தலைசிறந்த விருதுகள் பெற்ற மாணவர்கள்

4 mins read
efa7b5ab-28b2-410a-a472-09a1dec2865d
விருதுபெற்ற மாணவர்கள் - (இடமிருந்து) கேசவன் அவந்திகா, ரோ‌ஹன் செந்தில், ஆகா‌ஷ் தியாகராஜன், பிரியாந்த் பரிமேலழகன்.    - படம்: பெரித்தா ஹரியான்

கல்வி, இருமொழியாற்றல், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குச் சிறப்பு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு 206 மாணவர்கள் பிரதமர் புத்தகப் பரிசு, கணிதம், அறிவியலுக்கான லீ குவான் யூ விருது, திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் லீ குவான் யூ விருது உள்பட 11 விருதுகளைப் பெற்றனர்.

விருதுபெற்ற மாணவர்கள் அதனை ஊக்கமளிக்கும் அங்கீகாரமாகக் கருதுவதாகத் தங்கள் மகிழ்ச்சியையும், பெருமையையும் வெளிப்படுத்தினர்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், கல்வி அமைச்சரும், சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விருதுகள் பல பெற்ற ரோஹன்

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்று தற்போது தேசிய சேவையாற்றக் காத்திருக்கும் அவர், கணக்கு, அறிவியல் பாடங்களுக்கான லீ குவான் யூ விருது, தலைசிறந்த அனைத்துத்துறைச் சாதனையாளருக்கான லீ சியன் லூங் விருது, லீ சியன் லூங் இருவழி மின்னிலக்க ஊடக அறிவார்ந்த தேச விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார் ரோ‌ஹன் செந்தில்.

உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் இணையப்பாதுகாப்புத் துறைமீது ஆர்வம் பிறந்ததாகவும், அதனைப் பயன்படுத்திச் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என விரும்புவதாகவும் சொன்னார் ரோ‌ஹன்.

இவர், சமூகத்தில் பரவியுள்ள மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், தம் குழுவினருடன் இணைந்து வைரேஜ் (Virage) எனும் மென்பொருளை உருவாக்கியுள்ளார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருள், எவ்வாறு மோசடிகள் நடக்கின்றன என்பதை அனைவரும் அறிய உதவுகிறது.

“தொண்டூழியத்தில் ஈடுபட்டபோது, மூத்தோருக்கு இந்த விழிப்புணர்வு தேவை என்பதை அறிந்தேன். அதனை எதிர்கொள்ள இந்த மென்பொருளை உருவாக்கினோம். “இதனை ஆங்கிலம், தமிழ், இந்தி, சீனம், மலாய் ஆகிய மொழிகளில் பயன்படுத்தலாம். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தலாம்,” என்றார் ரோஹன்.

இறுதியாண்டுத் திட்டமாகத் தொடங்கப்பட்டது, ஒரு ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்றும், அதற்காகத் தொழில்துறை வல்லுநர்களிடம் பகிர்வது உள்பட அதிக உழைப்பை அளிக்க வேண்டியிருந்தது என்றும் அவர் சொன்னார்.

“இது சமூகத்தில் ஏற்படுத்தும் நல்ல தாக்கத்தை எண்ணும்போது, சவால்கள் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை,” என்றார் ரோஹன்.

பொதுத்துறையில் இணைந்து சமூகத்துக்காகப் பணியாற்றுவதே இலக்கு என்ற அவர், “விருதுகள் வாங்க வேண்டும் என்பதற்காக உழைக்கவில்லை. மேற்கொண்ட பணியை நன்கு செய்தால் அதற்காக அங்கீகாரம் கிடைக்கும் என்பதை அறிந்தேன். இந்த விருதுகள் கிடைத்ததில் பெருமை,” என்று கூறினார்.

இந்தியப் பண்பாட்டைத் தாம் பின்பற்றி, அடுத்துவரும் தலைமுறையினரையும் அவ்வழியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டுள்ளார் மாணவி கேசவன் அவந்திகா, 13.

ராஃபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில், உயர்நிலை ஒன்றில் பயிலும் இவர், இருமொழித்திறன், தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றின்மீது பெருவிருப்பம் கொண்டுள்ளார்.

