நீதிமன்றத்தில் மாணவர்கள்

நீதிமன்றத்தில் மாணவர்கள்

2 mins read
ec96e257-fb84-4d61-a922-4fa606004a29
உயர்நிலை 3 மாணவர்களுக்காக ஆண்டுதோறும் அரசு நீதிமன்றங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’ கருத்தரங்கு. - படம்: சுபலக்ஷ்மி

சிங்கப்பூர் நீதிமன்றங்கள், நாட்டின் சட்ட அமைப்பின் 200வது ஆண்டு நிறைவை ஒட்டி, உயர்நிலை மூன்று மாணவர்களுக்கான ‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’ சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சமுதாயத்தில் நீதிமன்றங்கள் ஆற்றும் பங்கையும் நீதிக் கட்டமைப்பின் வெவ்வேறு கூறுகளையும் பற்றி இளையர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

ஜூலை 3ஆம் தேதி நடைபெற்ற இவ்வாண்டின் கருத்தரங்கில் 42 உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 200 ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் சமூக, பொருளியல் மாற்றங்களுக்கு ஏற்ப நீதிமன்ற அமைப்பு எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை இளைய தலைமுறையினருக்கு விளக்கும் வகையில் இவ்வாண்டு கருத்தரங்கு அமைந்திருந்தது.

மாணவர்கள் ‘உரிமைப் பட்டயமும் நீதிமன்றங்களும், சிங்கப்பூரில் 200 ஆண்டுகால சட்டத்தின் ஆட்சி என்ற கண்காட்சியைப் பார்வையிட்டு, வரலாற்று மைல்கற்களைப் பற்றி தெரிந்துகொண்டனர்.

உச்ச நீதிமன்றம், அரசு நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றங்களின் மாவட்ட நீதிபதிகள், உதவிப் பதிவாளர்கள் உள்ளிட்டோருடன் மாணவர்கள் உரையாடி தங்களது ஐயங்களைக் களையும் வாய்ப்பையும் பெற்றனர்.

‘கற்றல் நீதிமன்றத்தில்’ (Learning Court) நடைபெற்ற மாதிரி விசாரணையில் வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதிகள் போன்ற பொறுப்புகளை ஏற்று, குற்றவியல் சட்டம் சார்ந்த நடைமுறையை அறிந்துகொண்டனர்.

இணையவழிக் குற்றங்கள், மின்னிலக்க யுகத்தில் இளையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இளையர் என்பதால் சட்டம் தளர்த்தப்படாது

“இன்றைய காலகட்டத்தில் இணைய வழியிலான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இணையவழிப் பதிவுகள் சில நொடிகளில் பரவிவிடும் தன்மை கொண்டவை என்பதால், அதன் தீவிரத்தையும் பாதிப்பையும் பலர் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறார்கள்.

“சட்டம் அனைவருக்கும் பொதுவானது, இளையர்கள் என்பதால் சட்டம் தளர்த்தப்படும் என்ற எண்ணம் தவறானது,” என்று நீதிபதி பால் குவான் கூறினார்.

திரைப்படத்தில் வருவது போலல்ல நீதிமன்றம்

திரைப்படங்களில் காட்டுவதுபோல நீதிபதிகள் உணர்ச்சிவசப்பட்டு உடனுக்குடன் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை கருத்தரங்கில் தெரிந்துகொண்டதாக விக்டோரியா உயர்நிலைப்பள்ளி மாணவர் குமார் சுந்தர், 15, தெரிவித்தார்.

“நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் சாட்சியங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்பதை மாதிரி நீதிமன்ற விசாரணையின் மூலம் புரிந்துகொண்டேன்,” என்றார் அவர்.

வருங்காலத்தில் வழக்கறிஞராக வேண்டும் என்ற தம் விருப்பம் இக்கருத்தரங்கின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளதாக கிரெசண்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி, அனுஷ்கா பார்த்திபன், 15, கூறினார்.

“நீதி வழங்குவதில் சாட்சியங்களை ஆராய்வது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு இந்த அனுபவம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்