கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நீடித்துவரும் படப்பிடிப்பு பயணத்தைப் பின்னோக்கிப் பார்க்கும்போது அதில் மனநிறைவு காண்பதாக உள்ளூர் நடிகரும் இயக்குநருமான சேஷன் வீரப்பன், 29, கூறினார்.
2016ல் ‘தேடல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், ‘வேட்டை 4’, ‘வேட்டை 5’, ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’, ‘காலவரை’, ‘இறுதி பயணம்’ உள்ளிட்ட பல்வேறு உள்ளூர்த் தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர், உதவியாளர், துணை இயக்குநர் என வெவ்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார்.
இவர் வெற்றி இப்போது கடல்கடந்து நிற்கிறது. அக்டோபர் மாத பிற்பாதியில் தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்ற குறும்படப் போட்டியில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றார் சேஷன்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் வெற்றி பெற்ற ஆறு படங்களில் சேஷனின் ‘வாழ்க்கை தொடரும்’ (‘Life goes on’) ஆவணப்படமும் தேர்வானது. தாம் ரசிக்கும் புகழ்பெற்ற இயக்குநர் பி.லெனின் அந்த விருது நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்ததாகக் குறிப்பிட்டார் இந்த இளம் இயக்குநர்.
கிட்டத்தட்ட ஈராண்டுக்கு முன்னர் லா செல் கலைக்கல்லூரியில் பயின்றபோது, தமது இறுதியாண்டு பணித்திட்டத்திற்காக புதினப் படைப்பு ஒன்றை உருவாக்கத் தாம் எண்ணியிருந்ததாகவும் அதற்குப் பதிலாக ஆவணப்படத்தை உருவாக்கும்படி பள்ளியைச் சேர்ந்த திரு சார்ல்ஸ், ஒரு வழிகாட்டியாகத் தமக்கு அறிவுறுத்தியதாகவும் சேஷன் கூறினார்.
“பொறுத்திருந்தேன். தரமான ஓர் உண்மைக் கதை ஒன்று நம்மைத் தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். பின்னர், என் குடும்பத்தினர் மூலமாக, மாற்றுத்திறனாளி மகனைப் பராமரிக்கும் 73 வயது திருவாட்டி வீரம்மாவின் தொடர்பு கிடைத்தது,” என்றார் சேஷன்.
பணச்சிரமத்தைச் சமளித்தவாறு ‘டவுன் சிண்ட்ரம்’ எனும் மனநலிவுக் குறைபாடு உள்ள தம்முடைய 33 வயது மகன் ரவினைத் தனியாளாகப் பராமரித்துவரும் திருவாட்டி வீரம்மாவின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாகச் சித்தரித்துள்ளது இவரது ஆவணப்படம்.
பிரச்சினைகள் தொடர்ந்து வந்தாலும் உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தினாலும் அவற்றைச் சமாளித்து சிரித்த முகத்தைக் காண்பிக்கும் திருவாட்டி வீரம்மாவை, பெண் சிங்கம் என சேஷன் உருக்கத்துடன் வருணித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எனது படத்திற்கு முன்பே, அவரைப் பிறர் பேட்டி எடுத்திருந்தாலும் எனக்கு அவை மேலோட்டமாகத் தோன்றின. நான் அவரது அன்றாட வாழ்க்கையை உள்ளதை உள்ளவாறே சித்தரிக்க விரும்பினேன்,” என்று அவர் கூறினார்.
வாழ்க்கை போய்க்கொண்டேதான் இருக்கிறது என்று திருவாட்டி வீரம்மா கூறிய துணிச்சல்மிகுந்த சொற்களையே ஆவணப்படத்தின் பெயராக சேஷன் சூட்டினார்.
இருப்பினும், கொவிட்-19 கிருமிப்பரவல் தொடர்பான கட்டுப்பாட்டு விதிமுறைகளால் படப்பிடிப்பு சீராக இல்லை. சில தொழில்நுட்பப் பிரச்சினைகளும் எழுந்தன.
படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளபோதும் அதனை வெளியிடும் துணிச்சல் தமக்கு இல்லாதது போலவும் அவர் உணர்ந்தார்.
“எனது ஆவணப்படத்தை மக்கள் பார்ப்பார்களா; அந்தப் படம் அவர்களுக்குப் பிடிக்காமல் போகுமா போன்ற தேவையற்ற சந்தேகங்கள் எனக்குள் எழுந்தன,” என்று அவர் கூறினார்.
இந்த நேரத்தில், தம்முடன் முன்னதாகப் பணியாற்றிய இயக்குநர்களிடமும் தொழில்நுட்பர்களிடமும் ஆவணப்படத்தைக் காண்பித்து அவர்களது பாராட்டையும் படத்தை வெளியிடுவதற்கான ஊக்கத்தையும் பெற்றார்.
மேடுபள்ளம் நிறைந்த இந்த எட்டு ஆண்டுகாலத்தில் பலமுறை கண்ணீர் சிந்தியுள்ளதையும் சேஷன் வெளிப்படையாகப் பகிர்ந்தார்.
“என் முயற்சிகளில் சில தோல்விகளில் முடிந்தபோது நான் ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன் என எண்ணியதுண்டு. விலகிப் போய்விடலாம் என்று அவ்வப்போது நினைத்தாலும் ஒரு நாள் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை எனக்குள் தொடர்ந்து இருந்து வருகிறது,” என்றார்.
தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டு வரும் சேஷன், தாம் சந்தித்து எதிர்கொண்ட தடைகள் யாவும் மனதளவில் தமக்கு முதிர்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறினார்.
“எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதில் முழுமனதோடு ஈடுபட்டால் யாரும் நம்மை அசைக்க முடியாது,” என்பது இளையர்களுக்கு அவர் கூற விரும்பும் அறிவுரை.
பிரச்சினை ஏற்படும்போது குழம்பிப் போகாமல் அதிலிருந்து சற்று தூரம் விலகி நின்று, அதைக் கையாள்வதா அல்லது கைவிடுவதா என சிந்திக்கும்படி தம் வழிகாட்டி திரு சார்ல்ஸ் அறிவுரையை இன்றளவும் பின்பற்றி வருகிறார் சேஷன்.