தமிழ் அடையாளத்தைப் பறைசாற்றிய ‘சங்கமம் 2026’

தமிழ் அடையாளத்தைப் பறைசாற்றிய ‘சங்கமம் 2026’

2 mins read
af14b978-753f-489d-bfce-8e2d0d47c1e5
ராஃபிள்ஸ் கல்விநிலையத்தில் மேடையேறியது ‘சங்கமம் 2026’ கலை நிகழ்ச்சி. - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தாய்மொழித் தமிழே’ என்று முழங்கும் வண்ணம் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் மே 23ஆம் தேதி மேடையேறியது ‘சங்கமம் 2026’ கலை நிகழ்ச்சி.

கல்வி நிலையத்தின் இந்தியக் கலாசார மன்ற ஏற்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக ‘செந்நிற வானம்’ மேடை நாடகம் படைக்கப்பட்டது.

‘செந்நிற வானம்’ மேடை நாடகக் காட்சி.
‘செந்நிற வானம்’ மேடை நாடகக் காட்சி. - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

இந்த மேடை நாடகத்தின் கதைக்களம் இலங்கைப் போரின் பின்னணியில் படைக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார் நாடகத்தின் இயக்குநர் கண்ணன் ஜோவேஷ் பிரியன், 18.

“தமிழர்கள் என்ற அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் நம் முன்னோர்கள் கடந்து வந்த பாதையை எடுத்துக்கூறும் விதமாக இந்த நாடகத்துக்கான யோசனை பிறந்தது,” என்றார் அவர்.

தடைகளைத் தகர்த்து, தமிழர்களாக நமது மொழி, மரபைக் கட்டிக்காக்கும் அவசியத்தைச் ‘செந்நிற வானம்’ நாடகம் உணர்வுபூர்வமான வகையில் சிறிது நகைச்சுவையுடன் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தது.

திரைக்குப் பின்னால் உதவிக்கரம் நீட்டியோர் உட்பட ‘சங்கமம் 2026’ கலைநிகழ்ச்சியில் மாணவர்கள் கிட்டத்தட்ட 50 பேர் ஈடுபட்டனர் என்றார் ராஃபிள்ஸ் கல்விநிலைய இந்தியக் கலாசார மன்றத்தின் தலைவர் ஜெய் கௌசல்யன், 17.

“மன்றத்தில் அதிக மனிதவளம் இல்லாத போதிலும் இந்த நிகழ்ச்சியைச் சாத்தியமாக்க நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முழு முயற்சியுடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது,” என்றார் அவர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் ராஃபிள்ஸ் கல்விநிலையத்தின் முன்னாள் மாணவரும் தற்போது தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியருமான த. ராஜசேகர்.

சிறப்பு விருந்தினர் த. ராஜசேகர் மேடையில் தொடக்க உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் த. ராஜசேகர் மேடையில் தொடக்க உரையாற்றினார். - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனையிலிருந்து ஈட்டப்பட்ட ஒரு பகுதி சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அத்துடன் ஆடல், சுவாரசியமான விளையாட்டு அங்கங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தன.

குறிப்புச் சொற்கள்