காற்பந்துத் திடலில் தொடங்கி உலக மேடைக்கு முன்னேறியவர், சரண் ராஜ் கருணாநிதி, 27.
பள்ளிப் பருவத்தில் ‘சிண்டா லயன்ஸ்’ காற்பந்து அணியில் சேர்ந்தார் சரண் ராஜ். ஐந்து ஆண்டுகள் அங்கு பயிற்சிசெய்து தன் திறன்களை வளர்த்தார். தொடக்கக் கல்லூரி மாணவராக, ஆசியான் பள்ளிகள் போட்டியில் சிங்கப்பூரைக் காற்பந்தில் பிரதிநிதிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.
இன்று சிண்டாவில் ஒரு வழிகாட்டியாக அவர் சமுதாயத்துக்குத் திரும்பக் கொடுக்கிறார்.
“சிண்டா லயன்சில் நான் கற்ற நெறிகள் இன்றுவரை எனக்குப் பயனளிக்கின்றன. ஒரு காலத்தில் இந்தச் சமுதாயம் எனக்கு நிறைய உதவியது; அதனால் நான் திரும்பக் கொடுக்க விரும்புகிறேன். நான் செய்வது சிறிய விஷயமாக இருந்தாலும் நாளை ஒரு நபரின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டால் எனக்குப் பெருமகிழ்ச்சியாக இருக்கும்,” என்றார் சரண் ராஜ்.
நவம்பர் 1ஆம் தேதியன்று நடந்த சிண்டா இளையர் விருதுகளில் ‘சிண்டா இளையர் மன்ற சேவை மனப்பான்மை’ விருதை அவர் வென்றார்.
சிண்டாவும் தேசிய இளையர் சாதனை விருதுத் திட்டமும் அறிவித்த புதிய பங்காளித்துவத்தின் அடிப்படையில், அத்திட்டத்தில் தங்க விருதைப் பெறும் முயற்சிக்காக சிண்டா அவரை நியமித்தும் உள்ளது.
‘இலக்கை அடையும் தன்னம்பிக்கை கிடைத்தது’
தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்குக் கல்லூரியில் தாதிமைத் துறையில் ‘உயர் நைட்டெக்’ படிக்கிறார் ரியா ரோஷினி, 18. இவ்வாண்டு சிண்டா இளையர் விருதுகளில் அவர் தலைமைத்துவ விருதைப் பெற்றார்.
“முன்பு எனக்கென்று வாழ்வில் இலக்குகள் இல்லை. சிண்டாவில் நமக்குப் பல வழிகாட்டித் திட்டங்கள் உள்ளன. அதன்மூலம், இலக்குகளைத் திட்டமிடக் கற்றேன். என்னாலும் வாழ்வில் சாதிக்க முடியும் என நம்பத் தொடங்கினேன். அதனால் நான் இன்று தன்னம்பிக்கையுடன் தாதிமைத் துறையில் படிக்கிறேன்,” என்றார் ரியா.
தொடர்புடைய செய்திகள்
சிண்டாவில், நட்பாதரவுத் தலைவராக (Peer Leader) அவர் சக இளையர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். ‘கேம்’ (GAME), ITEnable, ‘லிங்க்டின்’ பயிலரங்குகள் போன்ற திட்டங்கள்மூலமும் அவர் பயனடைந்துள்ளார்.
தன் சொந்த சவால்களைக் கடந்ததன்மூலம் இன்னும் பரிவான தாதியாக சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த விரும்புகிறார் ரியா.
புதிய திறனால் அதிபர் முன்னிலையில் அசத்திய பாத்திமா
தலைமைத்துவ விருதை வென்ற பாத்திமா ஃபர்ஹானா முகமது இர்ஷாத், 19, ஒரு காலத்தில் கூச்ச சுபாவம் கொண்டவர்.
“இன்று நான் தன்னம்பிக்கையுடன் பலரது முன்னிலையிலும் பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் சிண்டாதான்,” என்றார் பாத்திமா.
சென்ற ஆண்டு சிண்டாவின் ‘கேம்’ வழிகாட்டித் திட்டத்தில் சேர்ந்து தோல்கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொண்டார் பாத்திமா.
“நான் இதுவரை தோல்கருவிகள் வாசித்ததே இல்லை என்பதால் சற்று அஞ்சினேன். ஆனால் சிண்டா ஊழியர்கள், நண்பர்கள் தந்த ஊக்குவிப்பால் அது சாத்தியமானது,” என்றார் பாத்திமா.
முதன்முதலில் சிண்டா இளையர் விருதுகளில் தோல்கருவிகளை வாசித்தது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
அதிபர் தர்மனின் முன்னிலையில் இவ்வாண்டின் தீபாவளி உத்சவத்தில் தோல்கருவி வாசித்தது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. “அங்கு வந்தபிறகுதான் அதிபர் அங்கு இருப்பார் எனத் தெரியவந்தது. சிண்டாவைப் பிரதிநிதித்ததில் பெருமையாக இருந்தது,” என்றார் பாத்திமா.
சிண்டா மூலம் வளர்த்துக்கொண்ட தலைமைத்துவத் திறன்களுடன் ‘காலாண்டுக்கான தலைசிறந்த நிபுணர்’ என்ற விருதை இருமுறை தன் வேலையிடத்திலும் வென்றுள்ளார் பாத்திமா.
“சிறுவயதில் எனக்கு சீன, மலாய் நண்பர்கள்தான் அதிகமாக இருந்தனர். சிண்டா மூலம் மற்ற இந்தியர்களுடன் பழகும்போது இந்த சமூகத்துக்கும் எனக்கும் இடையே வலுவான பிணைப்பு ஏற்பட்டது,” என்றார் பாத்திமா.

