ஆண்களின் சவால்கள், உணர்வுகளை எடுத்துரைத்த ‘துழவு’ நாடகம்

2 mins read
2c699b19-d2ce-477b-a973-6a8bb103d0e3
‘துழவு’ நாடகத்தின் முன்னணி நடிகர்கள் ஸ்ரீராஜ் கமல் ராதாகிருஷ்ணன், 19, ஜெகன் ஓவியா, 18. - படம் : நந்தன் சிவபிரகாஸ்

காண வந்திருந்தோரை  மனம் நெகிழ வைத்தது சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்திய கலாசார மன்றத்தின் சமர்ப்பணம் மேடை நாடகம், ‘துழவு’.

ஆடல், பாடல், நடிப்பு என பல்சுவை நிறைந்த ‘சமர்ப்பணம்’ நிகழ்ச்சி ஏப்ரல் 4ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்தேறியது.

சமர்ப்பணத்தின் இந்த ஆண்டு நாடகமான ‘துழவு’ ஆண்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் அவர்களின் மனபலத்தையும் ஆராயும் வண்ணம் அமைந்தது.

இளம் வயதிலிருந்து பள்ளி, தேசிய சேவை, வேலை, திருமணம், பிள்ளை வளர்த்தல் வரை ஓர் ஆண் எதிர்கொள்ளும் சவால்களை அர்ஜுன் எப்படிக் கையாளுகிறார் என்பது கதை.

ஆண்களின் உணர்ச்சிபூர்வமான வாழ்க்கை அனுபவங்களை மேடைக்குக் கொண்டு வந்தது பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்று தெரிவித்தனர். 

உணர்ச்சிபூர்வமான காட்சிகளுடன் நாடகத்தின் நகைச்சுவை அங்கங்களும் பாராட்டைப் பெற்றன.

நகைச்சுவைக் காட்சிகள் நினைத்து நினைத்துச் சிரிக்க வைத்ததாகக் கூறினார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி கீர்த்தனா முத்தரசு, 20.

நாடகத்தை எழுதி, இயக்கிய 21 வயது ராமகிருஷ்ணன் புவனா, நாடகத்தின் மூலம் ஆண்களின் உணர்ச்சிகளுக்கு அங்கீகாரம் கொடுத்ததாகக் கூறினார்.

இளையர்களால் ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற நிகழ்ச்சிகள் சமுதாயச் சிந்தனைக்குப் பங்களிப்பதாக குமாரி புவனா குறிப்பிட்டார்.

“இளையர்களால்  மாற்றத்தை உருவாக்க முடியும், தலைமைத்துவத்தை ஏற்க முடியும்,” என்று குறிப்பிட்டார் நாடகத்தின் தயாரிப்பாளரும் மன்றத்தின் தலைவருமான நோஎல் பெண், 24.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி இந்திய கலாசார குழுவின் மரபை மீண்டும் நிலைநிறுத்துவது நோக்கம் என்றார் நாடகத்தின் தயாரிப்பாளர் நோஎல்.

1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமர்ப்பணம் நிகழ்ச்சி, ஆறு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு மேடையேறியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாடகத்தை மேடையேற்றுவது மாணவர்களுக்குத் தயக்கத்தை ஏற்படுத்தினாலும் அவர்களின் கடும் உழைப்பினாலும் நாடகம் நடந்தேற வேண்டும் என்ற ஆர்வத்தாலும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது என்றார் நோஎல்.

“இதுபோன்ற மேடை நாடகங்கள், இளையர்களின் சிந்தனைகளையும் சவால்களையும் வெளிப்படுத்தும் களமாக அமைகின்றன,” என்று கூறினார் கீர்த்தனா.

“எனவே, மாணவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு இளையர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்