ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொது வரவேற்பு தினம் ஜனவரி 8 முதல் 10 வரை நடைபெற்றது.
ஏழு துறைகளும் 40 சாவடிகளும் இடம்பெற்றிருந்த அந்த நிகழ்விற்கு நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்தனர்.
மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு துறைகளிலிருந்து இருவழித் தொடர்புச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
செயற்கை நுண்ணறிவு துணையுடன் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதர்கள், ஆளில்லா வானூர்திகள் (drones), வலையொளிகள் (podcasts) உருவாக்கப்படும் பின்னணி, இணைய பாதுகாப்பு உதவி (cyber escape) அறை, விமானத்தின் உட்புறத்தைக் காண்பதற்கான வாய்ப்பு என நிகழ்வில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள், இணைப்பாடச் செயல்பாடுகளான (CCA’s) தற்காப்புக் கலைகள், மலாய் நடனம் ஆகியவற்றின் சிறப்புத் தொகுப்பும் இடம்பெற்றது.
பொது வரவேற்பு தினத்திற்கு வந்திருந்த நீ ஆன் உயர்நிலைப் பள்ளி மாணவி நித்திலா,15, “இந்நிகழ்ச்சி இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சுவாரசியமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார்.
“இங்கு அமைந்துள்ள சாவடிகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் வகையில் உள்ளன. இங்கிருந்த முப்பரிமாண அச்சு (3D printing), சிறப்பு ஒப்பனை அங்கங்கள் ஆகியன எனக்கு மிகவும் பிடித்திருந்தன,” என்றார் செங்காங் உயர்நிலைப் பள்ளி மாணவி பிரியாவாஷ்ணா, 16.
ரிவர்சைடு உயர்நிலைப்பள்ளி மாணவி சுருதி, 15, “பல்வேறு துறைகளின்கீழ் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும், பல துறைகளின் கூறுகளை நேரடியாக அனுபவித்தது மகிழ்ச்சி அளித்தது,” என்றார்.

