இணையம் மூலமாகவும் செயற்கை நுண்ணறிவு மூலமாகவும் பரவும் தீவிரவாதச் சிந்தனைகளிலிருந்து இளையர்களைப் பாதுகாக்கும் நோக்கில், அமைப்புகளுக்கு இடையிலான பின்னலச் சேவைக் குழு (Inter-Agency Aftercare Group - ACG) வருடாந்தர இளையர் கருத்தரங்கு நவம்பர் 17ஆம் தேதி ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்றது.
மதரசா எனப்படும் இஸ்லாமிய சமயப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த கிட்டத்தட்ட 150 மாணவர்கள் அதில் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இணையத் தகவல்களை அடையாளம் கண்டு, சிந்தித்து, பொறுப்புடன் செயல்படுவதன் (Recognise, Reflect, Respond) அவசியத்தை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அங்கமாக ‘கன்ட்ரோல் யுவர் ஃபீட்’ என்ற காணொளிப் போட்டி நடைபெற்றது.
இதில் மாணவர்கள் குழுக்களாக இணைந்து, இணையத் தீவிரவாதத்தை அடையாளம் காண்பது குறித்தும் இணையத்தில் பார்ப்பவற்றையும் பகிர்வதையும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நொடிகள் நீடித்த காணொளிகளை உருவாக்கினர்.
நிகழ்ச்சி குறித்து கருத்துரைத்த சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், உலக அரங்கில் தீவிரவாதமும் சமயம் சார்ந்த நெருக்கடிகளும் அதிகரித்துள்ளதைச் சுட்டினார்.
“நம் நாட்டின் சமய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் முயற்சிகளை முறியடிக்க இளையர்களிடம் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இந்தியச் சமூகத்தில் இத்தகைய பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்றாலும், மெத்தனமாக இருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கிறோம். தவறான பாதைக்குச் செல்பவர்களைத் தண்டிப்பதைவிட, ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கம்,” என்றார் அவர்.
நிகழ்வில் பங்கேற்ற செயின்ட் மார்கரெட் உயர்நிலைப்பள்ளி மாணவி மரியம் பாத்திமா, 14, “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆக்கவழியில் பயன்படுத்துவது பற்றியும் அதன் தீமைகள் பற்றியும் அறிந்துகொண்டேன். இளவயதிலேயே அவற்றை அறிந்துகொள்வது எதிர்காலத்தில் சிங்கப்பூரை வழிநடத்த எங்களுக்கு உதவும்,” என்றார்.
அவரது கருத்துடன் உடன்பட்ட கான் எங் செங் பள்ளி மாணவர் முகமது அனீஸ்,16, “இன்றைய இளையர்கள் அன்றாடம் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் தவறான நடவடிக்கைகளில் சிக்காமல் நல்வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது குறித்தும் இந்தக் கருத்தரங்கு தெளிவைத் தந்துள்ளது,” என்று சொன்னார்.
