எல்லை தாண்டிய சிந்தனையும் பண்பாட்டுப் பிணைப்பும்

எல்லை தாண்டிய சிந்தனையும் பண்பாட்டுப் பிணைப்பும்

4 mins read
என்யுஎஸ் கல்லூரி இளம் பட்டதாரிகள் இருவர்க்கு விருது
46f94db6-dff5-41fe-aaf7-9a660b5655c6
(வலமிருந்து) என்யுஎஸ் கல்லூரி கல்வியாளர் முனைவர் முஸ்தஃபா இஸ்ஸுடின், சிங்கப்பூர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த திரு சையத் ஜியா ஹைதர், திரு ஜார்ஜ் ஆபிரகாம் ஆகியோருடன் ‘சையத் அகமது கான் ஏஎம்யு’ நினைவுப் பரிசைப் பெற்ற 23 வயது மதிவாணன் திவ்யா. - படம்: முஸ்தஃபா இஸ்ஸுடின்
multi-img1 of 2
Google News Preferred Icon

உலகில் பிளவுகளும் முரண்பாடுகளும் அதிகரித்துவரும் வேளையில், எல்லைகள், துறைகள், சமூகங்களைக் கடந்து பிணைப்புகளை உருவாக்குவது முன்னெப்போதையும்விட முக்கியத்துவம் பெற்றுள்ளது.

என்யுஎஸ் கல்லூரியின் 2026ஆம் ஆண்டு பட்டதாரி மாணவர் தொகுதியைச் சேர்ந்த காஷ்வி ராஜ், மதிவாணன் திவ்யா ஆகிய இருவரின் கற்றல் பயணத்தை இத்தகைய உன்னத நோக்கமே வடிவமைத்தது. அதுவே அவர்களுக்குக் கல்லூரியின் உயரிய விருதுகளையும் பெற்றுத் தந்தது.

திவ்யாவுக்குப் பயிற்றுவித்தவரும் காஷ்வியைப் பரிந்துரைத்தவருமான கல்லூரிப் பேராசிரியர் முனைவர் முஸ்தஃபா இஸ்ஸுடினின் வழிகாட்டுதலால் பிணைக்கப்பட்டுள்ள இவ்விரு இளம்பெண்களும், தங்களைத் தாண்டி சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

துயரங்கள் நிறைந்த உலகின் சுமையைத் தாங்குதல்

உலகளாவியப் பூசல்கள் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்திருக்கும் இந்நாள்களில், அவற்றால் ஏற்படும் துயரங்களை எதிர்கொண்டு, நன்மையைச் செய்யத் துணிவதே உண்மையான உலகளாவியக் குடிமகனின் அடையாளம் என்கிறார் 22 வயது காஷ்வி ராஜ்.

டியுபிங்கன் நகரில் காஷ்வி ராஜ், 22.
டியுபிங்கன் நகரில் காஷ்வி ராஜ், 22. - படம்: காஷ்வி ராஜ்

“இருவழித் தொடர்புகள் அதிகரித்திருந்தாலும் உலகம் மேலும் பிளவுபட்டு வருவது போன்றே தோன்றுகிறது,” என்றார் உலகளாவிய ஆய்வுகள் துறையில் முதன்மைச் சிறப்புத் தேர்ச்சியுடன் அண்மையில் பட்டம் பெற்ற காஷ்வி.

“செய்திகளைப் பார்க்கும்போது போர், பேரழிவு, வெறுப்பு மட்டுமே சில நேரங்களில் கண்ணில் படுகிறது. வரலாற்றின் சுமை நம்மை அழுத்தக்கூடும். ஆயினும், அந்தச் சுமையைத் தாங்கிக்கொண்டு உலகிற்கு நன்மைகளைச் செய்ய முனைவதே நம்மை உலகளாவியக் குடிமக்களாக மாற்றுகிறது,” என்று அவர் சொன்னார்.

