தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொற்கனல் 2025: வாகை சூடிய சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக அணி

2 mins read
7f41fcfc-7cd6-419a-b55d-1e94454e5dcb
சொற்கனல் 2025யின் வெற்றியாளர் கிண்ணத்தை ஏந்திநிற்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் (என்யுஎஸ்). - படம்: மொமெண்ட்டோ விஷன்
multi-img1 of 3

பல்கலைக்கழக மாணவர்கள் மோதிக்கொண்ட சொற்கனல் விவாதக் களம், மூன்றாவது ஆண்டாக, செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணிவரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சிங்கைத் தமிழ்ச் சங்க இளையர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற அப்போட்டிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீத் ரசாக்.

அவைத் தலைவராக திருவாட்டி இலக்கியா செல்வராஜி சுவாரசியமான முறையில் போட்டியை வழிநடத்தினார். நடுவர்களாக டாக்டர் சரவணன், திரு முகமத் அலி ஆகியோர் செயலாற்றினர்.

இவ்வாண்டின் சொற்கனல் மாறுபட்டமுறையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி விவாதப் பயிலரங்கை ஏற்பாடுசெய்து, அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. அதில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதிச் சுற்றுக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவர்களும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

சொற்கனல் விவாதக் களம் இரண்டு சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டது.

இன்றைய மாணவர்களின் கல்விக்குச் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பாதகமாக அமைகின்றது என்ற தலைப்பில் முதல் சுற்று நடந்தது.

இரண்டாவது சுற்றில், சமூக ஊடகங்கள் மனிதர்களின் சிந்தனைச் சுதந்திரத்தைப் பறிக்கிறது, செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற முடியாது, கல்லூரி கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் போன்ற தலைப்புகளில் அணியின் ஒவ்வொரு பேச்சாளரும் எதிரணிப் பேச்சாளரோடு தனித்தனியாக மோதினர்.

பார்வையாளர் போட்டிச் சுற்றில், தனி மனிதப் பேச்சு, அரசாங்கத்தால் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில் மூவர் பேசினர்.

கடுமையான விவாதங்களுகுப் பின் ‘என்யுஎஸ்’ அணி முதல் பரிசை வென்றது. சிறந்த பேச்சாளர் பரிசை என்யுஎஸ் மாணவி விஷ்ணு வர்தினி வென்றார்.

“பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தமிழைப் பாடமாக மட்டுமே பார்க்கின்றனர். இச்சிந்தனையை மாற்றி அமைக்க ‘சொற்கனல்’ போன்ற நிகழ்ச்சிகளைச் சுவாரசியமான முறையில் ஏற்பாடு செய்கிறோம்,” என்றார் சிங்கைத் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவரும், சொற்கனல் 2025யின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான தயாமயீ பாஸ்கரன், 18.

வெற்றிபெற்ற என்யுஎஸ் அணியின் முதல் பேச்சாளரான வைஷ்ணவி, 19, “இது போன்ற போட்டிகளின் மூலம் எங்களது சிந்தனைத் திறனை மேம்படுத்த முடிகின்றது. மேலும் இளையர்களிடையே தமிழின் புழக்கம் அதிகரிக்க இது போன்ற மேடைகள் உதவுகின்றன,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்