தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பீஸ் லா!’: இளையர்களின் கைகளில் அமைதி

2 mins read
6a7779f1-cf8f-4349-92cd-527c05b0be28
ஷிவ சேஷாத்ரி. - படம்: ஷிவ சேஷாத்ரி

சிங்கப்பூர் உலக அமைதிக் குறியீட்டில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தாலும், அமைதியைக் கட்டியெழுப்புவதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என நம்புகிறார் ஷிவ சேஷாத்ரி, 18.

ஓர் இளையராக ஷிவாவிற்கு சிங்கப்பூரை மேலும் ஓர் ஒற்றுமையான, மரியாதைக்குரிய சமூகமாக மாற்ற வேண்டுமென்ற உந்துதல் உள்ளது.

தற்போது அவர் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிரியல் அறிவியலில் பட்டயப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

அவரது பள்ளியில் சமூக தலைமைத்துவம்மீது அதிக வலியுறுத்தல் உள்ளது. இதனால் ஷிவா சமூக தலைமைத்துவத்தில் துணைப் பட்டயப் படிப்பையும் படித்து வருகிறார்.

சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், வீடற்றவர்கள் போன்றோரைப் பற்றி விரிவான புரிதல் அவருக்கு இதன்மூலம் கிடைத்தது.

இன்றைய சிங்கப்பூரில் அமைதி என்றால் என்ன என்பதை இளம் தலைமுறையினர் ஆராய்வதற்கும் அதற்கேற்ப செயல்படுவதற்கும் அதிகாரமளிக்கும் திட்டம் ஒன்றை ஷிவா நான்கு பேருடன் இணைந்து நிறுவினார்.

‘பீஸ் லா!’ என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தில் அனுபவபூர்வமான கற்றல், வழிகாட்டப்பட்ட பின்னோக்குச் சிந்தனைமூலம் பங்கேற்பாளர்கள் அமைதியின் வெவ்வேறு அடிப்படை கூறுகளில் ஈடுபடுவார்கள்.

அவற்றில் விலங்கு நலன், மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம், மனநல நல்வாழ்வு, இன, சமய நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவை அடங்கும்.

பீஸ் லா! பல்வேறு பின்னணியைக் கொண்ட இளையர்களை ஒன்றிணைத்து, பரிவுகாட்டும் பண்பை வளர்ப்பதிலும் அர்த்தமுள்ள உரையாடல்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்டத்தைச் செயல்படுத்தவும் அது முன்னோக்கிச் செல்லவும் இளையர் பங்கேற்பு மிக அவசியமானது என ஷிவா நம்புகிறார்.

“இளையர்கள் பலர் சமுதாயக் கூறுகளை ஆராய்ந்து அதற்குத் தீர்வுகாண முன்வருவதில்லை. இளையர்களைப் பற்றிப் பேச இளையர்களே முயற்சி செய்ய வேண்டும்,” என்று கூறினார் ஷிவா.

சனிக்கிழமை (செப்டம்பர் 6) மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் இடம்பெற்ற எஸ்ஜி இளையர் கருத்தரங்கில் ஷிவா பங்கேற்றார்.

தற்காலிக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கருத்தரங்கில் திரு டேவிட், இளையர்கள் தங்களின் பல்வேறு லட்சியங்களைத் துணிவுடனும் நம்பிக்கையுடனும் அடையவும், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான வாய்ப்புகளைத் தேட உதவும் கலாசார, சமூக, இளையர்துறை, தேசிய இளையர் மன்றத்தின் முன்னுரிமைகளையும் பகிர்ந்துகொண்டார்.

கருத்தரங்கில் தேசிய இளையர் மன்றம் எஸ்ஜி இளையர் திட்டத்திற்காக இதுவரை நடத்தப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகள் குறித்த புதுப்பிப்பையும் வழங்கியது.

மேலும் இளையர்களின் ஆர்வங்களை மையமாகக் கொண்ட பயிலரங்குகள், இளையர்கள் தலைமையிலான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பயிற்சியும் இடம்பெற்றது.

அப்பயிற்சியில் பீஸ் லா! நோக்கங்களை ஷிவாவும் அவரது குழுவினரும் முன்வைத்தனர்.

இந்திய இளையர்களுக்கு அப்பாற்பட்டு மற்ற இனங்களைச் சேர்ந்த இளையர்களையும் கலந்துரையாடல்களில் ஈடுபட ஊக்குவிக்க விரும்புகிறார் ஷிவா.

நிதி ஒதுக்கீட்டுப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்தகட்ட பணிகள் வெகுவாக நடைபெறும் என்ற ஷிவா, இதற்கு இளம் தொண்டூழியர்கள் அதிகம் தேவைப்படுவதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்