இந்திய இளையர்களைச் சிறப்பித்த சிண்டா உன்னத விருதுகள்

இந்திய இளையர்களைச் சிறப்பித்த சிண்டா உன்னத விருதுகள்

படம்: சிண்டா

05 Oct 2026 - 6:00 am

3 mins read

கடந்த 34 ஆண்டுகளாகச் சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கல்வி, கலை, விளையாட்டுச் சாதனைகளை அங்கீகரித்துவரும் சிண்டா உன்னத விருதுகள் இவ்வாண்டு ஆக அதிகமான மாணவர்களைச் சிறப்பித்தது.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி அரங்கில் செப்டம்பர் 26ஆம் தேதி நடந்த விழாவில் 18 பிரிவுகளின்கீழ் மொத்தம் 866 மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, வசதிகுறைந்த மாணவர்களுக்காக ‘ஏஐ டியூட்டர் பட்டி’ என்ற சிறப்புத் துணைப்பாடச் செயலியை உருவாக்கிய 17 வயது பிரிஸ்கா ரோஷினி ரிச்சர்ட் ரவிக்குச் சிறப்புச் சாதனைப் பிரிவில் விருது கிடைத்தது.

“எனக்கு சிறுவயதுமுதலே கல்வி கற்பதில் சிரமங்கள் இருந்தன. நிறைய முயற்சி செய்தாலும் மதிப்பெண்கள் வராததால் மனவுளைச்சல் அடைவேன். என்னைப் போன்ற மாணவர்கள் பலர் இருக்க வாய்ப்புண்டு என எனக்குத் தோன்றியது. அவர்களுக்கு உதவும் நோக்குடனே இந்தச் செயலியை உருவாக்கினேன்,” என்றார் அவர்.

தமக்கு வழங்கப்பட்ட விருது, சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கு தமது செயலியைக் கொண்டு சேர்க்க பெரிதும் உதவுமென அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

தொண்டூழியப் பணிகள் வாயிலாகவும் தமது செயலியைப் பிற மாணவர்களுக்கு கொண்டுசேர்க்க முனைகிறார் பிரிஸ்கா.

அவர் சென்ற ஆண்டு சிறந்த உலகளாவிய இளைய தொழில்முனைவர் (சிங்கப்பூர்) விருதை வென்று, இவ்வாண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள அனைத்துலகப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ளார்.

பட்டயக் கல்விப் பிரிவில் விருது வென்ற ஷாம்சுபாருதீன் ஷம்சுதின் தமக்கு வழங்கப்பட்ட விருது நம்பிக்கையும் ஊக்குவிப்பையும் அளிப்பதாகக் கூறினார்.

ஷாம்சுபாருதீன் சிண்டாவின் ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்புகளில் பங்கெடுத்து, சாதாரண நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்று, பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருத்துவ உயிர்த்தொழில்நுட்பத் துறையில் பட்டயம் பெற்றார்.

பட்டயக் கல்வியிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அவர் சுகாதார அமைச்சின் உபகாரச் சம்பளத்தைப் (MOHH Scholarship) பெற்றுள்ளார்.

‘யூத் கேன் டூ இட்’ (You(th) Can Do It) எனும் தொண்டூழியத் திட்டத்திற்கும் அவர் தலைமை தாங்குகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி அமைப்புகளிலிருந்து 4,000க்கும் மேற்பட்ட இளைய தொண்டூழியர்களை ஒருங்கிணைத்துள்ள அம்முயற்சியின் நற்பணி, தேசிய அளவிலான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

“நமது இலக்குகளை நோக்கி நிற்காமல் ஓடுவது மிகவும் அவசியம். என் பலவீனங்களைப் பலங்களாக மாற்றி, என்னை மெருகேற்றிக்கொள்ளும் பயணத்தில் பிறருக்கும் உதவ முனைகிறேன்,” என்றார் அவர்.

