கடும் உழைப்பால் செழிக்கும் குடும்பத் தொழில்

விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடைக்கு காணொளிகள் மூலம், பல நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இளையர்

கடும் உழைப்பால் செழிக்கும் குடும்பத் தொழில்

3 mins read
1ca395fd-3db1-415e-b827-7c67446e12a0
கல்விப் பாதையைவிட்டு, குடும்பத் தொழிலில் ஆர்வம் காட்டிய முகம்மது ஹஷிம். - படம்: அனுஷா செல்வமணி

விளையாட்டுப் பொருள்களுக்குப் பெயர்பெற்ற குவீன்ஸ்வே கடைத்தொகுதியில் 23 வயதாகும் முகம்மது ஹஷிம் தனித்துவத்துடன் மிளிர்கிறார்.

பூப்பந்தாட்டத்திற்குப் பயன்படுத்தும் மட்டையின் நரம்புகளைப் பிணைக்கும் இயந்திரத்தின்முன் நின்று ஹஷிம் கண்ணும் கருத்துமாக நரம்புகளை இழுத்துக் கட்டும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தலாம்.

விளையாட்டு மட்டைகளின் நரம்புகளைக் கட்டுவதில் முனைப்புடன் ஈடுபடும் ஹஷிம்.
விளையாட்டு மட்டைகளின் நரம்புகளைக் கட்டுவதில் முனைப்புடன் ஈடுபடும் ஹஷிம். - படம்: அனுஷா செல்வமணி

பெரும்பாலும் நாள்தோறும் தமது குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஹஷிம் செய்யும் பல வேலைகளில், மட்டையில் நரம்புகளைப் பிணைப்பதும் ஒன்று.

கடந்த 1982ல் தம் தந்தை தொடங்கிய இத்தொழிலை இன்று தம் சகோதரருடன் சேர்ந்து நடத்திவரும் ஹஷிம் இளவயதில் கற்றதும் பல, பார்த்ததும் பல.

‘ஸ்மேஷ்ஸ்போர்ட்ஸ்’ (Smashsports) கடையில் மட்டை விளையாட்டுகள் சார்ந்த அனைத்துப் பொருள்களும் விற்பனைக்கு உள்ளன. மட்டையின் நரம்புகளைப் பிணைக்கும் சேவையும் வழங்கப்படுகிறது.

பழைமையான கடைத்தொகுதியாக இருக்கும் குவீன்ஸ்வே கடைத்தொகுதியில் காலப்போக்கில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடைக்காரர்கள் தொழிலில் தாக்குப்பிடிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடும்பத் தொழிலுக்கு ஏற்றம் தந்துள்ள ஹஷிம், தம் கடைக்குச் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களையும் தாண்டி வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வருகிறார்.

அதற்கு முக்கியக் காரணமே சமூக ஊடகத் தளங்களில் அவர் பதிவேற்றம் செய்யும் காணொளிகள்தான்.

தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்களில் ‘ஸ்மேஷ்ஸ்போர்ட்ஸ்’ என்று தேடிப் பார்த்தாலே மில்லியன்கணக்கில் மக்கள் பார்த்து மகிழ்ந்த காணொளிகள் வலம்வரும்.

“2022ஆம் ஆண்டு விளையாட்டாக மட்டை நரம்புகளைக் கட்டுவது, கடைகளில் விற்கும் பொருள்களை விளம்பரப்படுத்துவது போன்ற காணொளிகளை பதிவேற்றம் செய்தேன். காலப்போக்கில் பலர் கவனத்தை அக்காணொளிகள் ஈர்க்கத் தொடங்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை,” என்றார் ஹஷிம்.

இதனால், வருவாய் ஏறத்தாழ 20 விழுக்காடு அதிகரித்ததாகச் சொன்ன ஹஷிம், படிக்கும் வயதில் குடும்பத் தொழிலில் ஈடுபடுவதை பெருமையாகக் கருதுகிறார்.

ஐந்து வயதிலிருந்து கடைக்குச் செல்லும் ஹஷிம் ‘ஏ’ நிலைத் தேர்வுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயில இடம் கிடைத்தபோதிலும், தேசிய சேவை புரிந்த பிறகு குடும்பத் தொழில்தான் தமது எதிர்காலமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார்.

20 வயதில் குடும்பத் தொழிலில் இறங்க முடிவெடுத்தார் ஹஷிம்.
20 வயதில் குடும்பத் தொழிலில் இறங்க முடிவெடுத்தார் ஹஷிம். - படம்: அனுஷா செல்வமணி

வணிக நுணுக்கங்களிலிருந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வழிகள்வரை கற்றறிந்த ஹஷிம், இந்தக் காலகட்டத்தில் தொழில் நடத்த சமூக ஊடகங்கள் பெரிதும் கைகொடுப்பதாகக் கூறினார்.

மட்டைகளின் நரம்பைக் கட்டும் திறனைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட அவர், அதனை 15 வயதில் முழுமையாகக் கற்றுத்தேர்ந்ததாகக் கூறினார். பின்னர் திறனுக்கு முறையான அங்கீகாரம் பெற குடும்பத்தினர் ஜெர்மனி சென்று சான்றிதழ் பெற்றனர்.

அந்தச் சான்றிதழ், ஐரோப்பிய மட்டை நரம்பு கட்டுவோர் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

நரம்புகளைக் கட்டும் நுணுக்கத்தை விளக்கிய ஹஷிம், அது எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய திறனாக இருந்தாலும், நரம்புகளின் பின்னல்நயம், நரம்பின் இறுக்கம் ஆகியவற்றையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றார்.

நான்கு பிள்ளைகளில் கடைக்குட்டியான ஹஷிம், தம் அண்ணன் 30 வயது முகம்மது முஹையதீனுடன் இணைந்து தொழில் செய்கிறார்.

காணொளிகளை எடுக்க அண்ணன் அவ்வப்போது உதவி வருவதாகக் கூறிய ஹஷிம், ஒருமுறை தம் தாயார் எடுத்த காணொளி ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டியதை உணர்ச்சிபொங்க நினைவுகூர்ந்தார்.

பல நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தாலும் அண்மையில் மொரிஷியஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தம் காணொளிகளைப் பார்த்து வாடிக்கையாளர்கள் வந்ததை எண்ணி நெகிழ்ந்தார் ஹஷிம்.

அண்ணனுடன் இணைந்து தொழில் நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் விட்டுக்கொடுப்பது போன்ற நற்பண்புகளையும் தொழில் தமக்குக் கற்றுத்தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டு மட்டைகள் இக்குடும்பத்தை கடையைத் தாண்டி வீட்டிலும் இணைக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினர் அனைவரும் பூப்பந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.

குடும்பத் தொழில் தங்கள் பரம்பரைச் சொத்து என்ற ஹஷிம், தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முனைப்புடன் இயங்கி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்