தந்தையின் பாதையில் பீடுநடை போடும் சமையற்கலைஞர்
உணவகச் சேவைப் பிரிவில் ஐவருடன் போட்டியிட்டார் 21 வயது தேவ் ராஜ் சிங். விருந்தினர்களை உபசரித்த விதத்தாலும் உணவை அறிமுகப்படுத்திய முறையாலும் அவர் வெண்கலப் பதக்கத்தையும் $1,000 ரொக்கத்தையும் வென்றார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சமையற்கலை, உணவு விநியோகத் துறை மாணவரான அவர் சிறுவயதுமுதல் தன் வீட்டின் சமையலறையில் பெற்ற அனுபவம் போட்டியில் வெற்றியை ஈட்டித் தந்தது.
தேக்கா நிலையத்தில் உணவுக்கடை நடத்திய தந்தையிடமிருந்து வீட்டிலேயே பலவகையான உணவுகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டார் தேவ்.
“சொந்தமாக மெக்சிக்கன் உணவகத்தைத் தொடங்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது,” என்றார் தேவ்.
தொழிற்கல்லூரியின் பாடத்திட்டம் வழியாகக் கிடைத்த பயிற்சியும் தொழிற்கல்லூரியில் உள்ள உணவு, பானக் கடைகளில் வேலை செய்த அனுபவமும் போட்டியில் கலந்துகொள்ள இவரை உந்தின.
ஊடுருவிகள் மனப்போக்கைப் புரிந்துகொண்டு தற்காக்கும் திறன்
சிறுவயதில் இணைய விளையாட்டுகளை விளையாடிய ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் அமன்வீர் சிங் அவற்றில் பொருள்களை வாங்குவதற்காகப் பெற்றோரிடம் பணம் கேட்டபோதெல்லாம் அவர்கள் பணத்தை விளையாட்டுகளில் வீணாக்கக் கூடாது என மறுத்துவிடுவார்கள். அப்போதுதான் விளையாட்டையே ஏமாற்றி பொருள்களைப் பெறுவதற்கு வழிகள் உண்டு என உணர்ந்தார் அமன்வீர்.
உலக அளவில் இணைய அச்சுறுத்தல்களை விடுக்கும் ‘அனோனிமஸ்’ குழுவின் திறன் அவரை வியப்பில் ஆழ்த்தியது. அதனால் உயர்நிலைப் பள்ளி நாள்களில் நேரம் கிடைத்தபோதெல்லாம் கணினிக் கூடத்துக்குச் சென்று நிரலாக்கத்தைக் (programming) கற்றார்.
“எப்படி இணைய ஊடுருவல் (hacking) செய்கிறார்கள் என்பதையும் கற்க விரும்பினேன். கெட்ட எண்ணத்தில் அல்ல. அத்தகையோரின் மனப்போக்கைப் புரிந்துகொண்டால்தான் அவர்களிடமிருந்துத் தற்காத்துக்கொள்ள முடியும்,” என்றார் அமன்வீர்.
தன் திறனால் ஆசிரியர்களைக் கவர்ந்த அமன்வீர் உலகத்திறனாளர்கள் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மென்பொருள் கட்டமைப்புகளைத் தயாரிப்பது, பாதுகாப்புப் பற்றாக்குறைகளைக் கண்டுபிடிப்பதுடன் மற்ற குழுக்களை ஊடுருவுவதும் ஊடுருவலிலிருந்து தற்காப்பதும் சவால்களாக இடம்பெற்றன.
வெற்றிபெறாவிட்டாலும் இப்போட்டி அவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.
தொழில்நுட்பத்தில் திறன் காட்டிய ஹிரேஷ்
சவால்களை அதிகம் விரும்புபவர் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ஹிரேஷ் பாண்டியன், 19. அவர் களமிறங்கியது ‘ரோபோட்டிக்ஸ்’ பிரிவில். போட்டியின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான இயந்திரங்களை உருவாக்கி அசத்தினார் ஹிரேஷ்.
முதல் நாள் போட்டியில் வெவ்வேறு பொருள்களைக் கண்டறிந்து சரியான பெட்டிகளில் போடும் இயந்திரக் கையை அவர் உருவாக்கினார். இரண்டாவது நாள், எதிலும் இடித்து நிற்காமல், நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் இயந்திரத்தையும் மூன்றாவது நாள் வெவ்வேறு அளவில் உள்ள பந்துகளை வகைப்படுத்தும் இயந்திரத்தையும் ஹிரேஷ் உருவாக்கினார்.
