ஆசிய சுவர்ப்பந்துப் போட்டி; அசத்திய இளம் வீரர்கள்

ஆசிய சுவர்ப்பந்துப் போட்டி; அசத்திய இளம் வீரர்கள்

2 mins read
கிறிஸ்டோ லியோன்
e1789115-1c85-493a-9bd9-6587b6ea4848
(இடமிருந்து) தற்காலிகத் தலைமைப் பயிற்சியாளர் குர்ஷான் சிங், வீரர்கள் நைஷா சிங், கரீனா சஷிகுமார், ரெஹான் சிங், ஜெக்ரிஷ் சஷிகுமார் ஆகியோருடன் சிங்கப்பூர்ச் சுவர்ப்பந்துச் சங்கத்தின் பொது மேலாளர் அலெக்ஸ் வான். - படம்: கிறிஸ்டோ லியோன்

உழைப்பும் ஊக்கமுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு 12 வயது சுவர்ப்பந்து வீராங்கனை கரீனா சஷிகுமார் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். 

மே 20 முதல் 24 வரை சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் உள்ள பான்ஜிஹுவா நகரில் நடைபெற்ற 33வது ஆசிய ஜூனியர் தனிநபர் சுவர்ப்பந்து போட்டியில் கரீனா, இளவயதுப் பிரிவில் முதல் பரிசை வென்றார்.

கரீனாவின் அண்ணன்,14 வயது ஜெக்ரிஷ் சஷிகுமார், 15 வயது இரட்டையர்களான நைஷா சிங், ரெஹான் சிங் ஆகிய இளம் வீரர்களும் அந்தப் போட்டியில் கலந்துக்கொண்டனர்.

அனைத்துலக அரங்கில் அவர்களின் திறமையை வெளிப்படுத்த அந்தப் போட்டி சிறப்பான வாய்ப்பாக திகழ்ந்தது. 

ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த கரீனா, எல்லா ஆட்டங்களிலும் வென்று ஒட்டுமொத்த வெற்றியாளராக உயர்ந்தார். இறுதிப்போட்டியில் ஜப்பானின் ரியோ யோஷினோவை (Rio Yoshino) ஏறத்தாழ 15 நிமிடங்களில் அவர் வீழ்த்தினார்.

தந்தை, சகோதரி ஆகியோரின் ஊக்கத்தில் கரீனா ஆறு வயதிலிருந்து சுவர்ப்பந்து விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். 10 வயதை அடைந்தவுடன் தேசிய அணியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

“இறுதிப் போட்டியின்போது நிதானமாக இருக்க வேண்டும் என்று எனக்குள்ளே கூறிக்கொண்டேன். மனத்தைத் திடப்படுத்தி விளையாட்டைக் கூர்ந்து கவனித்தேன்,” என்று கரீனா பதிலளித்தார்.

அரங்கத்தில் கால் வைக்கும்போதெல்லாம் கரீனா செலுத்தும் முழுக் கவனம் அவரது வெற்றிக்கு வழிவகுப்பதாகச் சிங்கப்பூர்ச் சுவர்ப்பந்து அணியின் தற்காலிகத் தலைமை பயிற்சியாளரான குர்ஷான் சிங் தெரிவித்தார்.

கரீனாவின் சகோதரரான ஜெக்ரி‌ஷும் இதே சுவர்ப்பந்து அணியில் அங்கம் வகிக்கிறார். அந்த விளையாட்டின் மீதான தம் ஆர்வத்தை பகிர்ந்து கொண்ட ஜெக்ரி‌ஷ், சீனாவில் நடந்த ஆசிய ஜூனியர் தனிநபர் போட்டியில் பங்கேற்று அங்கு போட்டியிட்ட அவர் பிரிவில் 10வது இடத்தைப் பிடித்தார்.

“இதுபோன்ற பெரிய போட்டிகளில் நாட்டின் சார்பாகப் பங்கேற்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

15 வயது இரட்டையரான நைஷா சிங்கும் ரெஹான் சிங்கும் தத்தம் வயதுப் பிரிவில் முறையே சிறுமியர் மற்றும் சிறுவர் பிரிவுகளில் முதல் எட்டு இடங்களுக்குள் வந்தனர்.

“சுவர்ப்பந்து என்பது மிக வேகமான, நுணுக்கமான விளையாட்டு. உங்களின் மானவலிமையையும் உடல்வலிமையையும் அந்த விளையாட்டு சோதிக்கும்,” என்று  நைஷா கூறினார்.

பெரிய போட்டிகளுக்காக விளையாட்டு வீரர்கள் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு வாரந்தோறும் ஐந்து முதல் ஆறு முறை வரை கடுமையான பயிற்சியில் மேற்கொள்வர்.

தேசிய விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் கல்விச் சுமையைக் குறிப்பிட்டுப் பேசிய சிங்கப்பூர்ச் சுவர்ப்பந்து ரேக்கெட்ஸ் சங்கத்தின் (Singapore Squash Rackets Association) பொது மேலாளர் அலெக்ஸ் வான், “மாணவர்களுக்கு நேரம் குறைவாக இருந்தாலும், சுவர்ப்பந்து விளையாட்டுக்கு  முக்கியத்துவம் அளித்து பயிற்சியில் முழுமையாக ஈடுபடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்த இளம் வீரர்கள் வரும் ஜூன் மாதம் பிலிப்பீன்சின் மணிலா நகரில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய ஜூனியர் தனிநபர் சுவர்ப்பந்து போட்டியில் மீண்டும் நாட்டின் கொடியைப் பறக்கவிடத் தயாராகி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுபோட்டிமாணவர்கள்