முஹம்மது ஃபைரோஸ்
சுதந்திரம் பெற்று இரண்டாவது அரை நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ள சிங்கப்பூர் நடந்து செல்ல வேண்டிய அடுத்த 50 ஆண்டுப் பயணத்துக்கான பாதை, சந்திக்கவேண்டிய சவால்கள், எட்டவேண்டிய வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி இளையர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. 'தனித்துவம் வாய்ந்த சிங்கப்பூர்' எனும் கருப்பொருளை நோக்கிய பயணத்தில் 'தனித்துவம் வாய்ந்த அனைத்துலக நகரம்', 'அனைவருக்கும் சிறந்த இல்லம்', 'தோட்டத்தில் ஒரு நகரம்' போன்ற அம்சங்களை உள்ளடக்குவதில் தாங்கள் எந்தெந்த வகையில் பங்களிப்பது என்பது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையர்களின் முக்கிய சிந்தனையாக இருந்தது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 'கெண்ட் ரிட்ஜ்' அமைச்சர்நிலைக் கருத்தரங்கில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் மேற்கூறப்பட்ட விவகாரங்கள் குறித்து கிட்டத்தட்ட 170 மாணவர்கள் முன் வெளிப்படையாகப் பேசினார். பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் ஒருமணி நேரத்துக்குமேல் மாணவர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சளைக்காமல் பதிலளித்தார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள் (இடமிருந்து) திலீப் குமார், ஆர்.பிரசாந்தி, கன்னா அனீஷா மோனிஷ், நந்தினி ஆகியோருடன் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (வலக்கோடி) உரையாடினார். படம்: தேசிய வளர்ச்சி அமைச்சு

