செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் உலகில் நிரந்தரமாக வாழ்ந்துவிடமுடியுமா? அப்படிச் செய்தால் உலக வாழ்வில் எதிர்நோக்கும் சவால்களிலிருந்து தப்பித்துவிட இயலுமா?
இக்கேள்விகளுக்கான பதில்களை அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஆராய்ந்தது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் (என்யுஎஸ்) தமிழ்ப் பேரவை ஆகஸ்ட் 1, 2ஆம் தேதிகளில் மேடையேற்றிய ‘சங்கே முழங்கு’ மூன்று மணி நேர நாடகம். 1987ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது 23வது முறையாக இடம்பெற்ற சங்கே முழங்கு நிகழ்ச்சிக்கு இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவளித்தது.
இந்நிகழ்ச்சிக்கு முதல் நாள் ஆயிரம் பேரும் இரண்டாவது நாள் அரங்கு நிறைந்த வகையில் 1,300 பேரும் வந்திருந்தனர்.
நாடகத்தின் தரம், ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று காண வந்த திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபுவையே வியக்கச் செய்தது.
“தயாரிப்புத்தரம் உயர்வாக இருந்தது; சங்கர் படம்போல இருந்தது. மாணவர்கள் தரத்தை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். மாணவர்கள் பொழுதுபோக்காகச் செய்கிறார்கள் எனச் சொல்லமுடியாது, தொழில்முறையாகச் செய்துள்ளார்கள்,” எனப் புகழ்ந்தார் வெங்கட் பிரபு.
முதன்முறையாக ‘சங்கே முழங்கு’ நாடகத்தில் மின்னிலக்கத் திரையும் நகரும் எல்இடி குழலும் (moving LED tube) பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார் பேரவையின் தலைவர் கார்த்திகேயன். சிறப்புக் கூறுகளும் (Special effects) நாடக அனுபவத்தை மெருகேற்றின.
‘உலா’ எனும் மெய்நிகர் உலகைச் சுற்றி கதை அமைகிறது. தன் குறிக்கோளை விரைவாக அடைய எதற்கும் தயாராக இருக்கும் விஞ்ஞானி சேம் ரோயின் உருவாக்கமே ‘உலா’.
மெய்யுலகிலுள்ள துன்பங்கள் ‘உலா’வில் மறைந்துபோகின்றன.
தொடர்புடைய செய்திகள்
உடற்குறையுள்ள நடன ஆசிரியையால் மீண்டும் நடனமாட முடிகிறது; குழந்தைப்பேற்றுக்காக ஏங்கும் தாயின் ஆசை நிறைவேறுகிறது; கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுபவரால் தன் முன்னாள் காதலியைச் சந்திக்க முடிகிறது; தனிமையில் வாழும் முதியவரால் இறந்த மனைவியின் குரலைக் கேட்க முடிகிறது; விபத்தால் உணர்விழந்த நிலைக்குப் போன காதலியைக் காதலர் மீட்டெடுத்து வாழ்வைத் தொடர முடிகிறது.
ஏழு நாள்களுக்குப் பின் முடிவெடுக்க வேண்டும் - மெய்யுலகிற்குத் திரும்புவதா அல்லது நிரந்தரமாக ‘உலா’விலேயே உலா வருவதா?
செயற்கை நுண்ணறிவு என்றாலே இருமுனைக் கத்தி போன்றது அல்லவா? இன்ப உலாவாகத் தொடங்கியது ஊடுருவலால் பாதிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து நடப்பது என்ன? ‘உலா’வுக்கு வந்தோர் எடுத்த முடிவு என்ன? இதுவே நாடகத்தின் கருப்பொருள்.
தோற்றத்தில் பிரபுதேவா, வசனத்தில் சிவகார்த்திகேயன் எனப் பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தார் யுவராஜ் மோகன். தாய்மையின் உணர்வைச் சீராக வெளிப்படுத்தி, தன் சொந்தத் தாயையே கண்கலங்க வைத்தார் சபர்னா மனோகரன். அவரைத் தட்டிக் கேட்கும் மகளாகச் சிந்திக்கவைத்தார் கண்ணன் வைஷ்ணவி. கணினி அறிவியல் மாணவரான மிக்கில் ஆனந்த், விஞ்ஞானி சேம் ரோய் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார்.
சேம் ரோயை ஆவேசமாகத் தட்டிக் கேட்கும் யுகேஷ் கண்ணன், காதல் பயணத்தில் துயரை எதிர்நோக்கும் தம்பதியராகச் சுசூகி தர்மராசு - ஸ்ரீநிதி, உடற்குறையுள்ளோரின் மனப் போராட்டத்தை வெளிப்படுத்திய கணேசானந்தன் யாழினி, அன்புக் கணவராக மகேஷ்வரன், ஜினெசிஸ் ஊழியராக அன்பு நவீன், செய்தியாளராக ஸ்ரீதர் ஸ்வேதா, செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் நாடகத்திற்கு வலுசேர்த்தனர்.
நாடகத்தை இயக்கிய வினீத் குமார், “‘உலா’வில் நிகழும் ஊடுருவலுக்கு மையக் காரணம் தொழில்நுட்பமன்று, ஒரு மனிதன்தான்,” என்பதைச் சுட்டினார்.
“பல மனிதர்கள் உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்று தெரியாமல் தேடிப் போகிறார்கள். குறை இல்லாமலிருந்தால் மகிழ்ச்சி கிடைக்குமா? இவ்வினாவிற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பதில் இருக்கும் என்பதைக் காட்டினோம்,” என்றார் வினீத்.
இயக்குநர் வெங்கட் பிரபு சுட்டியவாறு, வசனங்களின் மொழிபெயர்ப்புகள் திரைகளில் வந்ததால் மற்ற இனத்தவரும் நாடகத்தைக் கண்டு ரசித்தனர். “எனினும், சில இடங்களில் மொழிபெயர்ப்புகள் போதிய வேகத்தில் காட்டப்படாததாலோ பெரிய வசனங்கள் வந்ததாலோ அங்கங்கே குழப்பமடைந்தேன்,” என்றார் ஜேரட். “மையக் கதையைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், ஆங்காங்கே மொழிபெயர்ப்புகளைத்தான் நம்பியிருந்தோம்,” என்றார் லிரோய்.
நீண்ட வசனங்களுடன் உணர்ச்சி பொங்கும் நடிப்பு, இடையே ஒன்பது விறுவிறுப்பான நடனங்கள், சீரான இயக்கம், நிதிதிரட்டு என நாடகத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் இந்நாள், முன்னாள் மாணவர்களின் உழைப்பு தெரிந்தது.
‘ஏஐ’ பற்றி ஊடக நிபுணர்கள் வடிவழகன் பிவிஎஸ்எஸ், வினோத் குமார், வினீத் குமார் ஆகியோர் பங்கேற்ற ‘நாலு பேர் நாலுவிதமாப் பேசுவாங்க’ சிறப்பு அங்கம் பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் பெற்றது.