நீர்மூழ்கிக் கப்பல் பொறியியல் உலகில் சாதனை அலையை ஏற்படுத்தியுள்ளது, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ‘நோட்டிக்கல் நைட்ஸ்’ அணி.
ஐரோப்பிய அனைத்துலக நீர்மூழ்கிக் கப்பல் பந்தயம் 2024ல், ‘தலைசிறந்த புதிய அணி’ என்ற விருதை வென்றதுடன் இப்போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் தென்கிழக்காசிய அணி என்ற பெருமையையும் அது கொண்டுள்ளது.
ஈராண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இப்போட்டி, பிரிட்டனின் காஸ்போர்ட் பகுதியில் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெற்றது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி எனப் பங்கேற்ற 11 அனைத்துலக அணிகளில் சிங்கப்பூர் அணி அதன் முந்தைய சாதனை நேரத்தை முறியடித்ததுடன் நான்காவது இடத்தையும் பிடித்தது.
மனிதர்களால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்து, கட்டி முடித்து பந்தயத்தில் போட்டியிடுவதே நோக்கம்.
இணைப் பேராசிரியர் வான் ஸிங் தலைமையில், ‘நோட்டிக்கல் நைட்ஸ்’ அணியில் கடல்சார் பொறியியல், கடல்சார் கட்டிடக்கலை மற்றும் கடலோரப் பொறியியல் துறைகளைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நுணுக்கமான வடிவமைப்பும் பொறியியல் ஆற்றலும் கொண்டு எட்டு மாத உழைப்பில் உருவானதே, அணியின் ‘மாக்கோ’ என்று பெயரிடப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல். இது 3.6 மீட்டர் நீளத்தில் 120 கிலோ எடை கொண்டிருந்தது.
நீருக்கடியில் அமைந்த சவால்மிக்க பந்தயத்தடத்தில் செல்வதற்காக வேகத்துக்கும் கட்டுப்படுத்தும் ஆற்றலுக்கும் அணி முன்னுரிமை அளித்து நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள தனித்தன்மையான திறன்கள் ஒட்டுமொத்த முயற்சிக்குப் பங்களித்தன. மாணவர்கள் பயிற்சிக்காக 15 டிகிரி செல்சியஸ் வரையில் இருந்த நீரில் தாக்குப்பிடித்துள்ளனர்.
“பந்தயத்திற்கு முன்பும் பந்தயத்தின்போதும் நாங்கள் பல சவால்களைச் சந்தித்தோம்,” என்று இணைப் பேராசிரியர் வாங் ஸிங் தெரிவித்தார்.
தொழில்நுட்பத் திறன் மட்டுமன்றி கடின உடல் உழைப்பும் தேவைப்படுவதாகக் கூறிய அவர், “நீருக்கடியில் ஆறு மீட்டர் ஆழத்தில் இருந்தபடியே அழுத்தத்தைத் தாங்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவது சிரமம் என்றாலும் இதில் ஈடுபட்ட அனைவருக்கும் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது,” என்றார்.
போட்டி பங்கேற்பாளர்களில் ஒருவரான இர்ஃபான், “பாடங்களில் கற்றவற்றை நடைமுறையில் செயலாற்றுவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது,” என்று கூறினார்.
இது முடிவல்ல, தொடக்கம் என்று கூறிய பேராசிரியர் வான் ஸின், அடுத்து வரும் போட்டிகளில் தங்கள் குழு சிறப்பாகப் போட்டியிடும் என உறுதியளித்தார்.

