பகலில் அலுவலக வேலையைப் பார்த்துவிட்டு மாலை நேரத்தில் கையுறைகளை அணிந்தவாறு பச்சை குத்துதலுக்குத் தேவையான கருவிகளைக் கையில் எடுத்துக்கொண்டு சிறிய ஸ்டூடியோவில் தமது தொழிலைப் பார்க்கத் தொடங்கிவிடுவார் 30 வயதாகும் ஜதீஸ்வரன் நாயுடு.
சட்டத்துறையில் பட்டம் பெற்றுவிட்டு அத்துறையில் சிறிது காலம் வேலை செய்துவிட்டு தற்போது இணக்கத் துறையில் உள்ள ஜதீஸ்வரன் கடந்த ஐந்தாண்டுகளாகப் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
படித்த படிப்புக்கும் சுயதொழிலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்ற போதிலும் சுயதொழிலில் முழு மனதாக இணைந்திருக்கும் ஜதீஸ்வரன் தமது ஆர்வத்திற்கும் இளம் வயதிலிருந்தே இருந்து வந்த வேட்கைக்கும் முன்னுரிமை அளிக்கிறார்.
சிறுவயதில் சட்டத்துறையிலும் கலையிலும் ஜதீஸ்வரனுக்கு ஆர்வம் இருந்து வந்தது. ஆனால், முழுநேரப் பணி என்று வந்தபோது ஜதீஸ்வரனுக்குச் சட்டத்துறை ஈர்ப்பாக அமைந்தது.
சட்டத்துறையில் பட்டயப் படிப்பு மேற்கொண்ட ஜதீஸ்வரன், கலை மேல் இருந்த ஆர்வத்தைக் கைவிடவில்லை. அவ்வப்போது வரைவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். 20 வயதில் முதல்முறையாகப் பச்சை குத்தச் சென்றிருந்தபோது அதைச் செய்தவரிடம் தாம் வரைந்திருந்த வடிவத்தைத் தமக்குக் குத்துமாறு கேட்டுக்கொண்டார் ஜதீஸ்வரன்.
“நான் மிக அழகாக அந்த வடிவத்தை வரைந்துள்ளதாக அந்தப் பச்சை குத்தும் கலைஞர் கூறியதுடன் நான் ஏன் ஒரு பச்சை குத்தும் கலைஞர் ஆகக்கூடாது என்று கேட்டபோது என்னுள் அந்த எண்ணம் விதைக்கப்பட்டது,” என்றார் ஜதீஸ்வரன்.
அன்று முடிவெடுத்த ஜதீஸ்வரன், ‘பிங்’ என்றழைக்கப்படும் அக்கலைஞரிடம் சென்று பச்சை குத்தும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள தொடங்கினார். நண்பர்களின் ஊக்கம் பக்கபலமாக இருக்கவே பச்சை குத்துவதில் ஜதீஸ்வரனின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
முதலில் வீட்டில் இருந்தவாறு தமக்குத் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் பச்சை குத்தத் தொடங்கிய ஜதீஸ்வரன், பல சவால்களைச் சந்திக்க நேர்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
பச்சை குத்தும் கலைஞர் என்றாலே அவர் வழித்தவறிச் சென்றவர் எனும் சமூகக் களங்கம் இன்னும் நிலவி வருவதாகக் கூறிய ஜதீஸ்வரன் அதை உடைத்தெறிய விரும்பினார்.
“என் பெற்றோர் முதலில் இதை அதிகம் ஆதரிக்கவில்லை. அவர்கள் பச்சை குத்துவதைத் தீங்கு இழைக்கும் ஒன்றாகக் கருதினர். நான் அதை மாற்ற எண்ணினேன்,” என்று ஜதீஸ்வரன் சொன்னார்.
வீட்டில் இருந்தவாறு பிறருக்குப் பச்சை குத்தி வந்த ஜதீஸ்வரன், நாளடைவில் பெரியதோர் இடத்தை வாடகைக்கு எடுத்து தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தார்.
முழுநேர வேலையையும் பார்த்து வருவதால் ஓர் இடத்திற்கு வாடகை செலுத்தும்போது அந்த இடம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஜதீஸ்வரன் அந்த இடத்தில் முடிதிருத்தும் தொழிலையும் சேர்த்துக்கொண்டார். கடையின் பின்புறத்தில் அவரது பச்சை குத்தும் ஸ்டூடியோவைக் காணலாம்.
பச்சை குத்தும் வடிவங்களில் ஜப்பானிய, பழங்குடிப் பச்சை, மௌரி, பொலினேசியன் எனப் பல்வேறு வகைகள் இருப்பதாகக் கூறிய ஜதீஸ்வரனின் முகத்தில் அவர் பச்சை குத்துவதன் மேல் வைத்திருந்த ஆர்வம் பெரிதாக மிளிர்ந்தது.
ஒரு நாள் முழுநேர வேலையை விட்டு நேரத்தை ஒட்டுமொத்தமாகப் பச்சை குத்துவதற்கு ஒதுக்க வேண்டும் என்பது ஜதீஸ்வரனின் கனவு. அக்கனவு மெய்ப்பட நேரம் பாராமல் உழைக்கும் ஜதீஸ்வரன், சட்டத்துறை மூலமாகவும் தமது தற்போதைய முழுநேர வேலை மூலமாகவும் தாம் கற்றுக்கொண்ட திறன்கள் சுயதொழிலுக்கு ஏதுவாக இருப்பதாகச் சொன்னார்.
“பச்சை குத்துவதை நான் ஒரு வேலையாகவே பார்க்கமாட்டேன். அது என்னுள் ஊறிய ஒன்று. நான் ஒவ்வொரு நாளும் புதியனவற்றைக் கற்றுக்கொண்டு என் திறனை மேம்படுத்த விழைகிறேன்,” என்று குறிப்பிட்டார் ஜதீஸ்வரன்.
தம்மைப் போல் தொழில் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் குழப்பத்தில் இருப்பது வழக்கம்தான் என்ற ஜதீஸ்வரன், பல துறைகளில் போதுமான அளவு அனுபவம் பெற்ற பிறகு துணிந்து துறையை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.

