சமூக ஊடகத்தில் தடம் பதிக்கும் ஸ்டீவன் சௌந்தரராஜன்

சமூக ஊடகத்தில் தடம் பதிக்கும் ஸ்டீவன் சௌந்தரராஜன்

4 mins read
88e61fcd-c84f-4715-8c9b-42346ec9eaee
மலேசியாவில் முன்னணி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் கலைநிகழ்ச்சியில் படைப்பாளராகப் பங்கேற்ற ஸ்டீவன் சௌந்தரராஜன். - படம்: ஸ்டீவன் சௌந்தரராஜன்
multi-img1 of 3

எதிர்ப்புகளை ஆதரவாக உருமாற்றி சமூக ஊடகங்கள்வழி பல்லாயிரம் மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் ஸ்டீவன் சௌந்தரராஜன்.

உலகம் முழுதும் தடம் பதித்துள்ள இவருடைய நகைச்சுவைக்குச் சிறப்பூட்டும் வண்ணம் சிந்தனையும் பிணைந்துள்ளது.

எவ்வித இலக்கும் எதிர்பார்ப்புகளும் இல்லாமல், பொழுதுபோக்கிற்காகத் தொடங்கியது இவருடைய சமூக ஊடகப் பயணம். தேக்கா வட்டார மக்களிடம் கேள்வி கேட்டு, வேடிக்கையாகக் காணொளித் தொகுப்புகளைப் பதிவு செய்த இவருக்கு மக்களின் ஆதரவு எதிர்பாராத அளவிற்குக் குவிந்தது.

தன் முழுநேரப் பணியிலிருந்து விலகி, இவரைத் திசைதிருப்பச் செய்தது மக்களின் வரவேற்பு. ஸ்டீவனும் அவருடைய தோழியும் இணைந்து மக்களிடையே தங்களுக்கென ஒரு பெயரை தேடிக்கொண்டனர்.

“நான் சமூக ஊடகத்தில் முழுநேரக் கலைஞனாகப் பணிபுரிவேன் என்று ஒருபோதும் கனவு கண்டதில்லை. மக்களின் பேராதரவு என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது,” என்று நினைவுகூர்ந்தார் ஸ்டீவன்.

ஸ்டீவன் அவ்வளவு எளிதாகப் புகழ்பெற்று விடவில்லை. அதற்குப்பின் பெரும்போராட்டம் உள்ளது. மக்கள் மனங்களில் இடம்பிடிக்குமுன் இவரின் நோக்கங்களைப் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர்.

தொலைபேசி மட்டுமே இவரின் பயணத் தொடக்கத்தில் கைகொடுத்த கருவி.

தொழில்நுட்பம் பெருவளர்ச்சி கண்டுள்ள இன்றைய உலகில் சமூக ஊடகங்களில் எத்தனையோ காணொளிகள் அன்றாடம் உலா வருகின்றன. சமூக ஊடகம் என்ற பெருங்கடலில் போட்டியிட்டு அங்கீகாரம் பெறுவது எளிதன்று. ஆனால், இவருடைய பதிவுகள் பொழுதுபோக்கையும் கடந்து மக்களின் உள்ளங்களைத் தொட்டன. ஸ்டீவனுடைய காணொளிகள் மக்களால் தொடர்புபடுத்த முடிகிற பதிவுகளாகத் திகழ்ந்தன; அவர்களின் அன்றாட வாழ்வின் உண்மைகளை வேடிக்கையாகப் படம்பிடித்துக் காட்டின.

தமிழால் கிட்டிய வரவேற்பு

ஸ்டீவன் தம் பயணத்தில் எதிர்கொண்ட ஒரு பெருஞ்சவால், தமிழ்ப் பதிவுகளுக்கும் வரவேற்பு கிடைக்கும் என்பதை நிரூபிப்பதுதான்.

“நான் சமூக ஊடகத்தில் கால்பதித்தபோது பலர் என் எண்ணங்களை எதிர்த்தனர். ஊடகத் துறையில் தமிழுக்கு இடமில்லை என்ற தவறான எண்ணம் மக்களிடையே தலைதூக்கியிருந்தது,” என்றார் ஸ்டீவன்.

தொடக்கத்தில் இருந்த எதிர்ப்புகளை ஸ்டீவன் தம் பயணத்தின் தொடர்ச்சிக்கான காரணமாக மாற்றி அமைத்தார். உலகெங்கும் வாழும் தமிழ்ச் சமூகத்தின் வலிமையையும் அவர்களின் ஆதரவையும் தம் ஆழமாக நம்பினார்.

“உலகளவில் மக்கள் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ள காரணம் தாய்த்தமிழே! எல்லை கடந்தும் மக்களுடன் என்னை ஒன்றிணைத்தது தமிழ்,” என்று ஸ்டீவன் பெருமிதத்துடன் கூறினார்.

சிங்கப்பூர் தமிழ்மொழியின் அழகும் இயல்பான அணுகுமுறையும் மலேசியா, இந்தியா என கடல்கடந்து வாழும் தமிழ் மக்களைச் சென்றடைந்தது. சமூக ஊடகங்களுக்குக் கடப்பிதழோ, விமானப் பயணச்சீட்டோ தேவையில்லை என்பதைத் தம் பயணம் நிரூபித்ததாக உணர்கிறார் ஸ்டீவன்.

