இளையர்கள் மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் அளித்த ‘ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா’

2 mins read
கல்வி, இணைப்பாட நடவடிக்கைகளுக்கு இடையே உற்சாக விளையாட்டுகள்
7cffb00c-5d41-4e73-b581-8a88acba9c92
விறுவிறுப்பான ‘கேப்டன்ஸ் பால்’ விளையாட்டில் ஈடுபட்ட இளையர்கள். - படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை
multi-img1 of 2

வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக, ஆண்டுதோறும் என்யுஎஸ் தமிழ்ப் பேரவை நடத்திவரும் ‘ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா’ அமைந்து வருகிறது.

சிறுவயதிலிருந்து ஒன்றாக விளையாடி வரும் நண்பர்கள் முதல் தொழில்நுட்பக் கல்விக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகம் மூலம் இணைந்தவர்கள் வரை தங்களின் பொழுதை உற்சாகத்தோடு கழிக்க பிப்ரவரி 15ஆம் தேதி சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) வளாகத்தில் ஒன்றுகூடினர்.

லாப நோக்கமற்ற ‘ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா’ விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த, இரண்டாம் ஆண்டாக சிண்டா இளையர் மன்றமும் இணை ஏற்பாட்டாளராக இம்முறை இணைந்தது.

காலை 9 முதல் மாலை 6 மணி வரை விளையாட்டுகள் நடைபெற்றன.

இவ்வாண்டு ஆண்களுக்கென ஃபுட்சால், பெண்களுக்கென பூப்பந்து, இரு பிரிவுகளும் கலந்து விளையாடும் ‘கேப்டன்ஸ் பால்’ என மூவகையான விளையாட்டுகளில் மாணவர்கள் போட்டியிட்டனர்.

“ஒவ்வொரு விளையாட்டிலும் 10 முதல் 16 அணிகள் கலந்துகொண்டன. கொவிட்-19 காலத்திற்குப் பிறகான ஆண்டுகளைவிட இவ்வாண்டு அதிக எண்ணிக்கையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,” என்றார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் முரளிகிரு‌ஷ்ணன் தீக்‌ஷிதா, 22.

முதல் மூன்று நிலைகளில் வந்த அனைத்து அணிகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முதலிடத்தில் வந்த அணியினருக்கு ரொக்கமும் வழங்கப்பட்டது.

இடையிடையே இளையர்கள் பரமபதம், அ‌ஷ்ட சம்மா, பல்லாங்குழி, பம்பரம், கேரம், சதுரங்கம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தனர்.

“இதுவே என் முதல் ஸ்பெக்ட்ரா. அனைத்துத் தமிழர்களும் இணைந்து விளையாடுவதால் ஒற்றுமை உணர்வை இங்கு காண முடிகிறது,” என்றார் தருண் இளங்கோவன், 21.

“நாங்கள் அனைவரும் ஒரே வட்டாரத்தில் உள்ள நண்பர்கள். மாதத்திற்கு ஒருமுறையாவது நாங்கள் இணைந்து விளையாடுவோம்,” என்றார் காற்பந்துப் பிரிவில் மூன்றாம் நிலையில் வந்த அணியின் தலைவர் அல் ஹக்கீஸ், 23.

“நெடுங்காலம் ஒன்றாக விளையாடிய பந்தம்தான் எங்களை வெற்றிக்கு இட்டுச் சென்றது,” என்றார் அதே பிரிவில் முதல் பரிசு வென்ற அணியின் அபி‌ஷேக் சங்கர், 20.

“நாங்கள் அனைவரும் நண்பர்கள்தான். ஒரு பொழுதுபோக்குக்காக இன்று விளையாடினோம்,” என்றார் ‘கேப்டன்ஸ் பால்’ வெற்றியாளர் லட்சுமி மீனா, 20.

“எங்கள் அணி சிறுவயதிலிருந்து ஒன்றாக விளையாடிவருகிறது. என் அண்ணனும் முன்பு ஸ்பெக்ட்ராவில் விளையாடியுள்ளார்,” என்றார் தனது காற்பந்து அணியின் தலைவர் மொஹம்மத் நி‌‌‌ஷாருதீன், 22.

தனது காற்பந்து அணியுடன் மொஹம்மத் நி‌‌‌ஷாருதீன், 22 (வலமிருந்து 2வது), தருண் இளங்கோவன், 21 (பின்வரிசை, இடமிருந்து 2வது).
தனது காற்பந்து அணியுடன் மொஹம்மத் நி‌‌‌ஷாருதீன், 22 (வலமிருந்து 2வது), தருண் இளங்கோவன், 21 (பின்வரிசை, இடமிருந்து 2வது). - படம்: ரவி சிங்காரம்
கேரம் விளையாடும் இளையர்கள்.
கேரம் விளையாடும் இளையர்கள். - படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை
குறிப்புச் சொற்கள்