புகை என்பது பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாக, சுற்றியுள்ளவர்களின் கவனத்தைக் கவரும் விதமாகத் தோன்றக்கூடும்.
ஹூக்கா, சீஷா, சுருட்டு, சிகரெட் முதலியவற்றின்பால் பலர் கொண்டுள்ள ஈர்ப்பை இது காட்டுகிறது.
ஆனால், புகையோ பார்வையை மயக்கி, புலன்களைச் சலனப்படுத்தி முடிவில் ஒன்றுமில்லாமல் மறைகிறது.
சில ஆண்டுகளுக்குமுன், சிகரெட்டைக் காட்டிலும் மின்சிகரெட் பாதிப்பு குறைந்தது என்ற கட்டுக்கதை பரவலாக இருந்தது. அதனை நம்பி, ஆழம் அறியாமல் காலை விட்டவர்களுக்கு காத்திருந்தது ஆபத்து.
இந்தியர்களிடையிலும் அதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. அடிக்கடி சந்தித்து மதுப்புழக்கம், சீட்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது புகைப்பழக்கமும் கலந்துவிடுகிறது.
இளையர்களைச் சீரழிப்பதில் பெரியவர்களுக்கும் பங்குள்ளது.
2024 ஜனவரிக்கும் 2025 மார்ச்சுக்கும் இடையே கிட்டத்தட்ட 2,600 மாணவர்கள் மின்சிகரெட் புகைப்பதாக அவர்களது பள்ளிகளே சுகாதார அறிவியல் ஆணையத்திடம் புகார் அளித்தன.
இந்நிலையில், போதைப்பொருள் தோய்ந்த மின்சிகரெட்டுகளின் புழக்கம் குறித்த கவலை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் பாதிப்பு குறித்து அறிந்துகொள்வதற்குமுன் இளையர்களை வசப்படுத்தி, பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக்குகிறது, மறைவிலிருந்து இயங்கும் கும்பல்களின் சதி.
ஒரு காலத்தில் ‘கேபோட்ஸ்’ புழங்கிய (அடையாளம் வெளியிட விரும்பாத) இளையர், அதற்காக நாள்தோறும் 60 வெள்ளி புழங்கியதாகக் கூறினார்.
மாதத்திற்கு ஆயிரம் வெள்ளிக்குமேல் செலவு வைக்கும் இப்பழக்கம் தேவைதானா என்பது பற்றி ஒருவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
போதைப்பொருளுக்கு அடிமையாகாதவரை, அதனை நுகர்ந்து பார்ப்பதில் தவறில்லை என்று 18 - 30 வயதிற்கு இடைப்பட்டோரில் 18 விழுக்காட்டினர் நினைப்பதாக போதைப்பொருளுக்கு எதிரான தேசிய மன்றம் 2020ல் வெளியிட்ட கருத்தாய்வு குறிப்பிடுகிறது.
நஞ்சை ஒருமுறை உட்கொண்டு பார்ப்போமே, இறவாமல் மட்டும் நாம் நம்மைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்து, அறிவார்ந்ததன்று.
ஐந்துமுறை மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்ட 15 வயது இளையர், 24 மாதங்களைச் சிங்கப்பூர் சிறார் இல்லத்தில் கழிக்கும்படி நீதிமன்றம் அண்மையில் தண்டனை விதித்தது.
சட்ட நடவடிக்கையால் மட்டும் இப்பிரச்சினையைக் கையாள முடியாது என்று உள்துறை, சட்ட அமைச்சு ஆகியவற்றுக்கான அரசாங்க நாடாளுமன்றச் செயற்குழுவை வழிநடத்தும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இம்மாதம் அளித்த நேர்காணலின்போது தெரிவித்தார்.
“மின்சிகரெட்டுகளை விற்கும் டெலிகிராம் ஒளிவழிகளை முடக்க அமைப்புகளால் முடியும். அவற்றை விற்பவர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆயினும், இது குறித்து விழிப்புணர்வூட்டுவது முக்கியம். இளையர்களில் பலரும் அதன் கடுமையை அறிந்திருக்கவில்லை,” என்று திரு விக்ரம் கூறினார்.
சுற்றியுள்ளவர்களால் ஏமாற்றம் அடைய வேண்டாம்
முரட்டுத்தனமாக, எதற்கும் துணிந்தவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் தன்மை இளையர்களிடையே அதிகம் தென்படுவதைக் காண முடிவதாக உளவியல் சிகிச்சை நிலையம் (Centre for Psychotherapy) என்ற அமைப்பைச் சேர்ந்த மூத்த மனநல ஆலோசகர் கோபால் மஹே சுட்டினார்.
