கண்ணாடி பிம்பம் தாண்டிய தேடல்

கண்ணாடி பிம்பம் தாண்டிய தேடல்

1 of 4
படம்: தினேஷ் துளசிதரன்
படம்: அஜய் அனிஸ்
படம்: திவ்யா ஷேக் பாபு.
படம்: ஆண்ட்ரூ

05 Oct 2026 - 6:30 am

3 mins read

குடும்ப விழாக்களிலும் சமூக ஊடகங்களிலும் இளையர்கள் பலர், தங்களின் உடல் தோற்றம் குறித்து விமர்சனக் கணைகள் பாய்வதைக் கண்டு சோர்வடைகின்றனர்.

தேவையற்ற, ஆனால் காயப்படுத்தும் சுடுசொற்கள் ‘உடல் தோற்றக் குறைபாடு இருப்பதாக நினைத்து மனஅழுத்தத்திற்கு ஆளாதல்’ (Body Dysmorphia) எனப்படும் கடுமையான மனநலப் பிரச்சினைக்குள் அவர்களைத் தள்ளியுள்ளன. 

அன்பின் பெயரால் வீசப்படும் இந்த உருவக்கேலிகளும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளும் இளையர்களின் தன்மதிப்பை பெரிதும் சிதைக்கின்றன. எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்தச் சமூகத்தில் இளையர்கள் பலர் தங்களின் அடையாளத்தைத் தேடி ஒரு மௌனப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

விமர்சனப் பார்வைகளும் மருத்துவப் போராட்டமும்

பெண்களைப் பொறுத்தவரை, சுரப்புநீர் (hormone) மாற்றம், சினைப்பை நீர்க்கட்டி போன்ற மருத்துவக் காரணங்களால் ஏற்படும் தவிர்க்க முடியாத உடல் எடை அதிகரிப்பைக்கூட சமூகம் ‘சோம்பேறித்தனம்’ எனத் தவறாகப் புரிந்துகொள்கிறது. 

இதற்கு, 28 வயது கல்வியாளர் திவ்யா ஷேக் பாபுவின் அனுபவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு காலத்தில் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவருக்குச் சினைப்பை நீர்க்கட்டியால் உடல் எடை கட்டுப்படுத்த முடியாதபடி கூடியது.

உறவினர்களின் விமர்சனப் பார்வைகளைத் தவிர்க்க, அவர் கண்ணாடியைப் பார்ப்பதையும் நிழற்படம் எடுப்பதையும் நிறுத்திக்கொண்டார். உடலை மறைத்துக்கொள்ளும் பெரிய அளவிலான ஆடைகளை அணியத் தள்ளப்பட்டார்.

சமூகத்தின் இந்த மனநிலை மாறவேண்டும் எனக் கோரும் திவ்யா, “ஒருவரின் உருவத்தை வைத்து, அவரை எடைபோடுவதை நிறுத்துங்கள். உங்களின் சுடுசொற்கள், பல்லாண்டுகாலம் நீடிக்கக்கூடிய வலியை ஒருவருக்குத் தரலாம்,” என  உணர்ச்சிப்பெருக்குடன் கூறினார்.

ஆண்களின் மௌனப் போராட்டமும் எல்லைகளும்

மறுபுறம், திரைப்பட நாயகர்களைப் போன்று கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்ற சமூக அழுத்தத்தால், இளையர்களும் தங்களுக்கு உடல்தோற்றக் குறைபாடு இருப்பதாக நினைத்து மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 

சிறுவயதில் இதுபோன்ற உருவக்கேலிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 30 வயது உடற்பயிற்சியாளர் அஜய் அனிஸ், இன்று இளையர் பலருக்குத் தன்மதிப்பு வழிகாட்டியாக விளங்குகிறார்.

மற்றவர்களின் குறைகூறல்களைக் கேட்டுத் தங்கள் உடலை வருத்திக்கொள்ளும் இளையர்களுக்கு அஜய் கூறும் அறிவுரை இதுதான்: "ஒருவர் தமது மன அமைதியைப் பேண, பெரியவர்களை அவமதிக்காமல் அவ்விடத்திலிருந்து விலகிச் செல்வதோ, தனக்கென எல்லை வகுத்துக்கொள்வதோ தவறில்லை. உடற்பயிற்சிப் பயணத்தை ஒருவர் தொடங்கினால், அது அவருக்காகவும், அவர் நலமானவராகவும் வலிமையானவராகவும் மாறுவதற்காக மட்டுமே இருக்க வேண்டும்".

