தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போரில் சிங்கப்பூர் அணிகள்

2 mins read
262b0b09-ff37-4bf1-bdbc-206d4e80faa3
மலேசியாவில் நடக்கும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற ‘ஆயிரத்தில் நால்வர்’ அணியினர் (இடமிருந்து) சுந்தரவடிவேல் ப்ரபவ், மகாலெட்சுமி, ரகுநந்தன். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 4

‘அனைத்துலக விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர் 7.0’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 5ஆம் தேதிகளில் மலேசியாவின் திரங்கானுவில் நடக்கவுள்ள நிலையில், சிங்கப்பூரை இரு இளையர் அணிகள் பிரதிநிதிக்கவுள்ளன.

அக்டோபர் 19ஆம் தேதி சனிக்கிழமை காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த சிங்கப்பூர்த் தகுதிச் சுற்றில் அவை தேர்வாகின.

வெற்றிபெற்ற இரு அணிகள்.
வெற்றிபெற்ற இரு அணிகள். - படம்: ரவி சிங்காரம்

சொற்போரைத் தவிர ஜனவரி 5ஆம் தேதி நடக்கும் அனைத்துலகத் தமிழ் இளையோர் மாநாட்டிலும் அவர்கள் கலந்துகொள்வர்.

சொற்போருக்காக சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நான்கு நாடுகளில் தகுதிச் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலுமிருந்து இரு குழுக்கள் மலேசியாவில் நடக்கும் சொற்போரில் தங்களது நாட்டைப் பிரதிநிதிக்கத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மலேசியாவின் திரங்கானு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் சொற்போரையும் மாநாட்டையும் சிங்கப்பூர் சார்பில் முதன்முறையாக தமிழர் பேரவை இளையர் பிரிவும் சிங்கைத் தமிழ்ச் சங்கம் இளையர் பிரிவும் ஒருங்கிணைக்கின்றன.

தகுதிச் சுற்றில் நான்கு அணிகள் மோதின. தேசிய சேவையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வேலை செய்பவர்கள் என அணி உறுப்பினர்கள் பலவிதப் பின்னணிகளைக் கொண்டுள்ளனர். விவாதங்கள் வெவ்வேறு அறைகளில் ஒரே சமயம் நடந்தேறின.

ஓர் அறையில், ‘டிக்டாக்’ போன்ற குறுநேர பொழுதுபோக்குச் செயலிகள் அறிவுசார் சொத்துரிமைத் திருட்டுக்கு வழிவகுக்கின்றன’ என்ற தலைப்பிலும் மற்றோர் அறையில் ‘நாடுகளுக்கிடையிலான பொருளாதாரத் தொடர்புகளில் அரசியல் தலையீடு தவிர்க்கப்படவேண்டும்’ என்ற தலைப்பிலும் விவாதங்கள் நடைபெற்றன.

ஒவ்வோர் அணியிலும் மூன்று பேச்சாளர்களும் ஒரு தயார்நிலைப் பேச்சாளரும் இருந்தனர். தலைப்புகள் ஒரு வாரத்திற்கு முன்னர் கொடுக்கப்பட்டன.

அந்தந்தத் தலைப்பில் பேசி வெற்றிபெறும் அணி, சொற்போரில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க இருப்பதாக இருந்தது.

முடிவுகள் அறிவிக்கப்படும் வேளையில் ஒரு சிறு மாற்றம் செய்யப்பட்டது. மதிப்பெண் அடிப்படையில் சிறந்த எட்டு பேச்சாளர்கள் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கத் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

எனினும், குழுவிற்கு ஏற்றாற்போல் ஒருவர் விவாதிக்கும் பாணி மாறும் என்பதால் அதை வைத்து அவரது பேச்சுத்திறனை எடைபோட முடியாது என்றும், இம்மாற்றம் குழுவுணர்வுமீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் போட்டியாளர்கள் கருத்துரைத்ததற்கு ஏற்பாட்டுக் குழு செவிசாய்த்தது.

அதனால், தம் விவாதங்களில் வெற்றிபெற்ற ‘ஆயிரத்தில் நால்வர்’ அணியும் ‘அக்னி’ அணியும் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் என முடிவானது.

மூன்று பேச்சாளர்கள் மட்டுமே உள்ள அணியில் நான்காவது பேச்சாளராக, மற்ற அணிகளிலிருந்து ஒருவர் இணைவார்.

இதையடுத்து, அவர்கள் மலேசியாவில் ஜனவரி 4ஆம் தேதி நடக்கவுள்ள காலிறுதி, அரையிறுதிச் சுற்றுகளில் போட்டியிடுவர். இறுதிச் சுற்று ஜனவரி 5ஆம் தேதி நடக்கும்.

சொற்போருடன் அனைத்துலகத் தமிழ் இளையோர் மாநாட்டிலும் கலந்துகொள்ள தமிழர் பேரவை, சிங்கைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் இளையர் பிரிவுகள்வழி விண்ணப்பிக்கலாம்.

மேல்விவரங்களுக்கு @tamilsorpor_umt, @trcyouthwing, @singaporetamilsociety இன்ஸ்டகிராம் தளங்களை நாடலாம்.

காணொளி: அனைத்துலக விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர் மற்றும் அனைத்துலகத் தமிழிளையோர் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஹேகபி‌ஷேக் குமார், 22

காணொளி: தமிழர் பேரவை இளையர் பிரிவுத் தலைவர் ‌‌ஷரீன் பேகம்

காணொளி: சிங்கைத் தமிழ்ச் சங்கம் இளையர் பிரிவுத் துணைத் தலைவர் ஜெஃப்ரின் ஃபாத்திமா

காணொளி: ‘சங்கமம்’ குழு உறுப்பினர் கணே‌ஷ் குமார் தன் அணியின் வாதத்தை சுருக்கிப் பேசினார்

குறிப்புச் சொற்கள்