இத்தகைய ஆழமான சிந்தனையே, முனைவர் முஸ்தபா தம் தாயாரின் நினைவாக நிறுவிய ‘பட்டுல் இஸ்ஸுடின் உலகளாவிய குடிமகன்’ (Batul Izzuddin Global Citizen) விருதை காஷ்வி வெல்லக் காரணமாய் அமைந்தது.

நான்கு வயதில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த காஷ்வி, புதிய சூழலில் வளர்ந்த தன்னை ஒரு ‘பன்முக இளையர்’ என்று வருணிக்கிறார். உலகை ஆழமாக அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்ட இவரது கல்விப் பயணம் உலகம் முழுதும் விரிந்தது.

ஜெர்மனியின் டியுபிங்கனில் ‘பேடன்-வுர்ட்டம்பர்க்’ (Baden-Württemberg) கல்வி உதவித்தொகையுடன் பயின்றதுமுதல், எக்குவடோரில் இயற்கையின் உரிமைகளையும் சுரங்கத் தொழிலின் சுற்றுச்சூழல் தாக்கங்களையும் ஆராய்ந்ததுவரை, உலகளாவியப் பிரச்சினைகளுக்குப் பன்முகத்தன்மை கொண்ட தீர்வுகளைக் கண்டறிவதில் காஷ்வி தொடர்ந்து ஆர்வம் காட்டினார்.

தென்னமெரிக்க நாடான எக்குவடோரில் மரக்கன்று நட்ட மனநிறைவுடன் காஷ்வி ராஜ், 22
தென்னமெரிக்க நாடான எக்குவடோரில் மரக்கன்று நட்ட மனநிறைவுடன் காஷ்வி ராஜ், 22 - படம்: காஷ்வி ராஜ்

தம் குடும்பமே தமது மிகப்பெரிய பலம் என்கிறார் அவர். “ஒரு புதிய நாட்டில் வாழ்க்கையை மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்புவது எளிதன்று,” என்று தம் பெற்றோரின் தியாகங்களை நினைவுகூர்ந்த காஷ்வி, தான் பெற்ற விருதுகள் தனக்கு எவ்வளவு சொந்தமோ, அதே அளவு தன் பெற்றோருக்கும் சொந்தம் என்று குறிப்பிட்டார்.

தன் பெற்றொருடன் காஷ்வி ராஜ், 22.
தன் பெற்றொருடன் காஷ்வி ராஜ், 22. - படம்: காஷ்வி ராஜ்

தற்போது உள்துறை அமைச்சுத் தலைமையகத்தின் உத்திபூர்வத் திட்டமிடல் பிரிவில் பணியாற்றும் அவர், தமது உலகளாவிய அனுபவங்களிலிருந்தும் வழிகாட்டிகளிடமிருந்தும் கற்ற பாடங்களைக் கொண்டு, சமூகத்தில் தொடர்ந்து நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறார்.

தெற்காசியப் பாரம்பரியத்தின் வேர்களைத் தேடி!

சமூகத்தில் நேர்மறையான பிணைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆசை 23 வயதான பொருளியல் பட்டதாரி மதிவாணன் திவ்யாவுக்கு அவரது இல்லத்திலிருந்தே தொடங்கியது.

‘சையத் அகமது கான் ஏஎம்யு’ நினைவுப் பரிசைப் பெற்ற மதிவாணன் திவ்யா, 23
‘சையத் அகமது கான் ஏஎம்யு’ நினைவுப் பரிசைப் பெற்ற மதிவாணன் திவ்யா, 23 - படம்: மதிவாணன் திவ்யா

சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரச் சூழலில், தெற்காசியாவின் பல்வேறு அடையாளங்கள் சில நேரங்களில் ‘இந்தியக் கலாசாரம்’ என்ற ஒற்றைப் பெயருக்குள் அடக்கப்பட்டுவிடுவதாக இவர் கூறினார். இதனால், இளைய தலைமுறையினர் தங்களது சொந்தப் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை அறியும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது.

“சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் என்பதால், இந்தியக் கலாசாரம் அல்லது தெற்காசியக் கலாசாரத்தை மக்கள் தமிழ்ப் பண்பாடாகவே கருதுகின்றனர்,” என்று முதன்மைச் சிறப்புத் தேர்ச்சியுடன் பொருளியலில் பட்டம் பெற்றுள்ள திவ்யா குறிப்பிட்டார்.

“இங்கு வளரும் பல இந்திய இளையர்கள் தங்களது வேர்களைப் பற்றிய ஆழமான புரிதலின்றி வாழ்கின்றனர். அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தங்களின் பாரம்பரியத்தோடு அவர்களை நெருக்கமாக்க நான் விரும்பினேன்,” என்றார் இவர்.

இதன்தொடர்பில் சமூகத்தில் ஏற்படும் இடைவெளிகளைக் களைவதற்கான இவரது தீவிர முயற்சியே முனைவர் முஸ்தஃபாவால் பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்ட ‘சையத் அகமது கான் ஏஎம்யு’ நினைவுப் பரிசை (Syed Ahmad Khan AMU Memorial Prize) திவ்யாவுக்குப் பெற்றுத் தந்தது.

தமிழ் பேசும் குடும்பத்தில் வளர்ந்த திவ்யாவுக்குத் தாய்மொழி மீதான ஆர்வம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பயின்ற காலத்தில் நன்கு வேரூன்றியது. அங்கு அவர் பாரம்பரியக் கலை வடிவங்களையும் பயின்றார். பின்னர், கனடாவின் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட கல்விப் பரிமாற்றப் பயணம் இவரது உலகப் பார்வையை மேலும் விரிவடையச் செய்தது.

ஹோ சி மின்னில் தனது ஆசியான் பயிற்சித் திட்டத்தின்போது  மதிவாணன் திவ்யா, 23.
ஹோ சி மின்னில் தனது ஆசியான் பயிற்சித் திட்டத்தின்போது மதிவாணன் திவ்யா, 23. - படம்: மதிவாணன் திவ்யா

என்யுஎஸ் இந்துச் சங்கம் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதன் தலைவராகப் பொறுப்பேற்ற திவ்யா, முக்கியப் பண்டிகைகளையும் பல்கலைக்கழக அளவிலான சமய நல்லிணக்கக் கலந்துரையாடல்களையும் வெற்றிகரமாக நடத்தினார்.

அத்துடன், தெற்காசியத் திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல்களை வழிநடத்தியதுடன், லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளிக்காகக் கொள்கை ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளையும் இவர் மேற்கொண்டார். தலைமுறைகளைக் கடந்து இளையோரையும் முதியோரையும் இணைக்கும் ‘கேம்ப் ரீகனெக்‌ஷன்’ போன்ற தன்னார்வ முகாம்களையும் இவர் வழிநடத்தியுள்ளார்.

சிறுவயது முதலே தமிழும் ஆன்மிகமும் தமது வாழ்வின் தூண்களாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார் திவ்யா.

“இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த என் பெற்றோர் எனக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தர கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களின் அந்த அர்ப்பணிப்பே நான் கல்வியில் சிறந்து விளங்க முக்கிய உந்துசக்தி,” என்றார் இவர்.

தம் குடும்பத்தினருடன் மதிவாணன் திவ்யா, 23.
தம் குடும்பத்தினருடன் மதிவாணன் திவ்யா, 23. - படம்: மதிவாணன் திவ்யா

தற்போது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுப் பொருளியலில் முதுநிலைப் பட்டப் படிப்பைத் தொடரவிருக்கும் திவ்யா, எதிர்காலத்தில் சிங்கப்பூரின் கொள்கை வடிவமைப்பில் தமது பண்பாட்டுப் பின்புலம் சார்ந்த பார்வைகளைக் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்