சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான தீர்வுக்கும், மனித உறவுகளின் அவசியத்திற்கும் கவிதைவழி விடை தேட முயன்றனர் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவியர்.
அவர்களின் தேடலுக்குக் கைகொடுத்தார் தமிழக கவிஞர் மகுடேசுவரன். உயர்நிலை இரண்டு, மூன்று மாணவியரின் தமிழ் வகுப்பு நேரத்தில் கவிஞருடனான கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மாணவியரிடம் கவியார்வத்தைத் தூண்டிய இக்கலந்துரையாடல்கள், ஆகஸ்ட் 16, 20ஆம் தேதிகளில் தமிழ்ப் பட்டிமன்ற கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன.
ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் தமிழ் வகுப்புகளில் கவியுணர்வு மேலோங்குவது வழக்கம். கவிதை எழுதுதல், கலந்தாராய்தல்களில் தமிழாசிரியர் திரு கும்பலிங்கம் உத்தமன், மாணவியரைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார்.
வகுப்பில் கற்றவற்றைப் பயனாக்கும் வண்ணம் கவிஞர் மகுடேசுவரனின் ‘எழில் நயம்’ கவிதை நூலிலிருந்தும் இணையத்திலிருந்தும் எடுக்கப்பட்ட 25 கவிதைகளில் சிலவற்றைக் கவிஞர் முன்னிலையில் மாணவியர் வாசித்து, உட்பொருளை அலசி ஆராய்ந்தனர்.
உருவகப் பயன்பாடு, சமூகவியல் கருத்துகள், கவிநயம் முதலியவற்றைப் புரிந்துகொண்டு பலவித கேள்விகளையும் அவர்கள் எழுப்பினர்.
‘குறைகூறி’, ‘பிச்சைக்காரன் என்று சொல்ல முடியுமா’, ‘சிதையா நெஞ்சுகொள்’ என கவிஞரின் பல படைப்புகளைத் தங்களின் கருத்துகளோடும் மாறுபட்ட பார்வையோடும் மாணவியர் முன்வைத்தது ஆர்வமூட்டும் கலந்துரையாடலுக்கு வழிவகுத்தது.
“கவிதை எழுதும்போது நடந்த சில சுவையான அனுபவங்களைக் கவிஞர் பகிர்ந்துகொண்டார். மிக எளிமையாகச் சமூகக் கருத்துகளைக் கவிதையின்மூலம் தெரிவிக்கலாம் என நான் உணர்ந்தேன். கவிஞர் கூறியதுபோல இன்னும் பல கவிதை வாசிக்கவேண்டும், கவிதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலோங்கியுள்ளது,” என்றார் உயர்நிலை இரண்டு மாணவி க.ப. மதுஶ்ரீ.
கவிதைக்கான வித்து எந்த ஓர் அனுபவத்தையும் குறித்த வேறுபட்ட கண்ணோட்டமே. சிறியதை பூதாகரமாக்குவது, பெரியதை ஒரு புள்ளியாக்குவது என முரண்படுத்துவதில் கவிநயம் பிறக்கிறது என்றார் கவிஞர் மகுடேசுவரன்.
இத்தகைய பகிர்வு பல கோணங்களில் ஒரு கவிதையைப் பொருள்புரிந்து அணுகுவதற்கு உதவியதாகத் தெரிவித்தார் உயர்நிலை மூன்று மாணவி கார்த்திகேயன் திவ்யதர்சினி. தமிழ்ப்பாடத்துக்கு இப்பகிர்வு சுவையூட்டியதாகவும் அவரின் சக மாணவியர் உணர்ந்தனர்.
மாணவர்கள் ஒரு படைப்பின் ஆழத்துக்குச் செல்ல இவ்வகை நிகழ்வுகள் வாய்ப்பளிப்பதால், அவை அவர்களின் தமிழார்வத்தைக் கூட்டி பயனளிப்பதாகக் கூறினார் திரு கு. உத்தமன். கவிஞர் மகுடேசுவரனின் படைப்புகளில் கையாளப்படும் சொல்லாட்சி, இளையருக்குப் புரியும்படியாக எளிமையாக இருந்தாலும் அவை உணர்த்தும் பொருள் மிக ஆழமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மாணவர்கள் இலக்கணம், இலக்கியம், கவிநயம் குறித்து கேட்ட நுட்பமான கேள்விகளின்மூலம் அவர்கள் தமிழின்மீது கொண்டுள்ள ஈடுபாடும், மொழி வல்லமையும் தெரிகிறது. அவர்கள் படைப்பாளர்களாக உருவாவதற்கு உணர்ச்சிகளுக்கு மொழி வடிவம் தரும் பழக்கம் ஏற்படவேண்டும்; அதையே நான் பரிந்துரைத்தேன்,” என்றார் கவிஞர் மகுடேசுவரன்.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கவிஞர் மகுடேசுவரனின் ‘சிங்கப்பூர் - கண்டதும் கற்றதும்’ நூல் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியீடு கண்டது. அவ்விழாவின் துணை ஏற்பாட்டாளரான தமிழ்ப் பட்டிமன்ற கலைக்கழகம் தொடர்ந்து, ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி, ராஃபிள்ஸ் கல்விநிலையம், ஈசூன் உயர்நிலைப் பள்ளி, காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கவிஞருடனான மாணவக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.