புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

1 mins read
bbf1dc6e-c99a-4131-8513-77a4d5ae75a6
-

ஒவ்வோர் ஆண்டும் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து புத்தாண்டைப் பெரிய அளவில் வரவேற்க, நகர மறுசீரமைப்பு ஆணையம் பல நிகழ்ச்சிகளைப் பல இடங்களில் ஏற்பாடு செய்துள்ளது. அவ்வரிசையில் நண்பர்கள், குடும்பத்தினருடன் 2018ஆம் ஆண்டைச் சிறப்பாக வரவேற்க கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம்.

மரினா பே மிதக்கும் மேடை

மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரை சிறப்பு 'பிக்னிக்', உணவுச் சந்தை அங்கு நடைபெறும். சிங்கப்பூர் ஆற்றை ரசித்தவாறு நள்ளிரவில் நடக்கவிருக்கும் வாணவேடிக்கையைப் பார்த்து ரசிக்கலாம். நுழைவுச்சீட்டு விவரங்களை www.marinabaycountdown.sg எனும் இணையத்தளத்தில் பார்க்கலாம்.

'புருடென்‌ஷியல்' மரினா பே கேளிக்கை விழா

மாலை 3 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரையில் திறந்திருக்கும் இந்த கேளிக்கை விழாவில் 40க்கும் மேற்பட்ட துடிப்பான, விறுவிறுப்பான விளையாட்டுகள் உள்ளன. அதன் அருகே உள்ள புரொமொன்டரி, பேஃபிரண்ட் திறந்தவெளி இடங்களில் உள்ளூர் கலைஞர்களின் மேடை இசை நிகழ்ச்சியும் இடம்பெறும். மேல் விவரங்கள் www.marinabaycarnival.sg எனும் இணையத்தளத்தில் உள்ளன.

ஃபுல்லர்டன் ஹோட்டல்

ஃபுல்லர்டன் ஹோட்டலின் வெளிப்புறத்தில் அதன் அஞ்சலக வரலாற்றை நினைவுகூரும் வகையில் இரவு 8 மணியிலிருந்து ஒளிக்கதிர் ஒளியூட்டு நடக்கும். பொதுமக்களின் புத்தாண்டு நல்வாழ்த்துகளும் அதில் ஒளிபரப்பாகும்.

உட்புற நடவடிக்கைகள்

உட்புற நடவடிக்கைகளை விரும்புவோர் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும் சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் அல்லது நள்ளிரவு வரை திறந்திருக்கும் ஆசிய நாகரிக அரும்பொருளகத்திற்குச் செல்லலாம்.

எஸ்பிளனேட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டம். படம்: எஸ்பிளனேட்