நீதிபதி கண்ணன் ரமேஷிடமிருந்து விருது வென்ற ஷாம்சுபாருதீன் ஷம்சுதின் (வலது) தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட நாட்டம் கொண்டுள்ளார். உடன் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
நீதிபதி கண்ணன் ரமேஷிடமிருந்து விருது வென்ற ஷாம்சுபாருதீன் ஷம்சுதின் (வலது) தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட நாட்டம் கொண்டுள்ளார். உடன் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். - படம்: சிண்டா

வாழ்க்கையின் இடையில் வரும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுவது முக்கியம் என்று எண்ணுகிறார் கரீன் கவுர்.

சிங்கப்பூரின் முதல் பெண் ‘எஃப்4’ கார்பந்தய ஓட்டுநரான அவர் சிறப்புச் சாதனைப் பிரிவில் விருது வென்றார்.

“இத்தாலியில் ஒருமுறை பந்தயத்தின்போது விபத்து ஏற்பட்டதால் என் கையில் காயம் ஏற்பட்டது. என் கார்பந்தயப் பயணம் அத்துடன் முடிவடைந்தது என்று அஞ்சினேன். ஆனால், சிறிய காயத்துடன் தப்பியதால் மீண்டும் பந்தயங்களுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டேன்.

“அதுபோல, இளையர்கள் அனைவரது வாழ்விலும் சவால்கள் எழுவது இயல்பு. அவற்றைக் கடந்து மனந்தளராமல் முன்னோக்கி செல்வது அவசியம்,” என்றார் 16 வயதான கரீன்.

அமைச்சர் இந்திராணி ராஜாவிடமிருந்து விருதுபெறும் சிங்கப்பூரின் முதல் பெண் ‘எஃப்4’ கார்பந்தய வீராங்கனை கரீன் கவுர் (வலது). உடன் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
அமைச்சர் இந்திராணி ராஜாவிடமிருந்து விருதுபெறும் சிங்கப்பூரின் முதல் பெண் ‘எஃப்4’ கார்பந்தய வீராங்கனை கரீன் கவுர் (வலது). உடன் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். - படம்: சிண்டா

பட்டயக் கல்விப் பிரிவில் விருது வென்ற மற்றொரு மாணவரான ஹேமராஜ் அமுதன் தமது கடும் உழைப்பிற்குப் பலன் கிடைத்துள்ளதாக உணர்கிறார்.

தந்தையின் இழப்பையும் சக்கர நாற்காலியில் முடங்கிய தாயாரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஹேமராஜ் பக்குவத்துடன் கையாண்டுள்ளார்.

“நான் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு முன்பு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ‘நைட்டெக்’ பிரிவில் பயின்று வந்தேன். அப்போது, பலதுறைத் தொழிற்கல்லூரி என்பது எட்டாக்கனிபோல் தோன்றியது.

“ஆனால், என் நண்பர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் இன்று நான் வெற்றிகரமாக என் பட்டயத்தைப் பெற்றுவிட்டேன்,” என்றார் அவர்.

இசை, ஒலி சார்ந்த துறைகளில் பயின்றுவந்த ஹேமராஜ், தமது சமூக சேவை நாட்டம் காரணமாகப் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணித் துறையில் பயிலவுள்ளார்.

நீதிபதி கண்ணன் ரமேஷிடமிருந்து விருதுபெறும் ஹேமராஜ் அமுதன் (வலது). உடன் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
நீதிபதி கண்ணன் ரமேஷிடமிருந்து விருதுபெறும் ஹேமராஜ் அமுதன் (வலது). உடன் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். - படம்: சிண்டா

விருதுவென்ற மாணவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை சிண்டாவுடன் இணைந்து பிற இளையர்களுக்கு உதவ முன்வருவது சிறப்பாக இருக்குமென சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

“இத்தகைய இளையர்கள் அடுத்த தலைமுறையினருக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்கின்றனர். மீண்டும் சமூகத்திற்குப் பங்களிப்பதன்மூலம் தங்களைப் போல பல இளைய சாதனையாளர்களை அவர்களால் உருவாக்க முடியும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
கல்விவிருதுசிங்கப்பூர்மாணவர்கள்வயதுசிறப்புசிண்டா