உதவுவதற்கு வாய்ப்புள்ளவர்கள் இயலாதோர்க்கும் தேவைப்படுவோர்க்கும் துணை நிற்க வேண்டும் எனும் கூற்றையே தாரக மந்திரமாகக் கொண்டுள்ளார் லோகீதா பிரதீப், 32.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் எஸ்.ஆர்.நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளியில் (S R Nathan School of Human Development) ஆலோசனைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர் தமது பயணம் தொடங்கிய தருணத்தை நினைவுகூர்ந்தார்.
18 வயதில் ஜாமியா சிறுவர் இல்லத்தில் பகுதி நேரமாகப் பணிபுரிந்தபோதே பிறருடன் பிணைப்பு ஏற்படுத்திக்கொள்வதும், பலவீனமான, பாதிக்கப்படக்கூடிய தருணங்களைக் கண்டறிந்து உதவுவதும் தமக்கு இயல்பாக வருவதை உணர்ந்தார் லோகீதா.
அதனைத் தொடர்ந்து, பிறர் மனத்தை அறிந்து உதவும் திறனை வளர்க்கும் படிப்பில் சேர விரும்பினார் லோகீதா.
‘ஓ’ நிலைத் தேர்வெழுதிய கையுடன் உளவியல் துறையில் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் அவர்.
அந்தப் படிப்பு, உளவியல் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும், அதனைச் சரியான வழியில் பயன்படுத்துவது குறித்து கற்கவுக்கும் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டியது.
உளவியல் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ள லோகீதா, தொடர்ந்து ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறவும் ஆர்வம் கொண்டுள்ளார்.
படிப்புக்கு அப்பால் வாழ்விலும், சமூகத்திலும் பெற்ற அனுபவங்கள் தமது எண்ணங்களை மாற்றியமைக்க உதவியதையும் லோகீதா சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
சொந்த வாழ்வில் பராமரிப்பிலும் படிப்பிலும் ஒருசேர கவனம் செலுத்த வேண்டிய நிலை, தொண்டூழியத்தில் பழகிய மக்கள் என அனைவரும் தம்மை சமூகப் பொறுப்புள்ளவராக உருமாற்றியதாக அவர் நம்புகிறார்.
“உணவு, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கே போராட வேண்டிய நிலையில் சிலர் இருப்பதால், எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளின் அருமையை உணர்ந்துள்ளேன். அதனைக் கொண்டு பிறருக்கு உதவுவதை என் கடமையாக நினைக்கிறேன்,” என்றார் லோகீதா.
“மனித உணர்வுகளின் பல்வேறு படிநிலைகளை ஆராய்ந்து, சிரமங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் சூட்டப்பட்டுள்ள பெயர்களைக் கட்டமைப்புகளாகக் கொண்டு, ஆழமாக அறியும் இயல்பை வளர்த்துக் கொண்டுள்ளேன். அது என்னை உயர்த்தும் என நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
சமூகத்தையும் உற்று நோக்கும் இயல்புகொண்ட அவர், விவாகரத்துக்குப் பிறகு, ஒற்றைத் தாய்மார்களுக்குக் கிடைக்கும் ஆதரவு அளவுக்கு ஒற்றைத் தந்தைமார்களுக்குக் கிடைப்பதில்லை என்பதைக் கவனித்தார்.
சிங்கப்பூரில் உள்ள ஒற்றைத் தந்தையர்களின் வாழ்க்கை அனுபவங்கள், மனநலம், சிரமங்கள், தேவைகள், எதிர்பார்ப்புகளைக் கண்டறிந்து, அதற்குரிய தீர்வுகளை ஆலோசிக்கும் வகையில் அமைந்த ஆய்வுப் பணியிலும் லோகீதா ஈடுபட்டு வருகிறார்.
“ஆய்வின் தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதைத் தாண்டி, பேசப்படாத தலைப்புகள் சமூகத்தில் விவாதிக்கப்படவும் தீர்வுகளை ஆராயவும் வழிவகுக்குமெனில் அதுவே வெற்றி,” என நம்பிக்கையுடன் சொன்னார் லோகீதா.
தொடர்ந்து கல்வி, ஆய்வு என அனைத்திலும் பெரும்பங்காற்றி வரும் விரிவுரையாளர் டாக்டர் சுதா மேரி தம்முடன் இருப்பது தமக்கு பலம் என்றும் லோகீதா குறிப்பிட்டார்.
உளவியல் ஆலோசனைக்கான சிங்கப்பூர்ச் சங்கத்தில் சான்று பெறவும், தமது ஆய்வை விரிவாக்கி, வெளியிடவும் திட்டமிட்டுள்ள லோகீதா, எதிர்காலத்தில் முனைவர் பட்டம் பெறும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார்.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இதற்குமுன் இல்லாத அளவாக இவ்வாண்டு 3,400 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பட்டமளிப்பு விழா அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதிவரை சன்டெக் சிட்டி அரங்கில் நடைபெற்றது.
தொடக்க விழா நாளன்று, பல்கலைக்கழக வேந்தர் ஹலிமா யாகோப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் துறைகளின் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நான்காவது அமர்வில், தகவல் மின்னிலக்க மேம்பாடு, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

