நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஊடகத் தயாரிப்புக்கூடம் ஒன்று, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் திறக்கப்பட்டுள்ளது.
‘பியாண்ட் ரியாலிட்டி ஸ்டூடியோ’ எனும் இத்தயாரிப்புக் கூடத்தில், மாணவர்கள் புதிதாக அறிமுகமாகும் தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தி உயர்தர கற்றல் அனுபவத்தைப் பெறலாம்.
இத்தகைய வசதிகள் கொண்ட சிங்கப்பூரின் ஒரே மற்றும் முதல் உயர்கல்வி நிலையமாக நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி திகழ்கிறது.
மேலும், இந்த தயாரிப்புக்கூடம் ஹாலிவுட் திரைப்படக் கூடத்திற்கு நிகரான கூறுகளையும் கொண்டுள்ளது. ‘டால்பி அட்மோஸ் 7.1.4 சரவுண்ட் ஆடியோ ஸ்டூடியோ’ அதிகாரபூர்வச் சான்றிதழ் பெற்ற முதல் பலதுறைத் தொழிற்கல்லூரி மட்டுமின்றி, இந்தக் கூடத்தில் இருக்கும் ‘எல்இடி’ ஒலியளவு சுவர் உயர்தரமான வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த 2,500 சதுர அடி மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தில் 24 படமெடுப்புக் கருவி, பெரிய வளைந்த பச்சைத் திரை ஆகிய அம்சங்கள் அமைந்துள்ளன.
தொழில் நிர்வாகம், வடிவமைப்பு, ஊடகம் ஆகிய பிரிவுகளில் பயிலும் மாணவர்களால் இந்த தயாரிப்புக் கூடத்திற்கு வந்து பாடங்கள் கற்க முடியும்.
பட்டயக் கல்வியில் இரண்டாம் ஆண்டும் இறுதியாண்டும் பயிலும் மாணவர்கள் அவர்களின் தொழில்துறைத் திட்டங்களை இதில் மேற்கொள்ளலாம்.
மெய்நிகர் தயாரிப்பு என்பது வழக்கமான திரைப்பட உருவாக்கத் தொழில்நுட்பங்களுடன், அதிநவீனத் தொழில்நுட்பத்தையும் கொண்டதாகும்.
தொடர்புடைய செய்திகள்
அதில், கணினி மூலம் உருவாக்கப்படும் உருவப்படம், மிகைமெய் ஆகிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு உள்ளடங்கியுள்ளது.
மாணவர்களை வருங்காலத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி இத்தகைய முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
கணினி வரைகலை, மிகைமெய் (Augmented Reality) தொழில்நுட்பங்களில் திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, மாணவர்கள் பொழுதுபோக்கு, விளையாட்டுத் துறையில் அடி எடுத்து வைக்கும்போது அத்துறையின் சவால்களை நன்கு கையாளவும் கற்றுக்கொள்வர்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் இந்தக் கூடத்தை அதிகாரபூர்வமாக ஜனவரி 24ஆம் தேதி திறந்து வைப்பார்.
“இந்தப் புதிய அம்சங்களால் எங்களால் உயர்ந்த தரத்தில் படைக்க முடியும். பட்டயப் படிப்புக்குப் பிறகு நான் வேலைக்குச் செல்லும்போது கூடுதல் தன்னம்பிக்கையோடு செயல்படலாம். பிற மாணவர்களை ஒப்பிடுகையில் நான் அவர்களைவிட சிறப்பாகச் செயல்படுவேன் என்ற உற்சாகமும் ஏற்பட்டுள்ளது,” என்று உயிரூட்டுதல், விளையாட்டு, காட்சிக் கலையில் இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர் விஷால் சுரேஷ், 18, கூறினார்.
“மாணவர்களுக்கு இந்தக் கூடத்தில் பல கற்றல் வாய்ப்புகள் அமைந்துள்ளன. இதன் மூலம் மாணவர்கள் பிற்காலத்தில் வேலைக்குச் செல்லும்போதும்கூட துறையில் சிறப்பாக விளங்கத் தயாராக இருப்பார்கள். புதிய தொழில்நுட்பம் என்பதால் நேரமும் மிச்சமாகும்,” என்று ஊடக, வடிவமைப்புப் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் தியாகராஜன் சங்கர், 46, தெரிவித்தார்.