இணையத்தில் தோன்றும் ஸ்டீவன் உண்மையின் அச்சுதான் என்பதற்கு, முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மலேசியாவில் நடத்திய கலைநிகழ்ச்சியில் அவர் படைத்த படைப்பு சான்றாக விளங்கியது.

“இக்காலத்து மக்கள் போலியான மனிதர்களை எளிதில் கண்டறிந்துவிடுவார்கள். அதனால் நான் திரையிலும் உண்மையிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறேன். அதுவும் மக்கள் என்னைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் காணச் செய்தது,” என்று ஸ்டீவன் நம்புகிறார்.

தொலைபேசியில் எண்களாக மட்டுமே பார்த்திருந்த மக்கள் ஆதரவை நேரில் அனுபவிக்கும் வாய்ப்பாக, விஜய் ஆண்டனி கலைநிகழ்ச்சி அமைந்ததாக உணர்ந்தார் இவர். தம்மை நேரில் காண மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அவர் மேடையில் காலெடுத்து வைத்த தருணம், திரும்பிய இடமெல்லாம் மக்கள் கைதட்டி வரவேற்றனர்.

“மக்களின் ஆதரவை நேரில் கண்டபோது, நான் அன்புக் கடலில் மூழ்குவதுபோல் உணர்ந்தேன்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ஸ்டீவன்.

உடல் எடையைக் குறைத்தார்

நகைச்சுவைவழி மக்களின் பேராதரவைப் பெற்ற இவர், அத்துடன் நின்றுவிடவில்லை. நகைச்சுவையோடு சிந்தனையையும் விதைக்க வேண்டும் என்று தீர்மானித்ததாகக் கூறினார். அதனால், தன் அடுத்தகட்ட முயற்சியாக, இவர் தமது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக அவர் மாறுபட்டதொரு வழியைத் தேர்ந்தெடுத்தார்.

ஸ்டீவனுடைய உடல் எடைக் குறைப்புப் பயணம் இந்தியாவில் தொடங்கியது.

“வலியும் உழைப்பும் பயன்தரும் என்பதை மக்களிடம் வலியுறுத்தவே நான் இந்தப் பயணத்தில் ஈடுபட நினைத்தேன்,” என்றார் இவர்.

2025 ஜூன் மாதத்தில் சென்னைக்குச் சென்றார் ஸ்டீவன். அங்குள்ள பாரம்பரிய உணவுமுறையைக் கைவிடாமலும் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதைத் தம் காணொளிகள் மூலம் நிரூபித்தார். தமிழர் உணவுப் பழக்கம் எடைக்குறைப்புக்குக் கைகொடுக்காது என்ற அவநம்பிக்கையை முறியடித்தது இவருடைய அம்முயற்சி.

கண்ணீர், வலி, சோர்வு என எதையும் மறைக்காமல், உடற்பயிற்சிப் பயணத்தை இவர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அது மக்கள் மனங்களைக் கவர்ந்ததோடு, அவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக விளங்கியது.

தொடக்கத்தில், மூன்று மாதத்திற்குத் திட்டமிடப்பட்ட இந்த எடைக்குறைப்புப் பயணத்தை ஸ்டீவன் பத்து வாரங்களில் முடித்தார்.

ஊடகத் துறையில் தொடர்ந்து சிறந்து விளங்க மேலும் பல திட்டங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார் ஸ்டீவன்.

தம் எடைக்குறைப்புப் பயணத்தின் இரண்டாம் பாகத்தை சிங்கப்பூரில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். சிங்கப்பூரர்களின் பரபரப்பான வாழ்க்கைமுறையில் பெரிதும் விரைவு உணவை நாடுவதே வழக்கம். அந்தப் பரபரப்பிலும் உடல்நலத்தை பேணுவது எப்படி என்பதே இரண்டாம் பாகத்தின் மையக்கரு. அத்துடன், செல்லப்பிராணிகளைக் கொண்டு சுவாரசியமான புதிய கதைக்களங்களையும் திட்டமிட்டு வருகிறார் இவர்.

சமூக ஊடகத்தில் படைப்பாளராக, ஆவலுடன் கால் எடுத்து வைக்கத் துடிக்கும் இளையர்களுக்கு ஸ்டீவன் அறிவுறுத்துவது ஒன்றை மட்டும்தான்.

“புகழும் பணமுமே உங்கள் பயணத்தின் குறிக்கோளாக இருக்கக்கூடாது. ஆழ்மனத்தில் இருக்கும் உண்மையான குரலுக்கான தளமே சமூக ஊடகம். அவ்வழிதான் வெற்றி வீடு தேடி வரும்,” என்று ஸ்டீவன் அறிவுறுத்துகிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சியையும் தாண்டி, மனிதர்களின் உண்மையான அன்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பயணிக்கும் ஸ்டீவனின் சமூக ஊடகப் பயணம் அதற்கான முன்மாதிரியாகத் திகழ்கிறது.

குறிப்புச் சொற்கள்