சாந்தினி 11 வயதில் ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர்ப் பராமரிப்பு இல்லத்தில் தொண்டூழியம் புரிந்ததைத் தனக்கு விழிப்புணர்வு ஊட்டிய அனுபவமாக இன்றுவரை கருதுகிறார்.
அங்குள்ள முதியவர்களுக்குப் பராமரிப்பு வழங்கப்பட்டும் முகங்களில் ஏக்கம் நிறைந்திருந்ததைக் கவனித்தார் சாந்தினி சுப்பிரமணியம்.
“உணவும் வசதியும் இருந்தபோதும் அன்பு காட்டுவதற்குக் குடும்பத்தினர் உடன் இல்லையே என்ற உணர்வு சிலரிடத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.
அன்புக்காக ஏங்குவோருடன் அர்த்தமிகு உறவுகளை வளர்க்கலாமே என்ற எண்ணம் அப்போது அவருக்குள் உதித்தது.
தேசிய இளையர் சாதனை விருது நிகழ்ச்சியில் 21 வயது சாந்தினி, அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் இருந்து தங்க விருதைப் பெற்றுக்கொண்ட பெருமைக்குரியவர்.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பயின்ற சாந்தினி, தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைப் படிப்பு பயின்று வருகிறார்.
குறைந்த வருமானக் குடும்பத்தில் பிறந்த சாந்தினி, நிதிப் பற்றாக்குறையின் வேதனையை உணர்வுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் தான் அறிந்திருப்பதாகக் கூறினார்.
உடன்பிறந்தோரை, குறிப்பாக மோட்டார் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் சகோதரரைப் பராமரித்து வருகிறார் சாந்தினி.
தொடர்புடைய செய்திகள்
சகோதரரின் உடல்நலம் நலிந்துவந்த நிலையில் அவரைக் கவனமாகப் பார்த்துக்கொண்ட அனுபவம், சாந்தினிக்குப் பொறுப்புணர்வையும் மீள்திறனையும் வளர்த்ததாகத் தெரிவித்தார்.
ஐந்து பிள்ளைகளின் தேவைகளை அறிந்து முழுமையாகக் கவனித்திடப் பெற்றோர் சிரமப்பட்டனர். தன் நண்பர்களைப் போல் சாந்தினியால் நினைத்த நேரத்தில் விரும்பிய பொருள்களை வாங்கவோ வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவோ முடியவில்லை.
இருந்தபோதும், தன்னைப் போன்ற வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த இளம் வயதினரைச் சந்தித்தபோது அவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டார் இந்த இளையர்.
“நிதிப் பற்றாக்குறை, நம் சுய மதிப்பைக் குறைத்துவிடக்கூடாது. நாமும் அன்புக்குரியவர்கள் தான் என்ற சிந்தனையை நான் ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.
சிறந்த குணங்களைத் தம்முள் விதைத்த தன் தாயாரைவிட சிறந்த முன்மாதிரி வேறு எவரும் இருக்க முடியாது என்று உருக்கத்துடன் சாந்தினி கூறினார்.
“எப்போதும் இரவு நேரத்தில் அவர் வேலை செய்வார். மிகுந்த களைப்புடனும் அவர் உழைப்பில் சளைக்கவில்லை. இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்குச் சிறந்த உதாரணம் என் தாயார்,” என்றார் சாந்தினி.
வசதிகுறைந்தவர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு உதவும் சாந்தினி, சுற்றுப்புறப் பாதுகாப்புக்காக ‘பெஸ்டா உபின்’ நிகழ்ச்சியையும் நடத்தினார்.
தன்னைத் தானே சிறந்த முறையில் நிர்வகிப்பதன் மூலம் கவனச்சிதறல் இன்றி செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடிவதாகக் கூறினார். ஒவ்வொரு நாளுமே அவர் கவனத்துடன் வேலை செய்வதால் நேர விரயம் குறைகிறது. வேலைத் தரமும் மேம்படுகிறது என்றார்.
“கல்வி, குடும்பப் பராமரிப்பு, சமூகச் சேவை ஆகியவற்றின் மூலம் நான் அடையும் மனநிறைவு என்னை மேலும் ஊக்குவிக்கிறது,” என்று சாந்தினி புன்னகையுடன் கூறினார்.