வருங்காலச் சவால்கள்: சண்முகத்துடன் கேள்வி-பதில்

என்யுஎஸ் பொருளியல் மன்றக் கலந்துரையாடல்

வருங்காலச் சவால்கள்: சண்முகத்துடன் கேள்வி-பதில்

2 mins read
fff2d3e6-9698-4c72-bb44-45c95665bbc6
தேசிய பல்கலைக்கழகத்தினர் நடத்திய வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் 300 உயர்நிலை, உயர்கல்வி மாணவர்கள் பங்குபெற்றனர்.  - படம் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்

வர்த்தகம், திறனாளர்கள், சிந்தனை ஆகியவற்றின் தொடர்பில் சிங்கப்பூர் கொண்டுள்ள திறந்த மனப்போக்கு, அதன் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியமானது என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மாணவர் பொருளியல் மன்றம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் மன்றம் நடத்திய வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில், உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான கா. சண்முகம் பங்கேற்றார். சாத்தம் ஹவுஸ் (Chatham House) விதிமுறைகளுக்கு உட்பட்ட அந்தக் கலந்துரையாடலில் பொருளியல், சிங்கப்பூர், அனைத்துலக விவகாரங்கள் உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் சண்முகம் பதிலளித்தார்.

“சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டுப் பொருளியலை (ஜிடிபி) காட்டிலும் நமது வெளிப்புறப் பொருளியல் மும்மடங்கு பெரிது. வெளியில் எங்கு நடந்தாலும் அதன் தாக்கத்தை நாங்கள் பன்மடங்கு உணர்கிறோம்,” என்று அவர் கூறினார்.

மாறிவரும் உலகம்

பெருங்கடலில் சிங்கப்பூரைச் சிறு படகு என வருணித்த அமைச்சர், நம் நாட்டின்மீது அண்மைய அமெரிக்க வர்த்தக வரிகள், உக்ரேன் போர், ஈரான் போர் போன்ற நிகழ்வுகள் இந்நாட்டிற்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் சுட்டினார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிங்கப்பூரின் பாதுகாப்பையும் அதன் பொருளியல் பாதுகாப்பையும் உறுதிசெய்வது வரவுசெலவுத் திட்டத்தின் முக்கியப் பணியாக இருப்பதாகத் திரு சண்முகம் தெரிவித்தார்.

“பொருளியல் பாதுகாப்பு எனச் சொல்லும்போது, சிங்கப்பூரர்களுக்கான நல்ல வேலைகளின் உருவாக்கத்தைப் பற்றியதுதான்,” என்று அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரின் வலுவான சட்டம், அரசியல் நிலைத்தன்மை, முதலீடுகளைக் காக்கும் திறம் ஆகியவை சிங்கப்பூருக்குத் தனித்துவம் சேர்ப்பதாகவும், சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகவும் திரு சண்முகம் கூறினார்.

கடந்த மாதம் வெளிவந்த 157.4 வெள்ளி மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தின்படி தேசப் பாதுகாப்புக்கான தொகை 11 விழுக்காடு உயர்த்தப்பட்டது.

உள்நாட்டில் சிங்கப்பூர் எதிர்நோக்கும் மக்கள்தொகை, ஊழியரணி சார்ந்த சவால்களும் பேசப்பட்டன.

2030ல் 65 வயதுக்கும் மேற்பட்ட ஒருவரை ஆதரிக்க, வேலை செய்யும் கிட்டத்தட்ட இரண்டு பேர் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஊழியரணியில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைச் சிங்கப்பூரர்கள் பரந்த முறையில் ஏற்றுக்கொண்டாலும் வெளிநாடுகளிலிருந்து திறனாளர்களையும் முதலீடுகளையும் வரவேற்பதால் சிங்கப்பூரர்கள் பயனடைவதாக அவர் கூறினார். 

கொள்கை ஆய்வில் தமக்கு ஆர்வம் இருப்பதாகக் குறிப்பிட்ட முதலாம் ஆண்டு கலை, சமூக மானுடவியல் துறையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சுரேஷ் பாபு ஷிவானி, அமைச்சர் பேசியவை தம்மைப் போன்ற மாணவர்களுக்குத் தேவையானவை எனக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்கள் எப்படிக் கொள்கைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும் மாறிவரும் உலகில் சிங்கப்பூரின் இடம் என்ன என்பதைக் கொள்கை வகுப்பாளர்கள் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பது பற்றியும் கேட்டறிந்தது பயனுள்ளதாக இருந்தது என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவிய ஷிவானி குறிப்பிட்டார்.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் குறித்தும், சிங்கப்பூரின் வருங்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய முக்கியமான பொருளியல், தொழில்நுட்ப, சமூக விவகாரங்கள் பற்றியும், மாறிவரும் உலகில் சிங்கப்பூரின் நிலை பற்றியும் கலந்துரையாடலில் தாங்கள் பேசியதாக அமைச்சர் சண்முகம் ஏப்ரல் 7ல் வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

கலந்துரையாடல் கலகலப்பாக இருந்ததாகவும் மாணவர்களின் கேள்விகள் நன்கு சிந்திக்கப்பட்டவையாக இருந்ததாகவும் திரு சண்முகம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்