மாணவர்களின் கல்விப் பயணத்தை மேலும் இனிமையாக்க சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) அண்மையில் புதிய ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்குப் புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் இருக்காது.
அந்நேரத்தில் அவர்கள் கல்விக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
‘என்யுஎஸ்ஒன்’ எனப்படும் அணுகுமுறையின் ஓர் அங்கமான இந்த முயற்சி, புதிதாக பல்கலைக்கழகத்தில் இணையும் மாணவர்களுக்கு உதவிசெய்யவும், மாணவர்களைக் கல்விக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டது.
இந்தப் புதிய ஏற்பாட்டை அப்பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பெரிதும் வரவேற்கின்றன. எனினும், பாடநேரம் சற்று நெருக்கடியாக இருக்கும் என்பது சிலரின் கவலை. அதேநேரத்தில் அந்த நேரத்தை மாணவர்கள் உண்மையிலேயே பயனுள்ளதாகச் செலவழிப்பார்களாக என்பது சிலரது கேள்வி.
இணைப்பாட நடவடிக்கைகள் உறுப்பினர்கள் சந்திக்க உதவும்
கடந்த மாதம் கணினியியல் துறையில் பட்டம் (Bachelor of computing) பெற்ற சீனிவாசன் நிகாரிகா, 23, இந்த முயற்சியைப் பெரிதும் வரவேற்றார்.
“முன்னர் இணைப்பாட நடவடிக்கையின் சந்திப்புகள், பாட நேரம் முடிந்து மாலை, அல்லது இரவு நேரங்களில்தான் அதிகமாக இடம்பெற்றன. சிலருக்கு இரவு 8 மணி வரை வகுப்புகள் இருந்ததால், எல்லா உறுப்பினர்களாலும் எல்லாச் சந்திப்புகளிலும் கலந்துகொள்ள முடிந்ததில்லை,” என்றார் இந்திய நடன இணைப்பாட நடவடிக்கையில் உறுப்பினராக இருந்த நிகாரிகா.
“இனி புதன்கிழமை பிற்பகலில் வகுப்புகள் இருக்காது என்பதால், அந்த நேரத்தில் எல்லா உறுப்பினர்களும் சந்திப்புகளில் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வசதியும் சிக்கலும்
வடிவமைப்பு, பொறியியல் துறையில் படிக்கும் 22 வயது ம. அம்ருத்தவர்ஷினி இதனால் வசதியும் உண்டு சிக்கலும் உண்டு என்றார்.
இந்த புதிய முயற்சி வெவ்வேறு இணைப்பாட நடவடிக்கைகளுக்கான சந்திப்புகளை எளிதாகத் திட்டமிட உதவும் என்றாலும் இடச்சிக்கலுக்கு வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.
“ஒரே இடத்தைப் பயன்படுத்தும் பல இணைப்பாட நடவடிக்கைகள் இருப்பதால், இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம்.
“மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு பல இணைப்பாட நடவடிக்கைகளின் சந்திப்புகள் ஒரே நேரத்தில் நடக்கும்போது எங்கு செல்வது என்ற குழப்பம் ஏற்படலாம்,” என்று அம்ருத்தவர்ஷினி கூறினார்.
மாணவர்கள் நேரில் சந்தித்து உறவாட நல்ல திட்டம்
செவிலியர் துறையில் பட்டம் பெற்ற கிருத்திகா காசிநாத துரை, 23, தற்போது டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் முதுகலைப் படிப்பு படித்து வருகிறார்.
கொவிட்-19 தொற்றுப் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், சக மாணவர்களுடன் பழகுவதற்கு தனக்கு நேரம் கிடைக்கவில்லை என்று கூறினார்.
இந்த ஏற்பாடு, புதிய மாணவர்கள் நேரில் சந்தித்து, நண்பர்களை உருவாக்கிக்கொள்ள அதிக வாய்ப்புகளைத் தரும் என்று நம்புவதாக கிருத்திகா கூறினார்.
“பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடிக்கடி மன அழுத்தம் ஏற்படும். இந்த ஏற்பாட்டின் வழி, மாணவர்களுக்கு வார நாள்களில் அரை நாள் ஓய்வு கிடைப்பதால் அவர்கள் கல்வி சாரா நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதன்வழி அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ளலாம். சிலர் கிடைக்கும் இந்த நேரத்தை பாடங்களை மீண்டும் படிப்பதற்கும் மற்ற மாணவர்களுடன் இணைந்து படிப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்று கிருத்திகா சொன்னார்.
வகுப்புக்கான நேரம் குறையும்
இந்தப் புதிய ஏற்பாடு பல நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்று நினைத்தாலும், வகுப்புகளுக்கான நேரத்தைக் குறைகிறது. அதனால் கால அட்டவணையை விரும்பும் வகையில் திட்டமிட முடியாமல் போகலாம் என்பது வேதிப் பொறியியல் படிக்கும் மாணவி சுவிதா ராமனின், 19, கவலை.
அன்றாடம் ஒரு வகுப்பு என தனது கால அட்டவணையைத் திட்டமிட விரும்புகிறார் சுவிதா. இந்த புதிய திட்டத்தினால் ஒரே நாளில் பல வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும், அது சோர்வை ஏற்படுத்தலாம் என்று கூறினார் சுவிதா.