சுதாஸகி ராமன்
புன்முறுவலுடன் 'ஹைஹீல்' காலணிகளில் அன்னநடைபோட்டு அழகு ராணி பட்டத்தை வெல்லும் கனவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளம் பெண்கள் 'நியூ ஃபேஸ்' அழகு ராணி போட்டியில் இவ்வாண்டு கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் 'தி நியூ பேப்பர்' செய்தித்தாளால் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் போட்டியில் பெரிய கனவுகளோடு இம்முறை கலந்துகொண்டவர்களில் 17 வயது ஹேமா சந்திராவும் ஒருவர். இம்மாதம் 2ஆம் தேதி மரினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் நடந்தேறிய இறுதிச் சுற்றில் 'நியூ ஃபேஸ்' பட்டத்தைப் பெறாவிட்டாலும் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 அழகிகளில் தாமும் ஒருவர் என்பதில் பெருமைகொள்கிறார் இவர்.
"பல ஆண்டுகள் 'மாடலிங்' அனுபவத்துடன் இப்போட்டியில் பங்கேற்றவர்களோடு அனுபவமே இல்லாவிட்டாலும் நான் துணிந்து போட்டியிட்டேன்," என்றார் ஹேமா. அழகிய முகம், கட்டான உடல் போன்ற அம்சங்களால் போட்டியில் வெற்றி பெற ஹேமாவிற்கு வாய்ப்பு உள்ளது என எண்ணிய அவருடைய தோழி கேயன், ஹேமாவை இந்தப்போட்டியில் கலந்துகொள்ளத் தூண்டினார். "என் தோழி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த என் புகைப்படத்தை நீதிபதிகள் கண்டு, தேர்வுச் சுற்றுகளில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர்," என்றார் ஹேமா. 'முயற்சி செய்துதான் பார்க்கலாமே' என்ற எண்ணத்தில் இந்தப் போட்டியின் தேர்வுச் சுற்றுகளில் பங்கேற்றதாகக் கூறினார் ஹேமா.
போட்டியில் பங்கேற்பாளர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், நளினமாக நடப்பது எப்படி என்று போட்டிக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள பயிலரங்குகள் நடத்தப் பட்டன. இவற்றில் கலந்துகொண்டு போட்டிக்குத் தயாரான ஹேமா, வீட்டிலும் ஒத்திகை பார்த்து வந்தார். பல முறை 'ஹைஹீல்' காலணிகளில் நடந்து பழ கியபோது அவருடைய தாயார் அளித்த குறிப்புகளும் அவருக்கு உதவின. பெற்றோர், நண்பர்கள் ஆகியோரின் ஆதரவோடு விடாமுயற்சியுடன் பயிற்சி செய்த அவருக்கு நாளடைவில் தன்னம்பிக்கை கூடியது. நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பை மேற்கொள்கிறார் ஹேமா.
ஜூன் மாதத்தில் ஆரம்பித்த 'நியூ ஃபேஸ்' அழகு ராணி போட்டிக்கான பயிலரங்குகள், ஒத்திகைகள் போன்றவற்றில் கலந்துகொண்டே தேர்வு களுக்கும் சிறந்த முறையில் தயாரானார் அவர். "என் தந்தையைப் போலவே வர்த்தகத் துறையில் எதிர்காலத்தில் பணியாற்ற ஆவலோடு இருக்கிறேன். இருப்பினும், 'மாடலிங்' துறையில் வாய்ப்புகள் கிடைத்தால் அவற்றையும் பயன்படுத்திக் கொள்வேன்," என்றார் ஹேமா.

