சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் மின்னியல் பொறியியலில் இளநிலை பட்டக்கல்வி பயிலும் 20 வயதான ஹன்சினி பிரிஷா சிங்கப்பூர் பொறியியாளர் கழகத்தின் (Institute of Engineers) கல்வி உபகாரச் சம்பளத்தை இவ்வாண்டு பெற்றவர்களில் ஒருவர். “என்னுடைய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் போட்டி ஒன்றில் சேர என்னை ஊக்குவித்தார். உணவுக் கழிவை சமாளிப்பது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஆராய்ச்சி, மூலமாதிரி (prototype) ஆகியவற்றை செய்யவேண்டியிருந்தது. அப்போதுதான் பொறியாளர்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்ப்பவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். எனக்கு அதில் ஆர்வம் இருந்ததையும் உணர்ந்தேன்,” என்று தாம் பொறியியல் துறைக்கு அறிமுகமான தருணத்தைப் பகிர்ந்துகொண்டார் ஹன்சினி.
அப்போட்டியில் சிறப்புத் தேர்ச்சி விருது பெற்று சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உபகாரச் சம்பளத்துடன் சேரும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், பொறியியல் துறையில் உள்ள தனது ஆர்வம் குறித்த குழப்பத்தின் காரணமாக அந்த வாய்ப்பை அப்போது அவர் தவறவிட்டார்.
வாய்ப்புகள் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். ஆனால், ஹன்சினிக்கோ அந்த வாய்ப்பு இருமுறை கிட்டியது. முதலில் கை நழுவிப்போன வாய்ப்பு மீண்டும் ஹன்சினியின் கைக்குத் திரும்ப வந்தது.
சிங்கப்பூரின் பொறியாளர் கழகம் மேலும் அதிகமான பொறியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த போட்டிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.
ஒரு பொறியாளருக்கு அறிவாற்றல் மட்டும் போதாது; பொறியியல் சார்ந்த திறன்களையும் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும் என உணர்ந்த ஹன்சினி, போட்டிகள், திட்டப்பணிகள் எனப் பலவற்றில் ஈடுபட்டார்.
“படிப்புக்கும் போட்டிகளுக்கும் சம முன்னுரிமைக் கொடுத்தேன். போட்டிகளில் பங்கெடுப்பது வகுப்பறைக்கு அப்பால் கற்றல் தொடரவேண்டும் என்பதற்காகவே. அதே நேரத்தில், ஒரு பொறியாளராக என்னுடைய திறன்களையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார் அனைத்துலக தரநிலை ஒலிம்பியாட் (International Standards Olympiad) போன்ற அனைத்துலகப் போட்டிகளில் பங்கெடுத்துள்ள ஹன்சினி.
செயற்கை நுண்ணறிவு பலரின் வேலைகளை பறித்துவிடும் என்ற அச்சம் பலரிடையே காணப்படும் வேளையில், பொறியியல் துறையை பொருத்தமட்டில் பொறியாளர்களுக்கான தேவை என்றும் இருக்கும் என்றார் ஹன்சினி.
உணவுக் கழிவு நெருக்கடி, சிங்கப்பூரின் ஒரே குப்பைக் கிடங்கான செமக்காவ் தீவு நிரம்பி வருவது போன்ற சவால்களைச் சுட்டிய ஹன்சினி, தொழில் முனைப்பு, ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றில் தாம் கொண்டுள்ள ஆர்வத்தை சுற்றுச்சூழல் அறிவியலுடன் இணைய எண்ணம் கொண்டுள்ளதாகப் பகிர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த உபகாரச் சம்பளம் என்னுடைய கடின உழைப்பின் பிரதிபலிப்பாகவும் நான் சரியான பாதையில் செல்கிறேன் என்ற நினைவூட்டலாகவும் கருதுகிறேன்,” என்று நன்றியுணர்வுடன் பகிர்ந்துகொண்ட ஹன்சினி, புத்தகங்களைத் தாண்டி போட்டிகள் போன்ற வாய்ப்புகளின் மூலம் தாம் பரந்த அறிவைப் பெற முடிவதைச் சுட்டினார்.
ஆண்கள் அதிகம் காணப்படும் பொறியியல் துறையில் கால்பதிப்பதன் சவால்கள் பற்றிக் குறிப்பிட்ட ஹன்சினி, இத்துறையில் பெண்கள் அதிகம் சேர்வதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“ஆண்கள் அதிகம் உள்ள துறையில் இருப்பது எளிதன்று. நம் திறமையை மெய்ப்பிக்க அதிகம் உழைக்க வேண்டும். நாம் செய்யும் வேலையே நம் திறமையை வெளிக்காட்டும். எனவே, வேலையின் மிகச் சிறந்து விளங்க வேண்டும்,” என்றார் ஹன்சினி.
“இந்தச் சிறு வயதில் ஹன்சினி இவ்வளவு சாதனை புரிந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. திட்டப்பணிகளின்போது அவளுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால், உடனடியாகத் தீர்வளிக்காமல் வழிகாட்டுவேன். அது அவள் சுயமாக சிந்திக்க வழிவகுக்கும்,” என்றார் ஹன்சினியின் தந்தை நா. கண்ணன், 60.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகள் தங்களுக்கான பாதைகளை தீர்மானஇக்கும் சுதந்திரத்தை கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் பொறியாளரான அவர்.