பிரதமர் புத்தகப் பரிசு பெற்றுள்ள இவர், “தமிழ்ப் பாடநூல்களுடன், பிற நூல்களையும் வாசிக்கிறேன். புதிய சொற்களைக் கற்று, அவற்றைப் பயன்படுத்துகிறேன். மொழியுடன் உடை, உணவு, பண்டிகை என அனைத்தையும் நுணுக்கமாக அறிந்துகொள்வது எனக்குப் பிடிக்கும்,” என்றார்.

மருத்துவராவதை இலக்காகக் கொண்டுள்ள இவர், ஆங்கிலம், தமிழ் இருமொழியிலும் ஆற்றலுடன் விளங்குவது தொழில்முறையிலும், வாழ்விலும் சிறக்க உதவும் என நம்புவதாகச் சொன்னார்.

கணிதப் பயிற்றுவிப்பாளரான தம் தந்தையின் மூலம் இளவயதிலேயே கணிதம் அறிமுகமானதால், அதன் மீது ஆர்வமும் பிறந்ததாகக் கூறினார் கணிதம் மற்றும் அறிவியலுக்கான லீ குவான் யூ விருது வென்ற மாணவர் ஆகா‌ஷ் தியாகராஜன்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கணித, அறிவியல் உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாமாண்டு பயிலும் இவர், அனைத்துலகக் கணித ஒலிம்பியாட் 2024, சீனக் கணித ஒலிம்பியாட் 2024 ஆகியவற்றில் வெள்ளியும், சிங்கப்பூர் கணித பொது ஒலிம்பியாட், சீனியர் ஒலிம்பியாட் ஆகியவற்றில் தங்கமும் வென்றுள்ளார்.

வானியல், குவான்டம் கணினியியல், புள்ளியியல்,வேதியியல், இயற்பியல் ஆகிய துறைகளின் மீதும் தமக்கு ஆர்வம் உள்ளதாகக் கூறிய அவர், “கணிதம், இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் துறைகள்தான் பல நவீனத் துறைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. அவற்றில் சிறந்து விளங்குவதன் மூலம், எதிர்காலத்தில் எடுக்கும் துறைகளில் குறிப்பிடத் தக்க வகையில் செயலாற்ற முடியும் என நம்புகிறேன்,” என்றார் ஆகா‌ஷ்.

பிற மாணவர்களுக்கு ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ததைச் சுட்டிய அவர், கணிதம், இயற்பியல் ஆர்வக்குழுக்களில் பங்காற்றுவதன் மூலம் எனக்குத் தெரிந்தவற்றைப் பிறருடன் பகிர்வதில் தமக்கு விருப்பம் என்றும் சொன்னார்.

பொறியியல், நிதித்துறை ஆகிய கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட துறைகளில் பணியாற்ற விழையும் இவர், “விருது வென்றதில் மகிழ்ச்சி. தொடர்ந்து எனக்கு விருப்பமான துறைகளில் சிறந்து விளங்குவதுடன், என்னைப்போல ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க விழைகிறேன்,” என்றார்.

அங்கீகாரத்தை தாண்டி, தன்மேம்பாடுதான் வெற்றியென நம்புகிறார் திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் லீ குவான் யூ விருதினையும், சுல்தான் ஹஜி ஓமார் சைஃபுதின் புத்தகப் பரிசினையும் பெற்ற மாணவர் பிரியாந்த் பரிமேலழகன், 19.

தொழில்நுட்பக்கல்விக் கழகத்தில் பயின்றபோது மின்னிலக்கமயமாக்கம், நிலைத்தன்மைப் போட்டிகளில் பங்கேற்ற குழுக்களை வழிநடத்திய இவர், அனைத்தையும் ஒரே மனநிலையிலிருந்து அணுகுவதே தமக்கு நல்ல தலைமைத்துவப் பண்புகளை வழங்கியுள்ளதாகவும் கருதுகிறார். தற்போது தெமாசெக் தொழில்[Ϟ]நுட்பக் கல்விக்கழகத்தில் பயிலும் இவர், “எதிர்காலத்தில் படைப்பாற்றலை அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தைத் தொடங்க விரும்புகிறேன். என்னைப் போன்ற ஆர்வமுள்ள பதின்ம வயதினருடன் இணைந்து பணியாற்றி, அவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவும் விருப்பம் கொண்டுள்ளேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்