போட்டிக்கெனக் கணினி நிரலாக்க மொழிகளைக் கற்ற ஹிரேஷ், “இதற்குமுன் அவற்றில் எனக்குப் பெரிய நாட்டம் இருக்கவில்லை. இப்போது பிடித்திருக்கிறது,” என்றார்.
பரிவுடன் புத்தாக்கம்
தாதிமைத் துறையில் எழும் சவால்களை எப்படிக் கையாள்வது என்பதை உலகத்திறனாளர் போட்டியில் வெளிப்படுத்தினார் தொழில்நுட்பக் கல்விக் கழகத் தாதிமைத் துறை (கிழக்குக் கல்லூரி) மாணவர் சவித்தா விக்கிரமன், 18.
‘நைட்டெக்’ படிப்பை முடித்துள்ள அவர், போட்டியின் மூன்று நாள்களில், தாதிகள் எதிர்கொள்ளும் ஒன்பது சூழல்களுக்கான புத்தாக்கத் தீர்வுகளை முன்வைத்தார்.
ஒவ்வொரு சூழலுக்கான தீர்வையும் 40 நிமிடங்களுக்குள் வெளிப்படுத்துவதுதான் போட்டி.
அதில் மறதிநோய் உள்ளோர் அவசர மருத்துவ உதவி எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள எதுகை மோனையுடன் பாடலைப் பாடியது, நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த பராமரிப்பை வழங்கியது போன்றவற்றில் சவித்தா திறன் காட்டினார்.
நுரையீரலில் புற்றுநோயால் வலுவிழந்த நோயாளிக்கு அடிப்படைப் பராமரிப்பு வழங்கியது, தசை வலுவிழப்பு நோய் (muscular dystrophy) உள்ளோருக்குச் சக்கர நாற்காலியில் வேலைக்குச் செல்வதைக் கற்பிப்பதும் சவித்தா போட்டியில் கையாண்ட சில சூழல்கள்.
துறைசார்ந்த தொடர்புகள்
சீனாவில் ஒரு நிலநடுக்கம். மருத்துவ உதவிப் பொருள்களைச் சிங்கப்பூரிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் திரட்டி விரைவாக அங்கு அனுப்ப வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலை எப்படிக் கையாள்வது என்பதை எடுத்துக்கூறினார் ஏற்றுமதி - இறக்குமதிப் பிரிவில் பங்கேற்ற நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் நிக்கில் மிஷ்ரா, 19.
சிங்கப்பூரிலிருந்து அசர்பைஜானுக்குப் பொருள்களை அனுப்புவது போன்ற சூழல்கள் நிக்கிலிடம் கொடுக்கப்பட்டன.
விரைவான நேர அட்டவணைகளைக் கண்டறிந்து விரைவான கப்பல், விமானப் போக்குவரத்துப் பாதைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார் நிக்கில்.
இணையத் திறன்கள்
‘மேகக் கணிமை’ப் பிரிவில் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் நெசையா தியோடோர் போட்டியிட்டார்.
நிறுவனத்தைப் பற்றிய ரகசியத் தகவல்கள் வெளியாவதைத் தடுக்கும் வகையில் வெளிப்புறப் பயனாளர் அணுகலைத் தவிர்க்க, குறிப்பிட்ட கொள்கைகளை அவர் மாற்ற வேண்டியிருந்தது. அபாயங்களைச் சில நிமிடங்களிலேயே கண்டுபிடிக்க அவர் அமேசான் இணையச் சேவைகளைப் பயன்படுத்தினார்.
“என் பள்ளியில் சக போட்டியாளர்களுடன் நேரக் கட்டுப்பாடுடன் பல தேர்வுகளை எழுதி இதற்காகப் பயிற்சிசெய்தோம். இப்போட்டியைத் தொடர்ந்து, என் துறையில் சிறந்து சாதிக்க விரும்புகிறேன்,” என்றார் நெசையா தியோடோர்.
கைத்தொலைபேசிச் செயலிகள் பிரிவில் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் பெரக்கம் ஜெயாதித்யா தங்க விருதும் $3,000 ரொக்கமும் வென்றார். இணையப் பாதுகாப்புப் பிரிவில் அஷ்வின் ஃபிரான்சிஸ் ஜோசஃப், டான் சுவான் சியன் இருவருடனான தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் குழு வெள்ளி விருதும் $3,000 ரொக்கமும் வென்றது.