இளையர் பார்வை: சமூக ஊடகங்களில் அழகுத் தரநிலைகள்

3 mins read
54ddec99-c860-48c8-a729-7a76a52293fb
வெளித்தோற்றத்தைக் குறிவைக்கும் இணைய துன்புறுத்தல், இளையர்களை அதிகம் பாதிப்பதாக மனநலக் கழகம் தனது அண்மைய ஆய்வில் தெரிவித்தது.  - படம்: பிக்சாபே

நந்தினி சுவாமிநாத ராஜா

அழகான தோற்றம் என்றால் என்ன என்பது குறித்து ஒவ்வொருவரும் வெவ்வேறு எண்ணங்களைக் கொண்டிருப்பர்.

அழகுக்கென்ற வரையறை காலப்போக்கில் மாறியும் வரக் காணலாம். இருப்பினும், தோற்ற அழகு பற்றிய பல்வேறு சிந்தனைகள் சமூக ஊடகங்களில் வலம் வருவதைத் தொடர்ந்து பார்ப்பதால் இளையர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

மனநலக் கழகம் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட்ட ஆய்வின்படி, இளையரிடையே மனநல பாதிப்பு ஏற்பட அளவுக்கு மீறிய சமூக ஊடகப் பயன்பாடும் தோற்றம், உடல்வாகு குறித்த கவலையும் முக்கிய காரணங்களான உள்ளன.

வெளித்தோற்றத்தைக் குறிவைக்கும் இணைய துன்புறுத்தல் குறிப்பாக இளையர்களை பாதிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட அழகுத் தரநிலையை எட்ட வேண்டும் என்ற அழுத்தத்தைச் சிலர் உணர்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மனநலக் கழகத்தின் தேசிய இளையர் மனநலம் ஆய்வின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இளையர்களில் 20.2 விழுக்காடு அல்லது ஒன்றில் ஐந்து பேருக்கு, அவர்களின் உடல் அமைப்பின் மீதான எதிர்மறை எண்ணங்களும் கவலைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் உணவுப் பழக்கக் கோளாறுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன.

சிங்கப்பூரில் பதின்ம வயதில் இருவரில் ஒருவர், தங்களைப் பருமன் எனக் கருதுவதாகவும் பத்தில் எட்டுப் பேர், தங்களது தோற்றத்தை மாற்ற விரும்புவதாகவும் ‘எஸ்ஏசிஏசி’ மனநல ஆலோசனை அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டது.

இளையர் கருத்து

இளையர் சிலர் தங்களது தோற்றம் தொடர்பாக சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து தமிழ் முரசிடம் பேசினர்.

உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்ற விருப்பத்தால் அதிகப்படியாக உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டதாக மிலெனியா கல்விநிலைய மாணவி 17 வயது இளஞ்செழியன் இலக்கியா தெரிவித்தார்.

“பொலிவான வெளித்தோற்றத்திற்கு ஆசைப்பட்டு என் உடலையும் மனதையும் வருத்திக்கொண்டேன். சமூக ஊடகங்களில் நான் பார்த்த காணொளிகள் இந்தத் தவறான எண்ணத்தைத் தூண்டின,” என்று அவர் கூறினார்.

இறுதியில் சத்துணவு, உடற்பயிற்சி இரண்டையும் தம் வாழ்க்கைமுறையுடன் சேர்த்துக்கொண்டார் இலக்கியா.

விக்டோரியா தொடக்கக்கல்லூரியில் படிக்கும் 18 வயது காவ்யா மணிகண்டனும் சமூக ஊடகங்களால் புறத்தோற்றம் பற்றி ஒரு காலகட்டத்தில் கவலைப்பட்டவர்.

சரியாகச் சாப்பிடாமல் பின் கவலைக்கு ஆளாகி இறுதியில் தெளிவடைந்தார்.

“எந்தப் பிரபலமாக இருந்தாலும் மனிதர்களின் அழகும் இளமையும் என்றும் நிலைப்பதில்லை. ஒரு மாணவியாக, என் தோற்றத்தைக் கலைத்துறையினருடன் ஒப்பிடுவது வீண் என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்றார்.

நிபுணர்களின் தீர்வு

வெளித்தோற்றத்தை நினைத்துத் துவண்டுபோகும் இளையர்கள், தங்கள் எண்ணங்களைச் சீர்செய்வதற்கான சில உத்திகளை மனநல ஆலோசகர் கோபால் மஹே பரிந்துரைத்துள்ளார்.

“முதலில் நம்மீது நாமே பரிவு காட்டவேண்டும். எல்லோருக்கும் எல்லாவித அழகுக் கூறுகள் இயற்கையாக அமைந்திடாது. ஒவ்வொருவரும் ஒருவகையில் அழகு என்ற பண்பார்ந்த எண்ணத்தை நம் மனதிற்குள் விதைக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.

அளவுக்கு அதிகமாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆரோக்கியமான கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதிப்பது சிறந்தது என்றும் திரு கோபால் அறிவுறுத்தினார்.

மனநலம், உடல் ஆரோக்கியம், தன்முனைப்பு போன்ற நேர்மறையான கருத்துகளைப் பரப்பும் சமூக ஊடகப் பக்கங்களுடன் இணைவது சிறப்பு என்றும் அவர் கூறினார்.

நமக்கு நாமே ஊக்கம் தரவேண்டும் என வலியுறுத்தும் சமூக ஊடகப் பிரலமான இயன் ஜீவன், 28, ஒவ்வொருவரின் தோற்றமும் தனித்தன்மை மிக்கது என்றும் மதிப்புகுரியது என்றும் கூறியுள்ளார்.

“மரபணுக்களின் கூட்டமைப்பால் உருவானது நம் உடல். மற்றவர்களின் உடற்கூறுகளுடன் நாமும் ஒத்திருக்க வேண்டும் என விரும்புவதில் பயன் இல்லை. அத்துடன், கண்ணால் காண்பது அனைத்தும் உண்மை அல்ல என்பது சமூக ஊடகங்களுக்குச் சாலப் பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,” என்றார் திரு ஜீவன்.

குறிப்புச் சொற்கள்