சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் (என்யுஎஸ்) தமிழ்ப் பேரவையின் படைப்பாக்கக் குழு, இவ்வாண்டு தொடக்கத்தில் தன் யூடியூப் தளத்தில் ‘மயக்கமா கலக்கமா’ எனும் குறும்படத்தை வெளியிட்டது.
நடிப்பு, இசையமைப்பு, தயாரிப்பு என அனைத்தையும் திறம்பட நிர்வகித்து மாணவர்கள் தரமான ஒரு படைப்பை வழங்கியுள்ளனர்.
“நம் வாழ்வில் பத்து விழுக்காடே நமக்கு நடப்பது; மீதம் 90 விழுக்காடு, நாம் அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதே,” என்ற கூற்றோடு தொடங்குகிறது குறும்படம். “இக்கூற்றுக்கும் குறும்படத்துக்கும் என்ன தொடர்பு?” என்ற கேள்விக்கு விடைகாணும் ஆர்வத்தில் பார்ப்பவர் தொடர்ந்து பார்க்கத் தூண்டப்படுகிறார்.
ஒரு நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட பாசிர் ரிஸ் பூங்காவிற்குச் செல்லும் இளையர், அங்கு எதிர்பாராவிதமாக முக்கியப் பொருள் ஒன்றைத் தொலைத்துவிடுகிறார்.
அப்போது ஏற்படும் பதற்றம், கோபம், குழப்பத்தைக் கதாபாத்திரங்கள் நகைச்சுவையாக நடித்துக் காட்டியுள்ளனர். பூங்கா முழுவதும் இரவுவரை தேடுகின்றனர்.
இறுதியில், அந்தப் பொருளைக் கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே கதை.
இதில் மையக் கதாபாத்திரமாக நடித்த பிரியதர்ஷினியின் வாழ்வில் ஏற்பட்ட உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இக்குறும்படத்துக்கான யோசனை வந்தது.
“ஆனால் நான் ஒன்றைத் தொலைக்கும்போது இந்த அளவிற்குப் பதறமாட்டேன். ஓரளவு முயற்சிக்குப் பின் கிடைக்கவில்லையெனில் தொலைந்தால் தொலைந்தது என விட்டுவிடுவேன். ஆனால், இக்குறும்படத்தில் பதற்றமடைந்ததுபோல் நடிக்கச் சொன்னார் இயக்குநர்,” என்றார் பிரியதர்ஷினி.
தொடர்புடைய செய்திகள்
“நான் நடித்த கதாபாத்திரத்தை எனக்காகவே உருவாக்கியதாக இயக்குநர் கூறினார். திரைக்கதையைப் படித்ததும் வேறுபட்ட முயற்சியாக இருக்கிறதே எனத் தோன்றியது. நான் வட சென்னைக்கே சென்றதில்லை. ஆனாலும், வட சென்னை பாணியில் பேச இயக்குநர் சொன்னார்,” என்றார் பழனிவேலு ஜெயசூரியா.
பிறந்தநாளைக் கொண்டாடிய இளையராக நடித்த ரமணா, “இயக்குநர் எங்கள் அனைவருக்கும் ஏற்ற கதாபாத்திரங்களாகத்தான் கொடுத்துள்ளார். இது எங்களில் பலருக்கு முதல் அனுபவம். சுவாரசியமாக இருந்தது,” எனக் கூறினார்.
குறும்படத்தின் திரைக்கதை எழுத்தாளரும் இயக்குநரும் என்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் தலைவருமான சுப்பிரமணியன் கார்த்திகேயன், 23, குறும்படம் வெளியிடுவது என்பது ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் முயற்சி என்றார்.
“எங்களில் சிலருக்கு நடிக்க விருப்பம். சிலருக்குக் கதை எழுத விருப்பம். அதனால், இம்முயற்சியில் இறங்கினோம். படிப்புக்கு மத்தியில் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போது கலந்து ஆலோசித்துக் குறும்படத்தைத் தயாரித்தோம்.
“பிப்ரவரியில் கதை எழுதி, மார்ச் மாதம் படப்பிடிப்பு நடந்து, பல மாதங்கள் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு டிசம்பரில் முடித்தோம்,” என்றார் கார்த்திகேயன்.
உழைப்புக்குத் தகுந்தவாறு குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, நல்லு தினகரன், சலீம் ஹாதி போன்ற உள்ளூர் நாடகக்கலை நிபுணர்கள் குறும்படத்தைக் கண்டு கருத்துரைத்தது குழுவை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.
“இளையர்களின் சிறந்த கூட்டுமுயற்சி இது. இன்று பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் இளையர்களும் மறதியை எதிர்நோக்குவதால் குறும்படத்தின் கரு இன்றைய காலகட்டத்துக்கும் ஏற்புடையதே. தமிழ்க் குறும்படக் குழுவினர் இக்கலையில் கவனம் செலுத்தி, முயற்சி எடுத்திருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியடைகிறேன்,” என சலீம் ஹாதி பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூர் இந்திய நாடக மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் (சிட்ஃபி) எனும் லாப நோக்கற்ற அமைப்பின் ‘திரைக்குப் பின்னால்’ எனும் நிகழ்ச்சியில் இக்குறும்படத்தைக் காட்டியதாகவும் கூறினார் ‘சிட்ஃபி’ இயக்குநரும் தோற்றுநருமான சலீம் ஹாதி.
நல்லு தினகரன், “நெல்சன் பாணி” நகைச்சுவை பிடித்திருந்ததாகக் கூறினார்.
என்யுஎஸ் தமிழ்ப் பேரவை மூன்று ஆண்டுகளில் வெளியிட்டுள்ள நான்காவது குறும்படம் இது.
சென்ற ஆண்டு என்யுஎஸ் தமிழ்ப் பேரவை வெளியிட்ட ‘டேக் இட் ஈசி, ஊர்வசி’ நாடகம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ‘ஆராதனா’ போட்டியில் வென்றது.
குறும்படங்களை https://www.youtube.com/@NUSTamilLangSociety தளத்தில் காணலாம்.