வெளியுறவுச் சேவையில் கால்பதிக்கும் கல்விமான்

வெளியுறவுச் சேவையில் கால்பதிக்கும் கல்விமான்

2 mins read
1a2475e4-fd78-4607-9833-db46cc45cc4d
இவ்வாண்டிற்கான வெளியுறவு சேவை உபகாரச் சம்பளம் பெற்ற நால்வரில் ஒருவரான கீவன் நேஷ் கணேசன். - படம்: பே. கார்த்திகேயன்
Google News Preferred Icon

தேசியச் சேவைக்கு முன்னர் சிறியதோர் ஆர்வத்துடன் பங்குபெற்ற வேலைப் பயிற்சியே அவரது எதிர்கால முழு நேரப் பணியாக மாறியதை எண்ணி 21 வயது கீவன் நேஷ் கணேசன் மகிழ்கிறார்.

இந்தியத் தந்தைக்கும் சீன தாயாருக்கும் பிறந்த கீவன், இவ்வாண்டிற்கான வெளியுறவு அமைச்சின் உபகாரச் சம்பளங்கள் பெற்ற நால்வரில் ஒருவர். அக்டோபர் மாதத்திலிருந்து அவர் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலவுள்ளார்.

“நான் வெளியுறவு அமைச்சின் வேலைப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் வரை எனக்கு அச்சேவையைக் குறித்த ஆழமான புரிதல் இருந்ததில்லை. கல்வி அல்லது செய்தித் துறையில் பணிபுரிய வேண்டுமென்று தான் எண்ணினேன்.

“வரலாற்றிலும் அனைத்துலக அரசியலிலும் ஆர்வம் இருந்ததால் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றேன். அதன் பின்பு, இங்குள்ள அதிகாரிகள் செய்யும் வேலை எனக்கு அர்த்தமுள்ளதாகவும் அறிவார்ந்ததாகவும் தோன்றியது,” எனக் கீவன் கூறினார்.

அவரது வேலைப் பயிற்சியின்போது அமைச்சின் இந்தோனீசியப் பிரிவில் அவர் சேவையாற்றினார்.

ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் பயின்ற கீவனின் பயணத்தில் அவருக்கு முக்கியப் பக்கபலமாக இருந்தது அவரது தந்தை. கீவனின் தந்தை சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வருகிறார்.

“என் தந்தை பலமுறை என்னை அவரது துறையிலேயே பணிபுரிய ஊக்குவித்துள்ளார். எனக்கோ, அந்தத் துறையின்மீது பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. இருப்பினும், அவர் கூறிய கதைகளிலிருந்து சேவையின்மீது ஆர்வம் பிறந்தது,” என்று கீவன் கூறினார்.

வேலைப் பயிற்சிக்கு முன்புவரை வெளியுறவு அமைச்சில் அனைத்துலகக் கருத்தரங்குகள், உலகத் தலைவர்களின் சந்திப்புகள், செயல்திட்டப் பேச்சுவார்த்தைகள் போன்றவையே முக்கியமாக இடம்பெறும் என்று எண்ணிவந்தார் கீவன்.

ஆனால், நிதி நிர்வாகம், திட்டமிடுதல், தூதர்களைச் சந்தித்தல் என அவர் பார்த்த மற்ற அம்சங்கள் அவருக்கு அப்பணியின்மீது ஆர்வத்தைத் தூண்டின.

தற்போதைய உலக நடப்புகளில் அமெரிக்காவிற்கும் ஈரானிற்குமிடையேயான பூசல் அவரது கவனத்தை ஈர்த்துள்ளதாக அவர் சொன்னார். குறிப்பாக, அத்தகைய நடப்புகள் சிங்கப்பூரின்மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிவதில் அவர் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு அனைத்துலக நிலையில் சமமான குரல் இருப்பதை உறுதிசெய்ய அரசதந்திரம் முக்கியக் கூறாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

“வேறொரு நாட்டில், அல்லது உலக, வட்டார நாடுகளுக்கான ஐக்கிய நாட்டுச் சபை, ‘ஆசியான்’ போன்ற அமைப்புகளில் சிங்கப்பூரின் தூதராகப் பதவியேற்க ஆவலுடன் உள்ளேன்,” என்றார் அவர்.

குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரது அன்பும் ஆதரவும் புடைசூழ இங்கிலாந்திற்குச் செல்லவுள்ள கீவன், நாடு திரும்பியவுடன் சிங்கப்பூரர்களுக்குப் பயனுள்ள வகையில் வெளியுறவுத் திட்டங்களை அமைக்க முனைப்புடன் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உபகாரச் சம்பளம்கல்விபல்கலைக்கழகம்இளையர்