தொழில் முன்னேற்ற வாய்ப்புகள், புதிய தொடர்பு வட்டங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொள்ள சிண்டாவின் இளையர் குழு ஏற்பாடு செய்த ‘டேக்கிங் ஃப்லைட் 2.0’ (Taking Flight 2.0) நிகழ்ச்சியில் 44 இளம் தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஜூலை 8ஆம் தேதி தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மையத்தில் நடந்தேறியது.
‘சிங்கப்பூர் அனைத்துலகக் கட்டமைப்பு’ (Singapore Global Network), ‘சிங்கப்பூர் தலைவர்கள் கட்டமைப்பு’ (Singapore Leaders Network) ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி, முதல்முறையாக 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
“பன்னாட்டு வேலைவாய்ப்புகளைப் பற்றியும் வேலை மாறுவதற்கான பயனுள்ள குறிப்புகளையும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு எடுத்துச்சொல்வதே எங்களின் நோக்கம்,” என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒருவரான ஜனனி நடராஜன், 23.
நிகழ்ச்சியில் தொழில்நுட்பம், பொது சுகாதாரம், தளவாடம், திரைப்படம் முதலிய வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஒன்பது நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்.
புதிய கலாசாரங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ளுதல், அனைத்துலக வாழ்க்கைத்தொழில்களில் ஒரு சமநிலை காணுதல், வெவ்வேறு கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் போன்ற தலைப்புகளை ஒட்டிக் கலந்துரையாடினர்.
வெளிநாட்டில் பணியாற்றுவது சவால்மிக்கதாக இருந்தாலும், அது வேலை தொடர்பான வளர்ச்சிக்கும் தொடர்பு வட்டத்துக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்தினார்கள்.
நிபுணர்களில் ஒருவரான சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக தொழில்நிறுவனப் பயிற்சிக்கழகத்தின் வட்டார இயக்குநர் ஹர்ப்ரீத் சிங், 41, சிங்கப்பூரர்கள் வசதியும் பாதுகாப்பும் மிக்க சூழலில் வாழ்கிறார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் அந்தச் சூழலுக்கு அப்பால் அமைந்துள்ள உலகத்தில் கால்பதிக்க வேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“தோல்விகளை அரவணைத்துச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே இளம் தொழில் வல்லுநர்களுக்கு நான் கூற விரும்பும் முக்கிய அறிவுரை,” என்று கூறினார் அவர்.
எஸ்டி தளவாட நிறுவனத்தின் பொது மேலாளரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிபுணர்களில் ஒருவருமான கணேசன் அரசப்பன், 44, வேலையில் வெற்றி காண்பது குறித்துப் பேசினார். மென் திறன்கள், தொழில்நுட்பத் திறன்கள், தன்னம்பிக்கை ஆகிய மூன்றையும் வளர்த்துக்கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.
நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக ‘வொர்ல்ட் கஃபே’ முறையில் பங்கேற்பாளர்களும் நிபுணர்களும் இன்றைய போட்டித்தன்மைமிக்க வேலைச்சந்தையில் எவ்வாறு முன்னேறுவது என்பது பற்றிய ஆழமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இளம் தொழில் நிபுணர்களை ஆதரிக்கக்கூடிய வெவ்வேறு தரப்பினரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இதுபோன்ற நிகழ்வுகள் வாய்ப்பளிப்பதாக அரசு ஊழியரான டிவ்யா பாலகிருஷ்னன், 27, கூறினார்.
“பொருளியல் படிப்பைப் பயின்றால் வங்கிகளில் மட்டும்தான் வேலை செய்ய முடியும் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால், அதையும் தாண்டிப் புதிய பாதைகள் பல உள்ள இடமாக இன்றைய உலகம் மாறியுள்ளது,” என்று கூறினார் அவர்.
கணினி நிர்வாகியான 27 வயது ஜீவா பிரகாஷ், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்குமுன் தன்னுடைய திறமையை மேம்படுத்திக்கொள்ள, இதுபோன்ற சுய உதவிக் குழுக்களில் சேர விரும்புவதாகக் கூறினார்.

