என்டியுவில் மண்மணக்கும் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

என்டியுவில் மண்மணக்கும் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

2 mins read
901a962b-6944-46e1-9a86-83120bd74154
என்டியு தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம். - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா
Google News Preferred Icon

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா, சனிக்கிழமை ஏப்ரல் 4ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

என்டியு பாடகர் குழு.
என்டியு பாடகர் குழு. - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

அதில் என்டியு மாணவர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிம் பல்கலைக்கழகம், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுடன், தமிழா அமைப்பைச் சேர்ந்த இளையர்களும் கலந்துகொண்டனர். 

விழாவில் கிராமிய விளையாட்டுகள், பாரம்பரிய உணவுகளைச் சுவைத்து அதன் மூலப்பொருள்களைக் கண்டறியும் போட்டி, கோலம் வரையும் போட்டி போன்ற பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன.

நிகழ்கலைகளும் அங்கங்களாக இடம்பெற்றன. என்டியு தமிழ் இலக்கிய மன்றக் குழுவினரின் நடனத்தோடு ‘என்டியு ஓப்பன் மைக்’ (NTU Open Mic) அங்கத்தில் ‘அடேங்கப்பா 5 பேரு’, ‘ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்கள்’ உள்ளிட்ட குழுக்களின் படைப்புகள் மேடையேறின.

விழா இளையர்களிடையே தமிழ்ப் பண்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பாலமாய்த் திகழ்ந்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையர்கள் கூறினர்.

உயர்நிலைப் பள்ளிக்குப் பின்னர் தமிழ் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு குறைவு என்பதால் இளையர்களுக்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் விஷாலினி, 21, தெரிவித்தார்.

மாணவர்களின் மேடை அச்சத்தைப் போக்கி, அவர்களின் திறன் வெளிப்பாட்டுக்கு இந்நிகழ்ச்சி தளம் அமைத்ததாக சிம் பல்கலைக்கழகத்தின் தமிழ் இளையர் சங்கத்தைச் சேர்ந்த தேவகி சுகுமாறன், 23, தெரிவித்தார்.

“குறிப்பாக, தமிழ்ப் பாடல்களுக்கு இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் தருகிறது,” என்று அவர் கூறினார்.

இரண்டு வாரங்களாகப் பயிற்சி எடுத்த தங்கள் குழு, முதன்முறையாக நாட்டுப்புறப் பாடலுக்கு முழுமையாக நடனமாடியது புதுமையாக இருந்ததாய்த் தமிழா அமைப்பின் நடனக் குழுவைச் சேர்ந்த வருண் செல்வராஜ், 22, கூறினார்.

பிற மாணவ அமைப்புகளிடமிருந்து புதிய சிந்தனைகளை அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி உதவியதாகவும் தமிழா அமைப்பின் செயலாளர் மோனிகா, 23, குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்