சிங்கப்பூரின் விளையாட்டு வரலாற்றை இளையர்கள் அறியும் வகையில் ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பு புதிய வழிகாட்டுச் சுற்றுப்பயணம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ளச் செய்யும் நோக்கில் ‘கலை, கோட்டை, விளையாட்டு: காத்தோங் - காலாங் சுற்றுப்பயணம்’ (Of Art, Fort and Sport: A Katong-Kallang Tour) எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுப்பயணம் காத்தோங் - காலாங் வட்டாரங்களின் மரபையும் சிங்கப்பூரின் வரலாற்றையும் காட்சிப்படுத்தும். இளையர்கள் சிங்கப்பூரின் முன்னாள் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைத் தெரிந்துகொள்ள முடிவதோடு, நாடு குறித்த பெருமிதம், சமூக ஒற்றுமை போன்ற பண்புகளை வளர்ப்பதே இதன் நோக்கம்.
இந்த வழிகாட்டுச் சுற்றுப்பயணம் ஸ்போர்ட்எஸ்ஜி (SportSG), காலாங் அலைவ் ஸ்போர்ட் மேனேஜ்மென்ட், சிங்கப்பூர் வரலாற்று ஆலோசகர்கள், தேசிய கலைகள் மன்றம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாகும் .
தேசிய கலைக் கழகத்தின் கலைக் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தக் கல்விச் சுற்றுப்பயணம் காத்தோங், காலாங் வட்டாரங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் சிற்பங்களுக்கும் இளையர்களை அழைத்துச் செல்லும்.
இதில் காத்தோங் நீச்சல் குளம் மரபுடைமைக் கலைக்கூடமும் சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் உள்ள ‘காலாங் கதை: விளையாட்டு, கலை, மரபுடைமைப் பாதை’யும் அடங்கும்.
இதுகுறித்து விவரித்த ஸ்போர்ட்எஸ்ஜி விளையாட்டுப் பாரம்பரிய உதவி இயக்குநர் தெரேசா குட்டன்சோன், “நமது விளையாட்டுக் கதை நமது தேசிய அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கம். ‘கலை, கோட்டை, விளையாட்டு’ நிகழ்ச்சியின் மூலம், நமது முன்னோர்களையும், அவர்கள் வடிவமைத்த இடங்களையும், அத்தருணங்களையும் கொண்டாடுகிறோம்,” என்று கூறினார்.
மேலும், “நமது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான வளமான தொடர்புகளைக் கண்டறியவும், இளையர்களுக்குத் தேசிய உணர்வைத் தொடர்ந்து ஊட்டவும், மீள்திறன், பெருமை, ஆர்வம் குறித்துச் சிந்திக்கவும் இத்திட்டம் உதவும் என நம்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
NAC-AEP பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்திற்கான கட்டணத்தில் பள்ளிகளுக்குச் சலுகை உண்டு.