மரபுக் கலைகளைச் சிங்கப்பூரில் தொடர்ந்து படைப்பதும் பரப்புவதுமாக ஆர்வத்துடன் இயங்கி வரும் இரு நடனக் கலைஞர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ‘சென்னை சங்கமம்’ எனும் ஆகப் பெரிய மரபுக் கலை நிகழ்ச்சியில் இவ்வாண்டு நடனமாடியுள்ளனர்.
பரதநாட்டியக் கலைஞர்களான திருவாட்டி மீனலோசனி, திருவாட்டி லோகேஸ்வரி துரைராஜு இருவரும் தங்களுக்கு வாழ்நாளில் கிடைத்த சிறந்த வாய்ப்புகளில் இது ஒன்று என்றே கருதுகின்றனர்.
தனது சிறு வயதிலிருந்தே கலைகளின் மீது கொண்ட ஆர்வத்தால் சிஃபாஸ் கலைப்பள்ளியில் இணைந்து நடனம் பயின்ற மீனலோசனி, தொடர்ந்து மரபுக் கலைப் பயிலரங்குகளில் பங்கேற்று கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்டவற்றைப் பயின்றார்.
உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் ஆய்வகத் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றும் லோகேஸ்வரி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைத் துறையில் உள்ளார்.
இருவரும் சிங்கப்பூரின் மரபுக் கலைகளைக் கொண்டாடும் விழாவான ஆனந்த கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
வாய்ப்பல்ல; பெரும்பேறு
“முதலில் எங்களை அழைத்தபோதே நடனமாடுதல், இசைக்கருவி வாசித்தல் எனப் பல்வேறு திறன்கள் கொண்டவர்கள் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்ப்பதை அறிந்தோம். சென்னை சங்கமம் கடலளவு பெரிய நிகழ்ச்சி. அதில் துரும்பளவு பங்களிக்க வாய்ப்பு கிடைத்தாலும் பெரும்பேறுதான் என நினைத்தோம்,” என்றனர் இருவரும்.
“என்ன வகை நடனம் ஆடச் சொன்னாலும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் எனும் ஊக்கத்துடன் சென்றோம்,” என்றார் 36 வயது லோகேஸ்வரி.
“விழா நடைபெறுவதற்கு 10 நாள்களுக்கு முன்னர்தான் தயாராகத் தொடங்கினோம். அங்கு செல்லும் வரை எவ்வாறு பங்களிக்கப் போகிறோம் எனத் தெரியாது. குறுகியகாலம் என்றாலும் கற்றுக்கொடுப்பதை விரைவில் உள்வாங்கி, சிறப்பாக நடனமாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது,” என்றார் மீனா, 28.
தொடர்புடைய செய்திகள்
சென்னை சங்கமம் பற்றி...
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவையொட்டி கலைப் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாக இசை, நடனம், இலக்கியம், உணவு என மரபுசார் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் மாபெரும் தமிழ்க் கலைப் பண்பாட்டுத் திருவிழாவான ‘சென்னை சங்கமம்’ ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், நையாண்டி மேளம், காவடியாட்டம், தோல்பாவைக் கூத்து, தெருக்கூத்து, இறை நடனம், பறை இசையாட்டம் என 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைவடிவங்கள் இடம்பெற்றன.
ஆண்கள் நடனப் பிரிவு, பெண்கள் நடனப் பிரிவு, மலைவாழ் மக்கள் இசை, ‘ஹிப் ஹாப்’ கானா நவீனக் கலப்பு என நான்கு பகுதிகளுடன் அனைவருக்கும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கியது இந்நிகழ்ச்சி.
இவற்றில் பெண்கள் பங்கேற்ற மரபுக்கலைப் பகுதியிலும் நவீன இசையுடன் கூடிய மரபுக் கலைப் பகுதியிலும் மீனாவும் லோகேஸ்வரியும் பங்கேற்றனர்.
வேறுபாடுகளைக் கடந்தது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், சென்னை சங்கமத்தில் பங்கேற்ற நிலையில் அனைத்துலக அளவில் மூவர் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக இருவரும் குறிப்பிட்டனர்.
“தமிழகக் கலைஞர்களும் நாங்களும் பேசிய மொழி, ஈடுபடும் கலை இரண்டும் ஒன்று என்றாலும் எங்களுக்கிடையே சில வேறுபாடுகள் இருந்தன. முதலில் பேசிப் பழகத் தயக்கமாக இருந்தபோதும் சில மணி நேரத்தில் அது நீங்கிவிட்டது,” என்றார் மீனா.
“பலவகை நிகழ்ச்சிகளில் நடனமாடிய அனுபவம் இருந்ததால் எங்களுக்கு மேடைப் பயம் இல்லை. ஆனால், கலையின் பிறப்பிடமாகத் திகழும் தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாகக் கலைத்துறையிலேயே ஊறித்திளைத்த மூத்த கலைஞர்களுடன் பணியாற்றும் பிரமிப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், அங்குள்ள கலைஞர்கள் எங்களை அன்புடன் அரவணைத்தது இதமான ஓர் அனுபவம்,” என்றார் லோகேஸ்வரி.
சிறப்பாகச் செய்யும் கடப்பாடு
சிங்கப்பூரைப் பிரதிநிதித்துச் சென்று நடனமாடுவது பெருமையாக இருந்தது எனவும் சிங்கப்பூரின் மரபுசார் நடவடிக்கைகளின் தரத்தைத் தங்கள் நடனம் மூலம் எடை போடுவார்கள் என்பதால் அதனைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற பொறுப்புணர்வும் மேலோங்கி இருந்தது என்று இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
தங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு ஒரு நுழைவாயில் போன்றது என்றும் தங்களில் பங்களிப்பைப் பார்த்து சிங்கப்பூர்க் கலைஞர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் இருவரும் நம்புகின்றனர்.
‘சென்னை சங்கமம்’ போன்ற சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்காற்றியது கனவு போல இருப்பதாகச் சொன்ன லோகேஸ்வரி, “எனது கலைப் பயணத்தின் எதிர்காலம் குறித்த உறுதி பிறந்துள்ளது. ஒளி கிடைத்துள்ளது. இனி, அடுத்தடுத்த ஆண்டுகளில் எத்தனை பேர் பங்கேற்றாலும் விதை போட்டது நாங்கள் எனும் பெருமை எங்களுக்கு உண்டு,” என்றார்.
அதை ஆமோதிப்பதாகக் கூறிய மீனா, “இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் விலைமதிப்பற்றது. இதனை என்னிடம் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பகிர்வதும், அடுத்த தலைமுறை இளையர்களுக்கு எடுத்துச் செல்வதும் என் எதிர்கால இலக்கு,” என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.