சுதாஸகி ராமன்
எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்யும்போது மிகுந்த சத்தத்துடன் இசையைக் கேட்கும் பயணிகளை நாம் பார்த்திருப்போம். கைபேசிகள், இசை ஒலிக்கும் கருவிகள் போன்றவற்றில் மட்டுமின்றி இசை நிகழ்ச்சிகளிலும் மதுக்கூடங்களிலும் சத்தமாக இசை கேட்டு மகிழ்வது தற்போது இளையர்களிடையே அதிகரித்து வரும் போக்காக இருப்பது தெரியவந்துள்ளது. பயணம் செய்யும்போது, படிக்கும்போது, உடற்பயற்சி செய்யும்போது என்று பெரும்பாலான நேரங்களில் 'இயர்பீஸ்' எனப்படும் காது ஒலிப்பான் மூலம் சத்தமான இசையை இடைவிடாமல் கேட்கும் இளையர்கள் அதிகப்படியான சத்தத்தால் ஏற்படக்கூடிய காது கேளாமை பிரச்சினையால் பாதிப்படையும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
ஆறில் ஓர் இளையருக்கு இவ்வகை காது கேளாமை ஏற்படலாம் என்று ஈராண்டுகளுக்கு முன்பு தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் உயிர்மருத்துவப் பொறியியல் துறை மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டன. தெமாசெக் பலதுறைதொழிற் கல்லூரியைச் சேர்ந்த 1,928 மாணவர்களின் போக்கை ஆராய்ந்த இந்த ஆய்வு, பொதுவாக சிங்கப்பூர் இளையர்களின் இசை கேட்கும் போக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் சிங்கப்பூர் இளையர்களின் கேட்கும் போக்குகள் நாளடைவில் அவர்களுடைய காதுகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது செவிப்புலன் கருவி உற்பத்தியாளர்களான சிவாண்டோஸ் நிறுவனம். இத்தகைய காது கேளாமை பற்றிய விழிப்புணர்வு இளையர்களிடையே குறைந்து காணப்படுவது வருந்தத்தக்கது என்றார் அந்நிறுவனத்தின் மூத்த ஒலி நிபுணர் ஏப்ரில் சொங்.
விழிப்புணர்வு சாலைக்காட்சியில் இளையர் ஒருவர் தாம் பொதுவாகக் கேட்கும் ஒலியின் அளவையும் அதனால் காதுகளில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மாதிரிகள் மூலம் அறிந்துகொள்கிறார். உடனிருந்து உதவுபவர் நவீனா தியாகராஜன் (நடுவில்). படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் குழு

