சமூக ஊடகம் என்றதோர் உலகம்: ஒரு சமுதாயப் பார்வை

சமூக ஊடகம் என்றதோர் உலகம்: ஒரு சமுதாயப் பார்வை

3 mins read
146f0246-e26d-4c08-ac8d-9ab5abb5eb2d
அதிக சுதந்திரத்தை உணரும் சமூக ஊடகப் பயனாளர்கள், அதற்குரிய பொறுப்புணர்வைக் கடைப்பிடிக்கச் சிலசமயம் தவறிவிடுகின்றனர்.  - படம்: பிக்சாபே

தந்தையிடமிருந்து 60 வெள்ளி மதிப்புடைய கைப்பையைப் பெற்றுக்கொண்ட இளையர் ஸோயி கேப்ரியல், அதுவே தனது ‘முதல் ஆடம்பர வகைப் பை’ என்று தந்தைக்கு நன்றி கூறி சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

ஆனால், அந்தக் காணொளிப் பதிவை மக்கள் பலவாறாக விமர்சித்தனர்.

அந்தக் கைப்பையை ‘ஆடம்பரவகை’ என்று ஸோயி குறிப்பிட்டதை, டிக்டாக் பயனர்கள் சிலர் அறியாமை என்று கூறி இளையரை ஏளனம் செய்தனர்.

அதையடுத்து இச்சம்பவம் உள்ளூர் நடப்பாகவே பேசப்பட்டது. சமூக ஊடகத்தின் தாக்கத்தை இதில் உணர முடிந்தது.

அப்போது துணைப் பிரதமராக இருந்த திரு லாரன்ஸ் வோங், தாம் நிகழ்த்திய ஓர் உரையில் இச்சம்பவத்தைச் சுட்டிக்காட்டியும் பேசினார்.

மக்களிடையே ஆரோக்கியமான போட்டித்தன்மையும் வாழ்க்கையில் மேம்படும் ஆசையும் உண்டாவதில் கவனம் இருக்க வேண்டுமே தவிர, சமுதாயத்தில் தங்களின் தகுதிநிலையைத் தவறான காரணங்கள் அடிப்படையில் மதிப்பிடக்கூடாது என்றார்.

இரக்கமற்றதா...

ஒரு தந்தை தம் மகளுக்குப் பாசமாகத் தந்த பரிசைக் குறைத்து மதிப்பிட்டது சரியா? 17 வயது ஸோயியைச் சமூக ஊடகவாசிகள் கேலி செய்தது சரியா?

சமூக ஊடக உலகம் இதுபோன்ற பல சூழல்களில் இரக்கமற்றதாகத் தோன்றுகிறது.

யார் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம் என்ற அனுமதியை இன்றைய சமூக ஊடகத் தளங்கள் தருகின்றன. இதனால் அதிக சுதந்திரத்தை உணர்ந்திடும் சமூக ஊடகப் பயனாளர்கள், அதற்குரிய பொறுப்புணர்வைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகின்றனர்.

இது அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்தும். அனைத்து விவகாரங்களுக்கும் பொருந்தும்.

சட்டங்கள் அவசியம்

அதனால்தான், ‘பொஃப்மா’ போன்ற சட்டங்கள் வரையறை வகுத்து உதவுகின்றன.

சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயகத்தன்மையையும் முடக்குவதைவிட, ஆரோக்கியமான முறையில் அவற்றை வெளிப்படுத்தும் கலாசாரத்தை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. 

பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் டிக்டாக் உட்பட பல சமூக ஊடகத்தளப் பயனாளர்களுக்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகச் சோர்வு

இது ஒரு பக்கம் இருக்க தினமும் பலதரப்பட்ட உலக, உள்ளூர் நடப்புகளைப் பற்றிச் சமூக ஊடகம் வாயிலாக அறிந்திடும் மக்களிடையே அவை குறித்த உணர்திறன் குறையக்கூடும்.

தினமும் குறைந்தபட்சம் போர் குறித்த ஒரு பதிவையாவது நாம் சமூக ஊடகத்தில் பார்ப்பதுண்டு.

உயிரிழந்த குழந்தைகள், கதறும் பெற்றோர், சிதைவுகளிடையே மக்கள் என மனதை உருக்கும் இக்காட்சிகளை அதிகமாகக் காணும்போது ‘ஊடகச் சோர்வு’ (Media Fatigue) ஏற்படலாம்.

இரக்கப்படும் தன்மையைத் தாங்கள் அறியாமலேயே மக்கள் மெல்ல இழக்க, இதுபோன்ற காட்சிகளைக் கொண்ட சமூக ஊடகங்கள் வழிவகுக்கலாம்.

விழிப்புணர்வு வேண்டும்

உலகைச் சமூக ஊடகம்வழி காண்பதோடு அதை நம்பும் இளையர்களை, இன்றைய மெய்நிகர் சூழல் பாதிக்கும் என்று கூறுவதே கசப்பான உண்மை.

இணையச் செய்திகளை வாசித்துப் பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மக்களை வளர்த்தெடுப்பதற்குத் தற்போது பள்ளிகளில் அதிக முன்னுரிமை தரப்பட்டு வருவது நம்பிக்கை அளிக்கும் ஒரு படி.

உலகத்துடன் இணைப்புத்தன்மையை அதிகரிக்க உதவும் சமூக ஊடகங்கள், என்றுமே கவனத்துடன் கையாளப்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் சமூக ஊடகம் என்றதோர் உலகம் அனைவருக்கும் இன்பத்தையும் பாதுகாப்பையும் அளிக்கவல்லது.

குறிப்புச் சொற்கள்