திறன்படைத்த இளையர்கள் சில சமயம் வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
அவர்களை நிறுவனங்களுடன் இணைத்து, வேலை, வேலைப்பயிற்சி, வழிகாட்டுதல் வாய்ப்புகளை வழங்குகிறது ‘ரிவர் வேலி இர்ரெகுலர்ஸ்’ (River Valley Irregulars) என்ற சமூகநோக்கு நிறுவனம். அதன் இணையத்தள முகவரி https://rivervalleyirregulars.com/.
இளையர்களுக்காகத் தன்மேம்பாடு, தொழில்முனைப்புப் பயிலரங்குகளை ஏற்பாடுசெய்வதுடன், அவர்கள் தாம் விரும்பிய தலைப்புகளில் திட்டங்கள் மேற்கொள்ள மானியங்களும் வழங்குகிறது அந்நிறுவனம்.
அதன் இணை நிறுவனர் ஷீலா மனோகரன், 31, தன் வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த சவால்களையும் பெற்ற உதவிகளையும் அடிப்படையாகக் கொண்டு அதனைத் தொடங்கினார்.
“நான் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலும் (ஐடிஇ) பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் பயின்றபோது ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கல்வி உதவிநிதியைப் பெற்றேன். மறைந்த திரு சிவராமன் சிறந்த வழிகாட்டியாக இருந்தார்.
“என் பல்கலைக்கழகப் படிப்புக்குத் திரு லீ ஹான் ஷி ஆதரவளித்து, பின்பு தம் முதலீட்டு நிறுவனத்தின் பங்காளித்துவங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் கொடுத்தார்,” என்று நினைவுகூர்ந்தார் ஷீலா.
“அதனால், நானே என் சொந்தக் காலில் நிற்கும்போது, நான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சமூகத்துக்கு உதவ விரும்பினேன்.
“பல அறக்கொடையாளர்களுக்கும் அடித்தளத்திலுள்ள சிரமங்கள் தெரிவதில்லை. அதனால், அவர்களுக்கும் சவால்மிக்க சூழல்களிலுள்ள இளையருக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க விரும்புகிறேன். அதனால் விளைந்ததே ‘ரிவர் வேலி இர்ரெகுலர்ஸ்’,” என்றார் ஷீலா.
தொடர்புடைய செய்திகள்
நீண்ட கல்விப்பயணம்
“என் 19 ஆண்டுகால கல்விப் பயணம் முனைவர் பட்டத்துக்குச் சமமானது என என் நண்பர்கள் கூறுவதுண்டு,” என்றார் ஷீலா.
தொடக்கப் பள்ளியில் படித்தபோது இவர் EM3க்குத் தள்ளப்பட்டார். தான் EM2வில் படிக்க விரும்புவதாகக் கூறியும் பயனில்லை.
“அதனால், தொடக்கநிலை ஐந்தில் நான் மனச்சலனத்திற்கு ஆளானேன். எவருடனும் நட்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் தனிமையில் இருந்தேன்,” என்று ஷீலா நினைவுகூர்ந்தார்.
உயர்நிலைப் பள்ளியில் அவர் குறிவைத்திருந்த வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) கிடைக்கவில்லை; வழக்கநிலை (தொழில்நுட்பம்) கிடைத்தது. அதனால் பலரும் தம்மைக் குறைவாக எடைபோட்டதாக இவர் கூறினார்.
பின், ‘ஐடிஇ’யில் ‘நைட்டெக்’, ‘உயர் நைட்டெக்’ படிப்புகளில் நான்கு ஆண்டுகாலம் பயின்றார்.
“வெறும் 0.02 புள்ளிகள் குறைவாக எடுத்ததால் நேரடியாகப் பலதுறைத் தொழிற்கல்லூரி செல்ல இயலாமல் ‘உயர் நைட்டெக்’ எடுக்கவேண்டியிருந்தது,” என்றார் இவர்.
பின்னர் தம் விரிவுரையாளரின் ஊக்கத்தால் இவர் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விமானவியல் மேலாண்மை படித்தார்.
