எதிர்காலத்தில் தொழில்நுட்பத் துறையில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறார், செயற்கை நுண்ணறிவில் அதிக ஈடுபாடு கொண்ட 14 வயது ராம்குமார் ஷ்வேதா.
போவன் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் ஆண்டில் பயிலும் இவர், இவ்வாண்டின் தேசிய இளையர் தொழில்நுட்பப் போட்டியில் மாணவிகளைக் கொண்ட ஒரே குழுவை வழிநடத்தினார்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் கூகல் கிளவுட் நிறுவனமும் இணைந்து ஜூன் 29 முதல் ஜூலை 19 வரை உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்திய தேசிய இளையர் தொழில்நுட்பப் போட்டி, செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டிருந்தது. கூகல் கிளவுட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகளைப் பயன்படுத்தி ஆளில்லா வானூர்திகளை இயக்கி, பறக்க வைப்பது எப்படி என்பதை இப்போட்டி கற்றுக்கொடுத்து மாணவர்களின் திறன்களையும் சோதித்தது.
இவ்வாண்டின் போட்டியில் சுமார் 300 மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டின் போட்டியுடன் ஒப்பிடுகையில், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 30% அதிகரித்திருந்தது.
‘நமது தெம்பனிஸ் நடுவத்தில்’ ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றில் மாணவர்கள் குழுக்களில் தாங்கள் சொந்தமாக உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுக் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஆளில்லா வானூர்திகளைப் பல்வேறு சவால்களையும் தடைகளையும் கடந்து செல்லும் வகையில் இயக்கினார்கள்.
வெற்றியாளர்களுக்குத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திலும் கூகல் கிளவுட் நிறுவனத்திலும் ஒரு வாரம் பணிபுரிந்து, பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கலந்துகொண்டார்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 13 குழுக்களில் ஷ்வேதாவின் குழுவும் ஒன்று.
தொடர்புடைய செய்திகள்
தனது பள்ளியின் தகவல்தொடர்பு இணைப்பாட நடவடிக்கையின் தலைவராகச் செயல்பட்டுவரும் ஷ்வேதா, இரண்டாம் ஆண்டாக இப்போட்டியில் பள்ளியின் குழுத் தலைவராகப் பங்கேற்றார்.
“கடந்த ஆண்டு, நான் எனது குழுவின் மூத்த மாணவர்களை நம்பியிருந்தேன். ஆனால், இவ்வாண்டு உயர்நிலை 1 முதல் 3 மாணவர்களைக் கொண்ட என் குழுவில் மூத்த மாணவி நான் என்பதால் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்தேன். என் குழுவினருக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ முயற்சி செய்தேன்,” என்று அவர் சொன்னார்.
செயற்கை நுண்ணறிவிலும் தொழில்நுட்பத்திலும் ஷ்வேதா சிறுவயதிலிருந்தே கொண்டுள்ள ஆர்வம், தன்னுடைய பெற்றோரால் ஏற்பட்டது என்று அவர் கூறினார். குறிப்பாக பொறியியல், செயற்கை நுண்ணறிவு துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தன் தந்தையின் ஊக்கத்தினால்தான் இப்போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தார் ஷ்வேதா.
போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும், தனது குழுவின் முயற்சிகளைக் கண்டு பெருமிதம் கொண்டதாகவும் ஒவ்வொரு குழுவினரும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகச் சாதிக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டதாகவும் சொன்னார் ஷ்வேதா.
“செயற்கை நுண்ணறிவைச் சரியாகப் பயன்படுத்தினால் மனிதர்களின் நேரத்தை மிச்சப்படுத்த அதனைக் கொண்டு பலவிதமான பணிகளையும் செய்ய முடியும்,” என்றார் ஷ்வேதா.
இப்போட்டியில் பெற்ற அனுபவத்தைத் தனது போர்ட்ஃபோலியோவில் இணைத்து, பலதுறைத் தொழிற்கல்லூரிக்காக முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கைப் பயிற்சியில் அதைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
கணினியியலில் பட்டம் பெற்று, எதிர்காலத்தில் கணினி விளையாட்டு வடிவமைப்பாளராகப் பணிபுரிய விரும்புவதாக ஷ்வேதா தெரிவித்தார்.