“பொதுவாகவே இளையர்கள் பலரிடத்தில் மின்சிகரெட் புழக்கம் கூடியுள்ளது. அவர்களில் இந்திய இளையர்களும் அடங்குவர். பத்து வயதிலேயே சிலர் மின்சிகரெட்டுகளைப் புழங்குகின்றனர்,” என்று திரு கோபால் கூறினார்.
கவரவல்ல வடிவமைப்பு, பழச்சுவை, சமூக ஊடகங்கள் ஆகியவற்றால் மின்சிகரெட் புழக்கத்தால் உல்லாசமாக இருப்பதைப் போலச் சித்திரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பள்ளிப்பாட வகுப்புகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் அவற்றை நாடக்கூடும். நீண்டகால விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்படும் செயல்கள் அவை,” என்றார் திரு கோபால்.
மின்சிகரெட் இளையர்களின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பதற்றத்தை அதிகரித்து உணர்வுசார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று அவர் எச்சரித்தார்.
“இளையர்களை அவமானப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுடன் வலுவான தொடர்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கான பாதுகாப்பான இடங்களை உருவாக்கவேண்டும். மின்சிகரெட் புழக்கத்தின் பின்னணியில் உணர்வுசார்ந்த காரணங்கள் இருக்கும்,” என்றார் திரு கோபால்.
பெற்றோர்களையும் சமூகத் தலைவர்களையும் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பல நேரங்களில் மின்சிகரெட்டுகள் பார்ப்பதற்கு விரலி அல்லது பேனாக்கள் போல காணப்படுகின்றன.
திரு கோபால் பரிந்துரைக்கும் சில தீர்வுகள்
ஆதரவு தர முனையுங்கள்: உடனடியாக தண்டிப்பதை விடுத்து, அவர்கள் எவ்வாறு இந்தப் பழக்கத்திற்கு அடிமையானார்கள், என்னவெல்லாம் அவர்களை மன உளைச்சலுக்குத் தூண்டுகின்றன என்பதைக் கண்டறியுங்கள்.
கலந்துரையாடல்கள்: மின்சிகரெட் பற்றிய கலந்துரையாடல்களை இளையர்களே வழிநடத்தட்டும். பல நேரங்களில் அதிகாரமுள்ளவர்களைக் காட்டிலும், அவர்கள் சக இளையர்களின் சொல் பேச்சைக் கேட்கின்றனர்.
குடும்ப ஈடுபாடு: மின்சிகரெட்டுகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றோர்க்கு அதிகரிக்கலாம்.
புகழாளர்கள் ஆதரிக்கலாம்: இந்திய சமூகத்தினரைச் சேர்ந்த புகழாளர்கள், முன்மாதிரிகள் ஆகியோர் மின்சிகரெட்டுக்கு எதிராகக் குரல்கொடுக்கலாம்.
வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்வது முடிவுகளே
இளையர்களைப் பேணி, நன்னெறி புகட்ட குடும்பமோ சமூகமோ தவறினால், தங்களது அடையாள வெற்றிடத்தை நிரப்ப அவர்கள் மற்றவற்றை நாடத் தூண்டப்படலாம் என்று மனநல ஆலோசகரும் முன்னாள் பள்ளி ஆசிரியருமான அயுப் பிபி ஜான், தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
உறவினர்கள், அண்டை வீட்டார் என மிக நெருக்கமானவர்கள் பலரும் ஒன்றாக மின்சிகரெட் புழங்கும்போது அது வாழ்க்கைமுறையுடன் இணைந்துவிடுவதாக திருவாட்டி பிபி ஜான் குறிப்பிட்டார்.
இத்தகைய தருணங்களில் அறிவுடன் சிந்தித்து நடந்துகொள்வது முக்கியம். சுற்றுச்சூழலுக்கு நீங்கள் உங்களை விட்டுக்கொடுத்தால் நிலைமை அவ்வளவுதான். ஆனால், 13, 14 வயதில் ஒருவர் எது நல்லது, எது தீயது என நீங்களே அடையாளம் காண முடிந்தால் அது அவரது அறிவுமுதிர்ச்சியைக் காட்டுகிறது.
“மின்சிகரெட்டுகளைத் தவிர்க்கும்படி போதிப்பதற்குப் பதிலாக நடைமுறை சார்ந்த விளக்கங்களை பெரியவர்கள் வழங்கவேண்டும்,” என்று திருவாட்டி பிபி ஜான் கூறினார்.
மாற்றத்தை நம்மிடம் தொடங்காமல் பிறரை மாற்ற முடியாது என்கிறார் இவர்.
“போதனைகளை இளையர்கள் விரும்புவதில்லை. மின்சிகரெட் மட்டுமின்றி, எவ்வகை மயக்கப் பொருள்களுக்கும் அடிமையாகாதபோது வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கும் என்பதை நாம்தான் சொல்லிலும் செயலிலும் காட்டவேண்டும்,” என்பதே இவரது அறிவுரை.