மேலும், “ஏன் இப்படி பருமனாகிவிட்டாய் என்று ஒருவரைக் கேட்பதற்குப் பதிலாக, எப்படி இருக்கிறாய் என்று கேட்கலாம். உரையாடலில் ஏற்படும் இந்தச் சிறிய மாற்றம், ஒருவரின் மனநிலையில் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்,” என்று உற்றார் உறவினர்க்கும் அவர் அறிவுறுத்துகிறார்.

நரம்பியல் தாக்கமும் உளவியல் மீட்சியும்

உருவக்கேலியின் உளவியல் ஆபத்து குறித்து மருத்துவ உளவியலாளர் ஆண்ட்ரூ ஆழமாக விளக்கினார். 

“தொடர்ச்சியான விமர்சனங்கள் இளையர் ஒருவரது மூளையின் நரம்பியல் அமைப்பையே மாற்றிவிடுகின்றன. தாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும், தன்மதிப்பின்மையையும் அவர்கள் நேரடியாகத் தங்கள் உடல் தோற்றத்தோடு தொடர்புபடுத்தி ஆழமாகப் பதிவுசெய்துகொள்கின்றனர்,” என்று அவர் எச்சரித்தார்.

இந்த மனஅழுத்தத்திலிருந்து மீள, தங்கள் உடலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டதாக உணரும் இளையர்கள், தங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார் ஆண்ட்ரூ.

“குறிப்பிட்ட வகையான உடல் தோற்றத்தை நாடாமல், நல்வாழ்வை நோக்கிய இலக்கோடு அவர்கள் முன்னேற வேண்டும்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

உடற்பயிற்சி வழிகாட்டிகளின் பொறுப்பு

உடற்பயிற்சி மீதான கடும் ஈடுபாடு எப்படி ஆபத்தாக மாறுகிறது என்பதை விளையாட்டுக் கல்வியாளராகப் பணியாற்றும் 42 வயது தினேஷ் துளசிதரன் விளக்கினார். 

ஒரு நாள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் ஏற்படும் பதற்றம், உணவருந்தியதற்காகத் தங்களது உடலையே தண்டிக்கும் வகையில் செய்யப்படும் கடுமையான உடற்பயிற்சிகள் ஆகியவை மனஅழுத்தம் ஏற்படக்கூடிய அபாய அறிகுறிகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“உடற்பயிற்சி வழிகாட்டியின் பங்கு என்பது வெறும் உடற்பயிற்சிகளைக் கண்காணிப்பது மட்டுமன்று. சாத்தியமான இலக்குகளுடன் வாடிக்கையாளர்களின் மனநலத்தைப் பாதுகாப்பதும், உடல் எடை அல்லது செயல்திறன்மீது அவர்கள் அளவுக்குமீறி ஈடுபாடுகொள்ளும்போது தலையிட்டு நல்வழிகாட்டுவதும் பயிற்றுநரின் பொறுப்பு,” என்றார் தினேஷ்.

மேலும் அவர், “குடும்ப விழாக்களில் குறிப்பிட்ட ஓர் ஆடைக்குள் பொருந்துவதற்காக மற்றவர்களின் விமர்சனங்களுக்கு அஞ்சி, உடலை வருத்துவதைவிட, உங்களின் எதிர்கால வாழ்க்கை, நீண்டகால உடல்நலத்திற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும்,” என்று இளையர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

“சமூகத்தின் விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும் ஒருவரைச் சிறுமைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஒருவரது உடல் மற்றவர்களுக்கான கண்காட்சிப் பொருளன்று. அது அவரவர் நேசித்து வாழ வேண்டிய ஓர் அழகிய இல்லம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உருவக்கேலியைத் தயக்கமின்றிப் புறந்தள்ளும்படி  இளையர்களைக் கேட்டுக்கொள்ளும் தினே‌‌ஷ், உண்மையான அழகு என்பது தராசு முள்ளிலோ உடுத்தும் ஆடையிலோ இல்லை என்றார்.

“அது ஒருவரின் தன்னம்பிக்கையில்தான் ஒளிந்திருக்கிறது. ஒருவர் அவரையே முழுமையாக நேசிக்கத் தொடங்கும் அந்த நொடியே, அவரை நோக்கிய எல்லா விமர்சனங்களும் தவிடுபொடியாகிவிடும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இளையர் முரசுஉடல்நலம்சமூகம்