வேர்களைக் காக்கும் விழுதுகள்

வேர்களைக் காக்கும் விழுதுகள்

3 mins read
இளங்கலைஞர்களின் கலாசார மரபுடைமைக்கான அர்ப்பணிப்பு
e9d5805a-1f66-4f7c-aae9-27eba1214e98
பானுப்ரியா பொன்னரசு. - படம்: தேசிய மரபுடைமைக் கழகம்

வழக்கமாக இந்தியக் குடும்பங்களில் பெண் பிள்ளைகள் இளவயதில் கலைகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால் ஆடல் பாடல் வகுப்புகளுக்குச் செல்வதுண்டு.

அப்படித்தான் பானுப்ரியா பொன்னரசுக்கும் அவரது பரதநாட்டியப் பயணம் தொடங்கியது.

தொடக்கத்தில் அவருக்கு அக்கலை மீது ஆர்வம் பெரிதாக இல்லை என்றாலும் காலப்போக்கில் காலஞ்சென்ற கலாசாரப் பதக்க விருதாளர் நீலா சத்தியலிங்கம் பானுப்ரியாவுக்கு பரதநாட்டியம் மீதான ஆர்வத்தை விதைத்தார்.

“நான் மற்றவற்றை நாடிச் செல்ல நினைத்த தருணங்களில் எல்லாம் பரதக்கலை என்னைத் தொடர்ந்து தன்வசம் சுண்டியிழுத்தது,” என புன்முறுவலுடன் 35 வயது பானுப்ரியா கூறினார்.

இன்று பானுப்ரியா பரதநாட்டியம், கதக் நடனங்களில் சிறப்புப் பயிற்சி பெற்று, பாரம்பரிய இந்திய நடனக் கலைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பன்முகக் கலைஞராக விளங்குகிறார்.

நடனக் கலைஞர், கலாசார ஆர்வலர், கலைக் கல்வியாளர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை பானுப்ரியா வகிக்கிறார்.

சமூகக் கட்டமைப்பு, பன்முகக் கலாசாரப் பரிமாற்றம், மனநல மேம்பாடு ஆகியவற்றுக்கான தளத்தையும் இந்திய நடனக் கலைகள் வழங்குவதாக இவர் கூறுகிறார்.

“நடனக் கல்வியாளராக ஆன பிறகு நடனம் என் வாழ்வில் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்ற முனைப்பு வந்தது,” என்றார் பானுப்ரியா.

இளைய தலைமுறையினருக்கான திறந்த உரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் பாரம்பரிய கலைகள் முக்கியப் பங்காற்றுவதாக பானுப்ரியா கருதுகிறார்.

அண்மையில் தேசிய மரபுடைமைக் கழகம் முதன்முறையாக வழங்கியுள்ள தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமையில் சிறந்த இளையர் விருதை பானுப்ரியா பெற்றிருக்கிறார்.

“நான் இதுவரை ஆற்றிய பணிகளை அங்கீகரிப்பதாலும் மிக முக்கியமாக என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள், கலைத்துறை நிபுணர்கள், கலைஞர்கள் எனது கலைப் பயணத்திற்கு அளித்த ஆதரவை உறுதிப்படுத்துவதாலும் இந்த விருது எனக்கு மிகவும் முக்கியமானது,” என்றார் பானுப்ரியா.

இவர் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ‘ஸ்கார்லெட் மேளா கலை விழாவை’ நிறுவினார்.

இத்திட்டம் பல்வேறு இனங்களைச் சேர்ந்த வளர்ந்து வரும் பாரம்பரியக் கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதோடு இந்திய நடனம் உள்ளிட்ட பாரம்பரியக் கலை வடிவங்களின் பண்பாட்டுச் சாரத்தைப் புதிய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தவும் செய்கிறது.

கல்வி அமைச்சு பள்ளிகளிலும் நடன ஆசிரியராக இருக்கும் பானுப்ரியா ‘மண்டலா ஆர்ட்ஸ்’ எனும் நடனக் குழுவையும் உருவாக்கினார்.

கற்றலுக்கும், உணர்வு சார்ந்த நலத்திற்கும் முன்னுரிமை அளிக்க இந்தக் குழு முற்படுகிறது.

சிங்கப்பூரில் பரதநாட்டியத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதாகக் கூறும் இவர், அக்கலை தொடர்ந்து பரிணாமம் காணும் என்றும் நம்புகிறார்.

பானுப்ரியா போல விருது பெற்ற மற்றொருவர் புல்லாங்குழல் கலைஞர் நிரஞ்சன் பாண்டியன், 32.

நிரஞ்சனின் குழல் கானம், கேட்பவரை மெய்மறக்கச் செய்கிறது. தெரிந்த பாடலில் இவரது வாசிப்புப் புதுமை புகட்டுகிறது.

நிரஞ்சன் பாண்டியன்.
நிரஞ்சன் பாண்டியன். - படம்: தேசிய மரபுடைமைக் கழகம்

குழலூதும் கண்ணபிரானின் எழில்மிகு உருவம், புராணங்களுடன் பிணைந்துள்ள மரபு ஆகியவை தம்மை எப்போதும் ஈர்த்ததாக நிரஞ்சன் கூறினார்.

12 வயதில் புல்லாங்குழல் கற்கத் தொடங்கிய இவர், சிங்கப்பூர் இந்திய இசைக் குழு, பாடகர் குழு, ஆசிய கலாசார ‘சிம்ஃபொனி’ இசைக் குழு, சிங்கப்பூர் ‘சிம்ஃபொனி’ இசைக் குழு போன்ற முன்னணி இசைக் குழுக்களில் அங்கம் வகித்துள்ளார்.

வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வரும் இளங்கலைஞர்கள் ஒன்றாக இணைந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் வளர்ச்சியடையவும், ‘சிங்கநகர கன்டெம்பரரி ஆர்கெஸ்ட்ரா’, ‘என்பி கலெக்டிவ்’ ஆகிய தளங்களை இவர் உருவாக்கினார்.

பலபாணிப் படைப்புகளுக்காக மலாய், சீன இசைக் கலைஞர்களுடன் பணியாற்றுவதாகவும் நிரஞ்சன் கூறினார்.

பாரம்பரியக் கலைகளை பாதுகாப்பதில் இளையர்களின் பங்கு மிக முக்கியம் என்ற இவர், இளையர்கள் தங்களின் அடையாளத்தையும் வேர்களையும் தேடிக் கண்டுபிடிக்க கலைகள் உதவுவதாக தெரிவித்தார்.

தமது இசைக் குழுக்கள், திட்டங்களில் இளங்கலைஞர்களை முனைப்புடன் ஈடுபடுத்துவதோடு, ஒலிப் பொறியியல், இசையமைப்பு போன்ற பல்வேறு பொறுப்புகளிலும் அவர்களைப் பங்குகொள்ளச் செய்கிறார் நிரஞ்சன்.

பழங்கலைகளிலும் புத்தாக்கம் புகுத்த முடியும் என்பதற்கு இவ்விருவரின் அணுகுமுறைகள் எடுத்துக்காட்டு. பட்டை தீட்டப்பட்ட வைரம் போல, பயிற்சியின்வழி இவ்விருவரின் திறன்களும் ஒளிசிந்துகின்றன.

உலகத்தின்மீதும் உணர்வுகளின்மீதும் இவர்கள் கொண்டுள்ள கவனமும் சிந்தனைகளும் அவர்களின் கலைப்படைப்புகளுக்கு மெருகேற்றுகின்றன.

குறிப்புச் சொற்கள்