தாதியராகப் பணியாற்றும் துர்காதேவி சந்திரமோகன், 32, தமது வேலையின் மேன்மையைப் புரிந்தகொண்டதால் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அத்தனையும் சமாளித்து வருவதாகக் கூறுகிறார்.
2018 முதல் அலெக்ஸான்ட்ரா மருத்துவமனையில் செயலாற்றும் துர்கா, சிறப்புமிகு தமது சேவைக்காக டான் சின் துவான் தாதிமை விருதைப் பெற்றார்.
கூ டெக் புவாட் மருத்துவமனையில் நவம்பர் 21ல் நடைபெற்ற விருது நிகழ்ச்சியின்போது கெளரவிக்கப்பட்ட 12 தாதியர்களில் துர்காதேவியும் ஒருவர்.
விருது பெற்ற உவகையுடன் தமிழ் முரசுக்குப் பேட்டி அளித்த துர்காதேவி, எட்டு வயதாக இருந்தபோது தாதி ஆக ஆசைப்பட்டதாகக் கூறினார்.
“அப்போது உயிருடன் இருந்த என் பாட்டி அந்த வயதிலேயே எனக்கு ஊக்கம் தந்தார். வயதானோர் மீது எனக்கு இயல்பாக உள்ள பாசத்தைக் கண்டு இந்தத் தொழில் எனக்குப் பொருந்தும் எனக் கருதினார்,” என்று அவர் கூறினார்.
முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தை உணர்வதுடன் பிறருக்கும் சில நேரங்களில் அறியாமல் துன்பம் தருகின்றனர். தன்னை மறந்த நிலையில் இருக்கும் அத்தகைய முதியவர்களுமே அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்கள் என்பதைத் தெரிவிக்க விரும்புவதாக துர்கா கூறினார்.
சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொல்வது, கேட்ட கேள்விக்குச் சரியான விடை தராதது, சம்பந்தமில்லாமல் வேறொன்றைப் பேசுவது, சில நேரங்களில் கோபப்பட்டுக் கூச்சலிடுவது போன்ற பண்புகளால் முதுமை மறதி நோயாளிகள் மீது சொந்த குடும்பத்தினரே எரிச்சல் அடைவது உண்டு.
வருத்தமும் கோபமும் மனித இயல்பே என்றாலும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் சிந்தனைகளை உயர்த்திச் செயல்பட துர்கா உறுதி பூண்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
நம் பணியை நாம் மதித்து நடக்கும்போது உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு நடந்துகொள்ள முடியும். தொடக்கத்தில் எனக்குச் சிரமமாக இருந்தபோதும் மேலாளர்களிடமும் சக ஊழியர்களிடமும் அறிவுரை பெற்று என்னைப் பண்படுத்திக் கொண்டேன், என்று திருவாட்டி துர்கா கூறினார்.
வாக்குவாதத்திற்கான சிறு பொறிகள் தென்படும்போதே உடனடியாக அனைவரையும் சாந்தப்படுத்தும் உத்திகள் சிலவற்றைப் பயன்படுத்துவதாக துர்கா கூறுகிறார். “உற்றாரைப் பற்றியோ தொலைக்காட்சி அல்லது திரைப்படத்தைப் பற்றியோ பேசுவேன். உணர்வுகள் பொங்கும் நேரத்தில் அவர்களது மனங்களைத் தற்காலிகமாகத் திசைதிருப்பி சாந்தப்படுத்துவது ஒரு வழியாகும்,” என்று அவர் கூறினார்.
தொழிலின் விதிமுறைகளைப் புரிந்து நடந்துகொள்ளும் துர்கா, சிக்கலான விவகாரங்களைத் துல்லியத்துடன் கையாள்வதாக விருது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அடிக்கடி திறன்களைப் புதுப்பித்து சக ஊழியர்களுடன் கற்றவற்றைப் பகிர்வதன் வழி, தம் துறையில் நேரும் அண்மை மாற்றங்களை விரைவில் அறிந்து நடப்பவராக அவர் உள்ளார்.
சொந்த நேரத்திலும் அவர் கல்வி நிலையங்களிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சமூகச் சேவையை ஆற்றுகிறார். கணவரும் ஒரு பிள்ளையும் உள்ள துர்க்கா, மற்றொரு பிள்ளைக்கும் தாயாகப் போகும் துர்கா, அன்பார்ந்த உள்ளங்களுடன் தமது வெற்றியைக் காெண்டாடுவதை எண்ணி மகிழ்கிறார்.

