நந்தினி அறிவுச்செல்வன்
நவீன உலகத்தில் இளையர்களுக்கு கைத்தொலைபேசி இன்றியமையாத ஒன்றாகி விட்டது. குறிப்பாக குறுஞ்செய்திகள் அனுப்பித் தகவல்கள் பரிமாறிக்கொள்வது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு இருக்கையில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அளவுக்கு அதிகமாகக் குறுஞ்செய்திகளை அனுப்புவதால் மாணவர் களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள் ளது. ஓய்வு நேரம் விடுத்து வகுப்பறை நேரம், தூங்கும் நேரம், சாப்பாட்டு நேரம் என எப்போதும் குறுந்தகவல் அனுப்பிய வண்ணம் உள்ளனர் மாணவர்கள். பலதுறைத் தொழில் கல்லூரி மாணவர் சாலே (17) உடனுக்குடன் பதில் அனுப்பாவிடில் ஒருவகையான சங்கடத் துக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டார். அளவுக்கு மீறி குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருப்பதால் பல பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என்கிறது ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் ஆய்வு.
உறங்கும் வேளையில் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதால் மாணவர்களின் தூக்கம் கெடுகிறது. மறுநாள் வகுப்பறையில் அவர் களால் பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாது. இது அவர்களின் மதிப்பெண்கள் குறைவதற்குக் காரணமாகி விடுகிறது. இதை ஆமோதித்த பல்கலைக்கழக மாணவி ஷபிரா பானு (24) குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தேர்வு சமயங் களில் வாட்ஸ்அப் செயலியை நீக்கிவிடுவதாகக் குறிப்பிட்டார். பாடம் நடந்துகொண்டிருக் கும்போது தமது கைபேசியின் தகவு (data) வசதியை நிறுத்தி விடுவதாகக் கூறினார் பலதுறைத் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் கவியரசன் ஜெயந்திரன், 19.

