ஆர்ச்சர்ட், சமர்செட் வட்டாரங்கள் எனும்போது அவ்விடங்களில் வரிசையாக உள்ள கடைத்தொகுதிகள்தான் முதலில் நம் நினைவுக்கு வரும்.
ஆனால், ஆர்ச்சர்ட் சாலைக்குப் புத்துயிர் ஊட்டும் பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக, இளையர்களுக்கான இடமாக சமர்செட் வட்டாரத்தை மாற்றியமைக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘சமர்செட் பெல்ட்’ என்றழைக்கப்படும் இந்தப் புதிய மறுசீரமைப்புத் திட்டத்தில் இளையர்களின் பங்களிப்பு உன்னதம். அவர்களின் புத்தாக்க யோசனைகளைக் கருத்தில் கொண்டு இந்த மறுசீரமைப்புப் பணி நடந்துவருகிறது.
கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முன்னர் 9,000 இளையர்கள் ‘சமெர்செட் பெல்ட்’ எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதை ஒட்டித் தங்களின் பரிந்துரைகளை முன்வைத்தனர்.
மறுசீரமைப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக இளையர்கள் பலரும் கூடும் இடமாகப் பலகாலம் விளங்கி வரும் சமர்செட்டில் அமைந்துள்ள ‘ஸ்கேப்’ பகுதியும் சறுக்குப் பூங்காவும் மாற்றியமைக்கப்படும்.
இளையர் பூங்கா எனும் புதிய அம்சமும் சேர்க்கப்படும். இதை அடுத்து, இளையர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட யோசனைகளைச் செயல்படுத்தும் வகையில் ‘சமர்செட் ரீசெட்’ எனும் ஆறு மாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கட்டடக் கலைஞர்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியோருடன் இளையர்கள் இணைந்து திட்டமிடப்பட்ட யோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்துவதில் இறங்குவர்.
அத்திட்டம் சனிக்கிழமை (8 பிப்ரவரி) பிற்பகல் ஸ்கேப் வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. கட்டடக் கலைஞர்களுடன் இணைந்து வடிவமைப்பது போன்ற நடவடிக்கைகளில் இளையர்கள் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக 30 இளையர்கள் மூன்று தொடர் பயிலரங்குகளில் ஈடுபடுவார்கள். அவ்வாறு ஸ்கேப் வளாகத்தில் இடம்பெற்ற முதல் பயிலரங்கில், இளையர்கள் அவ்வளாகத்தில் இரண்டு நாள்கள் தங்கி, பல்வேறு அமர்வுகளில் தங்களின் யோசனைகளை பரிமாறிக்கொண்டனர்.
கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் முதல் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார்.
“இன்றைய இளையர்களான நீங்கள் நாளைய இளையர்களை நினைவில் கொண்டு திட்டமிட உங்களுக்கு நாங்கள் அனைத்து வசதிகளையும் உதவிகளையும் வழங்குகிறோம். அதை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
திட்டமிடும் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இளையர்கள் இரவில் சமர்செட் பெல்ட் இடத்தில் வழிகாட்டுதல் சுற்றுலாவில் கலந்துகொண்டு உத்தேசித்துள்ள இடங்கள், அவை எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை நேரடியாகப் பார்வையிட்டார்கள்.
அவர்களின் திட்டங்கள் எவ்வாறு சமூகத்தில் ஒருங்கிணைக்கப்படும், எவ்வாறு அவர்களின் திட்டங்களை மேம்படுத்தலாம் என்பது குறித்தும் கலந்துரையாடினர்.
அடுத்தடுத்த பயிலரங்குகளில் கலந்துகொள்ளும்போது இளையர்கள் குழுக்களாகத் திட்டத்தை மெருகூட்டும் நடவடிக்கைகளில் ஆழமாக ஈடுபடத் தொடங்குவர்.
மேலும் அதிகமான இளையர்களை இதில் ஈடுபடுத்த ஊக்குவிப்பதிலும் அவர்கள் இறங்குவார்கள். அடுத்த சில மாதங்களில் பொதுமக்கள் அந்த வட்டாரத்தில் இளையர்களை ஈடுபடுத்தும் பல நிகழ்ச்சிகளைக் காணலாம்.
இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு https://somersetbelt.sg/reset/ இணையத்தளத்தை நாடலாம்.