சீருடைக் குழு மாணவர்களுக்குப் பிற நாடுகளின் சீருடைக் குழுக்களைக் குறித்த புரிதல் ஏற்பட ஹாங்காங் குடிமை உதவி சேவை மாணவர் படையைச் சேர்ந்த 20 மாணவர்களும் இவ்வாண்டின் முகாமில் கலந்துகொண்டனர்.

ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற முகாமின் தொடக்க விழாவில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தாமும் தொடக்கப் பள்ளியில் சிறுவர் படை, உயர்நிலைப் பள்ளியில் தேசிய காவல்துறை மாணவர் படை என சீருடைக் குழுக்களில் இருந்ததாகவும் இன்று தம்மை வழிநடத்தும் பல்வேறு விழுமியங்களையும் திறன்களையும் அவை தமக்குக் கற்பித்ததாகவும் திரு டெஸ்மண்ட் தமது உரையின்போது குறிப்பிட்டார்.

“மிக வேகமாக மாறிவரும் உலகில் தொடர்ந்து தழைக்க தலைமைத்துவம், குழு ஒற்றுமை, தொடர்புத்திறன், புதிய சூழல்களுக்கும் சவால்களுக்கும் எளிதில் பழகிக்கொள்ளுதல் ஆகிய திறன்கள் அவசியம். அவற்றை இத்தகைய முகாம்களில் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிட்டுகிறது,” என்றார் அவர்.

முகாமில் பங்கேற்ற நீ ஆன் உயர்நிலைப் பள்ளி சாரணர் படையைச் சேர்ந்த ராகேஷ் கனகராஜா, 15, தமக்கு அம்முகாம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததெனக் கூறினார்.

“முகாமில் பங்கெடுத்தது அர்த்தமுள்ளதாக இருந்தது. எனது சீருடைக் குழு மட்டுமன்றி, பிற குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கற்றுக்கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது,” என்றார் அவர்.

குழுவினரின் பலம், பலவீனங்களை அறிந்து பணிகளைப் பிரித்துக் கொடுப்பது, தொடர்புத்திறன் போன்ற பல்வேறு முக்கியத் திறன்களை முகாமில் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றைத் தமது பள்ளியின் மற்ற சாரணர் படையினருடன் பகிர்ந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார்.

எதிர்காலத்தில் தமது பள்ளியின் மற்ற மாணவர்களையும் தேசிய முகாமிற்குச் செல்ல ஊக்குவிக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

முதன்முறையாக 1989ல் முன்னாள் கல்வி மூத்த துணை அமைச்சர் டாக்டர் டே எங் சூனால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய முகாம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

கல்வி அமைச்சு, காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை ஆகிய மூன்று அமைப்புகளின் அதிகாரிகள் அடங்கிய உள்துறைக் குழு இவ்வாண்டின் முகாமை ஏற்பாடு செய்தது.

சீருடைக் குழு ஆசிரிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 100 பேர் முகாமில் தொண்டூழியர்களாகப் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்
சீருடைமுகாம்மாணவர்கள்