கனவுகள் விலையுயர்ந்தவை
பட்டயக் கல்வி முடித்ததும் தனியார் விமானி உரிமத்தைப் பெறும் இலக்குடன் ஷீலா ஆஸ்திரேலியாவில் தம் முதல் பயிற்சிக்குச் சென்றபின் விமானிப் பள்ளிச் செலவுகளை அறிந்ததும் திக்குமுக்காடிப் போய்விட்டார்.
“ஒரு சிறுவரால் கனவுகாண முடியும், ஆனால் அந்தக் கனவும் விலையுயர்ந்தது! நானும் என் குடும்பமும் அக்கட்டணத்தைச் செலுத்துவது சாத்தியமன்று. கண்ணீருடன் திரும்பினேன்,” என்றார் ஷீலா.
அச்சமயம், அவருடைய தந்தையின் சிறுநீரகங்களும் செயலிழக்கத் தொடங்கியதால், குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில் சிங்கப்பூரில் பணியாற்ற வேண்டும் என முடிவெடுத்தார் ஷீலா. அதனால், சிண்டா மூலம் ஜப்பான், பிரிட்டனில் பட்டப்படிப்பு மேற்கொள்ள உபகாரச் சம்பளங்கள் கிடைத்தாலும் அவற்றை அவர் ஏற்கவில்லை.
சிங்கப்பூரில் பணியாற்ற பட்டப்படிப்புக் கைகொடுக்கும் என உணர்ந்து சிங்கப்பூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக வர்த்தகம், நிர்வாகம் படித்தார் ஷீலா. அப்போது ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட பத்து வேலைகளில் அவர் பணியாற்றவும் செய்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் ஷீலா பற்றி வெளியான செய்தியைக் கண்டு அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தார் திரு லீ ஹான் ஷி. ஷீலா சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி (Youth Corps Singapore) உறுப்பினராக இருந்ததால் அதன்மூலம் அவர் தொடர்புகொண்டார்.
பல்கலைக்கழகத்துக்குப் பின் ஷீலாவுக்கு நியூயார்க்கில் வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் தந்தையின் நலன்கருதி அதையும் அவர் நிராகரித்தார். “எந்தப் பிள்ளையும் தன்னையே கேட்பது இதுதான் - உன் பெற்றோரை விட்டுச் செல்வது சரியா?” என்றார் ஷீலா.
திரு லீ, ஷீலாவை ‘பொட்டேட்டோ புரொடக்ஷன்ஸ்’ எனும் தம் முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்ற வரும்படி அழைப்பு விடுத்தார்.
“அதன்வழி, இளையர்களைப் பணியமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்கிறேன்,” என்கிறார் ஷீலா. பொட்டேட்டோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின்கீழ் இயங்குவதே அவர் நிறுவியுள்ள ‘ரிவர் வேலி இர்ரெகுலர்ஸ்’.
இன்று ஷீலா, ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கல்வி உதவி நிதிக்கான செயற்குழுவிலும், சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி ஆலோசனைக் குழுவிலும் இருக்கிறார்.
இளையர்கள் வெவ்வேறு வழிகாட்டிகளைச் சந்தித்து உரையாட வாய்ப்பளித்தது செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற ‘ரி:கிரியேட் - தி பெட்டர் யூ’ நிகழ்ச்சி. அதில் கலந்துகொண்டு ஷீலாவும் தாம் கடந்து வந்த பயணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ‘*ஸ்கேப்’பில் இவ்விழா நடைபெற்றது.
“வரையறைகளற்ற வாய்ப்புகளுடன் கூடிய ஓர் இடமாக ‘*ஸ்கேப்’பை நிலைநாட்டவும் இளையர்கள் தம்மைத் தாமே மேம்படுத்த ஆற்றல்படுத்தவும் விரும்புகிறோம்,” என்றார் ‘*ஸ்கேப் எஸ்ஜி’ துணை நிர்வாக இயக்குநர் ஈத்தன் ஓங்.

